கோடை விடுமுறை சிறப்பு வகுப்புகள் தேவைதானா? ஒரு அலசல்

கோடை விடுமுறை சிறப்பு வகுப்புகள் தேவைதானா? ஒரு அலசல்
school
ஜூன் மாதம் முதல் மார்ச் மாதம் வரை பள்ளிக்கு சென்று கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை விடுமுறை விடப்படுவது ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக நடைபெறும் ஒரு முறை ஆகும். பத்து மாதம் தொடர்ந்து கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஓய்வு வேண்டும் என்பதற்காகவும், கடுமையான கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும் நமது முன்னோர்கள் கடைபிடித்த வழக்கம்தான் கோடை விடுமுறை.
ஆனால் தற்போது மார்ச் மாதம் பள்ளி முடிந்ததும் ஸ்பெஷல் கிளாஸ் என்று ஒருசில பள்ளிகள் கோடை விடுமுறையிலும் வகுப்புகள் நடத்துகின்றன. குறிப்பாக 9ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் அடுத்த வருடம் பொதுத்தேர்வு எழுத உள்ளதால் அவர்களுக்கு ஸ்பெஷல் வகுப்புகள் வைக்கும் நடைமுறையை கிட்டத்தட்ட தமிழகத்தின் அனைத்து பள்ளிகளுமே நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
கோடை வெயில் கடுமையாக இருந்தாலும் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவதில் கூட ஒரு அர்த்தம் இருக்கின்றது. ஆனால் சென்னை உள்ளிட்ட ஒருசில பெருநகரங்களில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் முதல் வகுப்பு முதல் படிக்கும் மாணவர்களுக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஐந்து வயதே ஆன குழந்தைகள் பள்ளிக்கு செல்வதே பெரிய விஷயமாக கருதப்படும் நிலையில் கோடை விடுமுறையிலும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது தேவையா? என்று பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கைகள் எழுந்துள்ளது.
சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த வருடம் வெயில் உச்சகட்டமாக இருக்கும் என்று வானிலை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக சென்னையில் 41 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் இதன் காரணமாக சென்னை உள்பட அனைத்து நகரங்களில் உள்ள பொதுமக்கள் முக்கிய அலுவல் இருந்தால் ஒழிய வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கும் நிலையில் சின்ன குழந்தைகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவது குழந்தைகளுக்கு மட்டுமின்றி அவர்களை அழைத்து செல்லும் பெற்றோர்களுக்கும் பெரும் அவதியை தருகிறது. 
பத்து மாதங்களில் கற்று கொடுக்காததை சில நாட்கள் சிறப்பு வகுப்பில் சொல்லி கொடுக்க முடியுமா? என்பதை சிறப்பு வகுப்புகள் வைப்பவர்கள் யோசிக்க வேண்டிய தருணம் இது. மேலும் இதுபோன்ற விடுமுறை நாட்களில்தான் மாணவர்கள் சைக்கிள் பழகுவது, நீச்சல் பழகுவது போன்றவற்றை பழகி வரும் நிலையில் சிறப்பு வகுப்புகள் நடத்துவது தேவையில்லாத ஒன்றாகவே பல பெற்றோர்கள் கருதுகின்றனர்.
ஸ்விம்மிங் போன்ற உடல் திறனை அதிகரிக்கும் பயிற்சிகள், செஸ் போன்ற மூளை திறனை அதிகரிக்கும் பயிற்சிகள் ஆகியவைகளை குழந்தைகள் கற்றுக்கொள்ளும் நேரம்தான் இந்த கோடை விடுமுறை. மேலும் நகரத்தில் வாழும் மாணவர்கள் தங்கள் சொந்த ஊரில் உள்ள தாத்தா, பாட்டி போன்ற சொந்தங்களை சந்திக்கும் காலமாகவும் கோடை விடுமுறை உள்ளது. இதற்கும் இடைஞ்சலாக இருக்கின்றது இந்த சிறப்பு வகுப்புகள்
எனவே நமது முன்னோர்கள் பழக்கி வைத்த கோடை விடுமுறையை மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு என்ற பெயரில் அவர்களை சித்ரவதை செய்யும் முயற்சியை சி.பி.எஸ்.இ பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளும் கைவிட வேண்டும் என்பதே பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கின்றது.

Leave a Reply