அதிமுகவில் இருந்து ஜெயலலிதா என்னை நீக்கியது நியாயம்தான். பழ.கருப்பையா
அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ள பழ.கருப்பையா இன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தவுடன் செய்தியாளர்களை சந்தித்த பழ.கருப்பையா ஜெயலலிதா அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது “நான் சட்டமன்ற உறுப்பினராக வருவதற்கு ஜெயலலிதாதான் காரணம். சட்டமன்ற உறுப்பினராக இருப்பது மரியாதைக்காக அல்ல. மக்களுக்காக சேவை செய்யவே சட்டமன்ற உறுப்பினர் பதவி. துக்ளக் விழாவில் இன்றைய அரசியல் நிலை குறித்து நான் பொதுவாகத்தான் பேசினேன். முதல்வர் ஜெயலலிதாவை பலமுறை சந்தி்க்க முயற்சி செய்தும் முடியவில்லை. கட்சியிலிருந்து நீக்கப்படும் அளவுக்கு நான் பெரிய தவறு ஏதும் செய்யவில்லை.
அதிமுகவில் இருந்து நீக்கியதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன். அரசியல் பற்றி பொதுவாக பேசியது முதல்வருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கும் என நினைக்கிறேன். முதல்வரின் அரசியல் பழக்கம் எனக்கு பொருந்தவில்லை.
எனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டேன். ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி விட்டேன். எனது ராஜினாமா கடிதத்தை வாங்க அவர் மறுக்கிறார். எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதே நெறி சார்ந்த அரசியல். தற்போதுள்ள கட்சித் தாவல் தடைச்சட்டம் துருப்பிடித்தது. ஆடு மாடுகளை மேய்ப்பது போல தொண்டரை மேய்ப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. மூன்றாயிரம் ஆண்டுகளாக இருந்த மலைகள் தற்போது மாயமாகிவிட்டது. முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் முறை எனக்கு பிடிக்கவில்லை. அதிமுகவில் இருந்து ஜெயலலிதா என்னை நீக்கியது நியாயம்தான்.
ஒரு எம்எல்ஏவாக நான் தோற்று போனேன். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. பணம்தான் மிகப்பெரிய சிபாரிசாக இருக்கிறது. சிபாரிசு செய்ய எம்எல்ஏ தேவையில்லை. பணமே அந்த சிபாரிசை செய்து விடும்” இவ்வாறு அவர் ஆளுங்கட்சியை குற்றம்சாட்டியுள்ளார்.