ஃபேஸ்புக், ட்விட்டர், ஜியோ, அமேசான்..ஐ.பி.எல் டிஜிட்டல் உரிமைக்கு கடும் போட்டி!

ஃபேஸ்புக், ட்விட்டர், ஜியோ, அமேசான்..ஐ.பி.எல் டிஜிட்டல் உரிமைக்கு கடும் போட்டி!

1உலகின் முன்னணி கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல் போட்டிகளை தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பி வரும், சோனி நிறுவனத்தின் ஒப்பந்த காலம் அடுத்த ஆண்டுடன் முடிகிறது. எனவே அதற்கடுத்த ஆண்டுகளுக்கான ஒளிபரப்பும் உரிமை யாருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டுவிட்டன. மொத்தம் 18 முன்னணி நிறுவனங்கள் இந்த உரிமைக்காக போட்டியிடுகின்றன. இந்த ஒளிபரப்பும் உரிமைக்கான ஒப்பந்தங்கள் வரும் 25-ம் தேதி பெறப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.

இத்துடன் இந்த ஆண்டு பலரது கவனத்தை ஈர்த்திருப்பது டிஜிட்டல் உரிமை எனப்படும் ஆன்லைன் ஒளிபரப்பும் உரிமைதான். தற்போது இந்த டிஜிட்டல் உரிமையை ஸ்டார் இந்தியா நிறுவனம்தான் வைத்துள்ளது. இந்த உரிமைக்கான காலமும், அடுத்த ஆண்டுடன் முடிகிறது. எனவே இந்த உரிமையையும் கைப்பற்ற, கடும் போட்டி நிலவுகிறது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் உரிமை 2018 முதல் 2027 வரையிலும், இணையத்தில் ஒளிபரப்பும் உரிமை 2018 முதல் 2022 வரையிலும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும். அதாவது டிவி உரிமை 10 ஆண்டுகளுக்கும், ஆன்லைன் டிஜிட்டல் உரிமை 5 ஆண்டுகளுக்கும் வழங்கப்படும். “ஆன்லைன் ட்ரெண்ட் அடிக்கடி மாறுவதால், இதன் காலம் 5 ஆண்டுகளாகவும், தொலைக்காட்சிக்கான வரவேற்பு அதிகமாக இருப்பதால் அதற்கான ஒப்பந்த காலம் 10 ஆண்டுகளாகவும் இருக்கிறது” என்கிறார் பி.சி.சி.ஐ நிர்வாகி ராகுல் ஜோரி.

டிஜிட்டல் உரிமை யாருக்கு?

டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் நிறுவனம் வைத்திருந்ததால், இதுவரை ஹாட்ஸ்டார் மூலமாக அந்நிறுவனம் ஒளிபரப்பி வந்தது. இதற்கான ஒப்பந்த காலம் அடுத்த ஆண்டுடன் முடிவடைகிறது. மேலும் இந்த உரிமையை கைப்பற்ற ஜியோ, ஃபேஸ்புக், ட்விட்டர், அமேசான் போன்ற நிறுவனங்களும் தற்போது போட்டியிடுகின்றன. இதனால் இதற்கான போட்டி வலுவாக இருக்கிறது.

ஏற்கெனவே விளையாட்டு தொடர்பான பல போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளை ஃபேஸ்புக் நேரலையாக ஒளிபரப்பியுள்ளது. அதேபோல ட்விட்டரிலும் கிரிக்கெட்டுக்கு மகத்தான வரவேற்பு இருக்கிறது. இந்த ஆண்டு நடந்த T-20 உலகக்கோப்பை நடந்த சமயம் மட்டும் சுமார் 5.75 பில்லியன் ட்வீட்கள், அதுதொடர்பாக குவிந்துள்ளன. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டி சமயம் மட்டும் மொத்தம் 10.6 மில்லியன் ட்வீட்கள் பதிவாகியுள்ளன. இது முந்தைய வருடத்தை விட 56% அதிகம். எனவே கிரிக்கெட் ரசிகர்களை கட்டிப்போட ட்விட்டரும் முயற்சி செய்கிறது.

போட்டியிடும் நிறுவனங்கள்..

அதேபோல அமேசான் இந்தியா நிறுவனமும் தனது நேரலை ஒளிபரப்புக்கான சேவையை துவங்க இருக்கிறது. இதனால் அதற்கும் இந்த வாய்ப்பு முக்கியமாக இருக்கிறது. இந்த நிறுவனங்களுடன் ஜியோ நிறுவனமும் இந்த ஆண்டு கவனிக்கத்தக்க போட்டியாளராக இருக்கிறது. ஜியோ டிவி சேவை மூலமாக நேரடி ஒளிபரப்புக்கு அந்நிறுவனம் தயார். அதனை ரசிகர்களிடம் பிரபலப்படுத்த இந்த வாய்ப்பு உதவும். எனவே டிவி உரிமையை விடவும் இந்த ஆண்டு, டிஜிட்டல் உரிமையை யார் கைப்பற்றுவார் என்பதே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான விடை 25-ம் தேதி தெரிந்துவிடும்.

Leave a Reply