சத்து நிறைந்த முருங்கைப்பூ உணவு: முருங்கைப்பூ சாதம்

சத்து நிறைந்த முருங்கைப்பூ உணவு: முருங்கைப்பூ சாதம்

முருங்கை மரங்களில் இலைகளை மறைத்தபடி பூக்கள் பூத்துக் குலுங்கும் பருவம் இது. அந்தந்தப் பருவங்களில் விளைகிறவற்றை உணவாகக் கொள்வதுதான் நம் முன்னோர் வகுத்துவைத்திருக்கும் உணவு முறை. “மருத்துவக் குணமும் இரும்புச்சத்தும் நிறைந்த முருங்கைப்பூவைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், சளித்தொல்லை நீங்கும். வீட்டில் முருங்கை மரம் இல்லாதவர்கள் உழவர் சந்தைகளிலும் காய்கறிச் சந்தைகளிலும் வாங்கிப் பயன்படுத்தலாம்” என்று சொல்கிறார் திருப்பூரைச் சேர்ந்த சுசீலா ராமமூர்த்தி. முருங்கைப்பூவில் சமைக்கக்கூடிய உணவு வகைகளின் செய்முறையை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் அவர்.

முருங்கைப்பூ சாதம்

என்னென்ன தேவை?

பாசுமதி அரிசி – 200கிராம்

முருங்கைப்பூ – ஒரு கப்

வெங்காயம் – 2

குடைமிளகாய் – 1

பச்சை மிளகாய் – 2

மிளகுத் தூள், நெய் – ஒரு டீஸ்பூன்

கொத்தமல்லி – சிறிதளவு

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பாசுமதி அரிசியை உதிரியாக வடித்துக்கொள்ளுங்கள். அதில் சிறிது நெய் விட்டு உதிர்த்துக்கொள்ளுங்கள். முருங்கைப்பூவை இட்லி தட்டில் வைத்து அரை வேக்காடு வேகவையுங்கள். வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், நீளவாக்கில் வெட்டிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள். அதில் சாதம், முருங்கைப்பூ சேர்த்துப் புரட்டியெடுங்கள். அதனுடன் மெலிதாகச் சீவி வைத்துள்ள குடைமிளகாய், நறுக்கிய கொத்தமல்லி, மிளகுத் தூள் போட்டுக் கலக்கியெடுத்தால் சுவையான முருங்கைப்பூ சாதம் தயார்.

Leave a Reply