ஃபேஸ்புக் தடையை விரைவில் சீனா நீக்கும். கம்யூனிஸ்ட் தலைவர் லியூ யுன்சான் உறுதி
சீனத்தலைநகர் பீஜிங் நகரில் சமீபத்தில் இண்டர்நெட் பற்றி அதிகம் விவாதிக்கும் சீன வளர்ச்சி பேரவையின் ஆண்டுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேஸ்புக் அதிபர் மார்க் ஜுக்கர்பெர்க் கலந்து கொண்டார். சீனாவில் ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகிய இரண்டு சமூக வலைத்தளங்களும் தடை செய்யப்பட்டிருந்தும் இந்த கூட்டத்தில் ஃபேஸ்புக் அதிபர் கலந்து கொண்டது அனைவரையும் ஆச்சரியத்தை அளித்தது.
இந்த கூட்டத்தில் பேசிய ஆளும் கம்யூனிஸ்டு கட்சியின் நிலைக்குழு தலைவர் லியூ யுன்சான் “இண்டர்நெட் என்பது எல்லா நாட்டு மக்களுக்கும் பொதுவானது. எதிர்காலத்தை பகிர்ந்து கொள்ளும் உரிமையை எல்லா மக்களுக்கும் வழங்க வேண்டிய பொறுப்பு சர்வதேச நாடுகளுக்கு உண்டு. சீனாவின் சித்தாந்தங்களுக்கு ஏற்ப இண்டர்நெட்டை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது பேஸ்புக் நவீன தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு வசதிகளுடன் உள்ளதால் சீன இண்டர்நெட் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட விரைவில் வழிபிறக்கும்’ என்று கூறினார்.
முன்னதாக லியூ யுன்சான் அவர்களுடன் தனித்து உரையாடிய மார்க் ஜூக்கர்பர்க் பேஸ்புக்கிற்கு சீன அரசு விதித்துள்ள தடையை நீக்குமாறு கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை பரிவுடன் தான் அணுகுவதாக லியூ யுன்சான் உறுதியளித்துள்ளார். மேலும் பேஸ்புக் அதிபர் மார்க் ஜுக்கர்பர்க்கின் மனைவி பிசிலியா சான், சீனாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.