ஃபயர்ஃபாக்ஸ் பிரவுசரில் புதிய வசதி!

ஃபயர்ஃபாக்ஸ் பிரவுசரில் புதிய வசதி!

6ஃபயர்ஃபாக்ஸ் பிரவுசரில் புதிதாக‌ என்ன இருக்கிறது என ஆர்வத்துடன் இருப்பவர்களை உற்சாகம் கொள்ளச் செய்யும் வகையில் மொசில்லா அமைப்பு இரண்டு விஷயங்களைச் செய்திருக்கிறது.

முதல் விஷயம் ஃபயர்ஃபாக்ஸின் புதிய வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ‘ஃபயர்ஃபாக்ஸ் 48′ எனக் குறிப்பிடப்படும் இந்த வெர்ஷன், ‘எலக்ட்ராலிசிஸ்’ எனப்படும் நுட்பத்தைக் கொண்டிருக்கிறது. இது பிரவுசர் செயல்பாட்டின் வேகத்தை அதிகரிக்கச் செய்கிறது.

குரோம், ஓபரா உள்ளிட்ட பிரவுசர்களில் ஏற்கெனவே இந்தச் செயல்முறை இருக்கிறது. இப்போது ஃபயர்ஃபாக்ஸும் இணைந்திருக்கிறது.

இந்த மாற்றத்தை மிகவும் கவனமாக மேற்கொண்டுவருவதாக ஃபயர்ஃபாக்ஸ் பின்னே இருக்கும் மொசில்லா அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த வசதி முதல் கட்டமாக ஒரு சதவீதப் பயனாளிகள் மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டு, அவர்களின் கருத்துகளை அறிந்த பின் படிப்படியாக அறிமுகம் செய்யப்படும்.

ஃபயர்ஃபாக்ஸ் அறிமுகம் செய்துள்ள இன்னொரு வசதி இன்னும் சுவாரஸ்யமானது. ஃபயர்ஃபாக்ஸின் சோதனை வடிவமான ‘டெஸ்ட் பைலட்’ திட்டத்தின் கீழ் அறிமுகமாகியுள்ள இந்த வசதி, இணையத்தில் பார்க்கக் கூடிய பிழைச் செய்திகளை அர்த்தமுள்ளதாக மாற்றும் வகையில் அமைகிறது.

இணையத்தில் உலாவும்போது, 404 பிழைச் செய்தியை அடிக்கடி காண நேரலாம். இணையவாசிகள் அணுக விரும்பும் பக்கம், குறிப்பிட்ட அந்த இணையதளத்தின் வசம் இல்லை என்றாலோ அல்லது நீக்கப்பட்டிருந்தாலோ இந்தச் செய்தி பளிச்சிடும். இதன் பொருள், ‘பிரவுசர் மூலம் அந்த இணையப் பக்கம் அணுகப்பட்ட‌து, ஆனால் கோரப்பட்ட பக்கம் சர்வரில் இல்லை’ என்பதாகும்.

ஆர்வத்தோடு இணையதளங்களை நாடிச்செல்லும்போது பிழைச் செய்திகளை எதிர்கொண்டால் சோர்வாகத்தான் இருக்கும். இந்தப் பிழைச் செய்தி தோன்றும் வித‌த்தைக் கொஞ்சம் சுவாரஸ்யமானதாக ஆக்கும் முயற்சிகள் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. 404 பிழைச் செய்தியை இணையக் கலை வடிவமாக்கிய தளங்கள் எல்லாம் இருக்கின்றன. இப்போது ஃபயர்ஃபாகஸ் ஒரு படி மேலே சென்று, பிழைச் செய்தி தோன்றும் இணையப் பக்கங்களின் சேமிக்கப்பட்ட வடிவத்தைப் பார்க்கும் வசதியை அளிக்கிறது. இணையதளங்களின் முந்தைய வடிவங்களைச் சேமித்து வைக்கும் இணைய அருங்காட்சியமாக இருக்கும் ‘இன்டெர்நெட் ஆர்கைவ்’ எனப்படும் இணையக் காப்பகத்துடன் இணைந்து இந்த வசதியை ஃபயர்ஃபாக்ஸ் அளிக்கிறது.

இதன்படி, பிழைச் செய்தி தோன்றும் இணையப் பக்கங்களை எதிர்கொள்ளும் போது, இணையவாசிகள் அதன் சேமிக்கப்பட்ட பக்கத்தைப் பார்ப்பதற்கான வாய்ப்பு முன்வைக்கப்படும். அதை ஏற்றுக்கொண்டு ‘க்ளிக்’ செய்தால் இணையக் காப்பகத்திற்கு அழைத்துச்செல்லப்படுவார்கள். குறிப்பிட்ட அந்த இணையதளம் காப்பகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்தால் அதன் முந்தைய வடிவத்தைப் பார்க்கலாம். இதன் மூலம் இணையவாசிகள் தாங்கள் தேடிய பக்கத்தைப் பார்க்க முடியாமல் போகும் ஏமாற்றத்தைத் தவிர்க்கலாம்.

இணையக் காப்பகம், இணையத்தின் பெரும்பாலான தளங்களைப் பாதுகாத்து வைக்கும் மகத்தான திட்டமாக இருக்கிறது. இதில் இணையதளங்களின் பழைய வடிவங்களைப் பார்க்கலாம். பொதுவாக இந்தச் சேவையின் அருமையை உணர்ந்தவர்கள், தாங்கள் தேடும் இணையதளத்தின் பழைய வடிவத்தைப் பார்க்க இதைப் பயன்படுத்துவதுண்டு.

ஃபயர்ஃபாக்ஸ் பிரவுசரிலிருந்தே இந்தத் தளத்தை அணுகும் வசதியை அறிமுகம் செய்கிறது. மிகப் பொருத்தமாகப் பிழைச் செய்திகளுடன் இதை இணைத்துள்ளது. ஆய்வு நோக்கில் இணையதளங்களை அணுகுபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஆனால் இந்த வசதி சோதனை முறையில்தான் வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்திப் பார்க்க விரும்புகிறவர்கள், ‘டெஸ்ட் பைலட்’ இணையதளத்திலிருந்து இதற்கான ‘ஆட் ஆன்’ வசதியைத் தரவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இது தவிர ஃபயர்ஃபாக்ஸ் மூலம் தேடியந்திரங்களில் தேடும்போது, கூடுதல் பரிந்துரைகளைக் காண்பித்துத் தேடலை மேம்படுத்தும் வசதியும் இடம்பெற்றுள்ளது. சோதனை வடிவத்தைத் தரவிறக்கம் செய்பவர்கள் தங்கள் அனுபவம் மற்றும் எதிர்வினைகளையும் ஃபயர்ஃபாக்ஸுக்குத் தெரிவித்து அதை மேம்படுத்த உதவலாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply