ஃப்ராடு அனலிஸ்ட் வேலை என்றால் என்ன என்பது தெரியுமா?
ஃப்ராடு அனலிஸ்ட் அலைஸ் மோசடி ஆய்வாளர் வேலையின் சாராம்சம் என்ன தெரியுமா? வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் இருக்கும் வாடிக்கையாளர்களின் பணத்தை தொழில்நுட்பத்தின் துணை கொண்டு ஆட்டையாம் போடுவதற்கென்றே சில வில்லங்கத் திருடர்கள் உலவிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை அடையாளம் காண்பதோடு, திருட்டுப் போயிருந்தால் அந்தத் திருட்டு குறித்து வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் சார்பாக விசாரித்து அந்தப் பிரச்னைகளைக் கையாளக்கூடிய வேலையைச் செய்யக்கூடியவர்களை ஃப்ராடு அனலிஸ்ட் என்கிறார்கள். இவர்களது வேலை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு எண்ணில் நடைபெறும் பணப் பரிவர்த்தனைகளைத் தொடர்ந்து கண்காணித்து சந்தேகத்துக்குரிய பணப்பரிவர்த்தனைகள் நடந்தால் உடனுக்குடன் கண்டறிந்து வங்கிக்கும், வாடிக்கையாளர்களுக்கும் நஷ்டமின்றி அந்த விவகாரத்தை முடித்து வைப்பதும் பணப்பரிவர்த்தனை விவகாரங்களில் தற்போது அதிகமாகி வரும் தொழில்நுட்பத்தின் துணை கொண்ட பணத் திருட்டுகளை கட்டுப்படுத்துவதுமே இவர்களது வேலை.
ஒரு ஃப்ராடு அனலிஸ்ட் என்ன செய்வார்?
ஒரு மோசடி ஆய்வாளர் பல்வேறு வாடிக்கையாளர்களின் பணப் பரிவர்த்தனைகளைக் கவனிப்பதற்கான பொறுப்புள்ள வேலையில் இருப்பார். எனவே சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை அவரால் எளிதில்அடையாளம் காட்ட முடியும். பெரும்பாலான வங்கிக்கணக்குகள் மற்றும் அதன் வாடிக்கையாளர்கள் நீண்ட கால அடிப்படையில் மாறாத வங்கி நடைமுறைகளைக் கையாள்வார்கள். அப்படி இருக்கையில் எதிர்பார்த்த நடவடிக்கைகளுக்கு பொருந்தாத ஏதேனும் பணப் பரிவர்த்தனைகள் அல்லது பாஸ் வேர்டு பரிமாற்றங்கள் தென்பட்டால் அவற்றை ஃபிராடு அனலிஸ்டால் கண்டறிய முடியும்.
சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் கண்டுபிடிக்கப்பட்டால், மோசடி ஆய்வாளர் அந்தக் குறிப்பிட்ட வங்கிக் கணக்கு எண்களைக் கட்டம் கட்டி அதை சரிபார்க்கத் தொடங்குவார். சரிபார்த்து முடிக்கும் வரை அந்தக் குறிப்பிட்ட வங்கிக் கணக்கு எண்ணின் பயன்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். பரிவர்த்தனைகள் சந்தேகத்திற்குரிய எந்தவொரு காரணத்திற்காகவும் சோதனைக்கு உட்படுத்தப்படலாம். வங்கியின் நற்பெயருக்கும், வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் பணப்பரிவர்த்தனை வகை, பரிவர்த்தனை அளவு, கூட்டுக்கணக்கு இருக்கும் பட்சத்தில் சாத்தியமான பங்காளர்களிடம் திடீரெனக் கண்டறியப்படும் அசாதாரண மாற்றங்கள், பரிவர்த்தனைகள் உருவான இடங்களில் அல்லது கணக்கில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விதிக்கு அப்பால் செயல்படத் தூண்டுதல் போன்ற உறுதியான காரணங்களுக்காக வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்குகள் ஃப்ராடு அனலிஸ்டுகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஆராயப் படலாம்.
ஃப்ராடு அனலிஸ்ட் எங்கே பணியமர்த்தப்படுவார்?
வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் அல்லது பிராந்திய தலைமை அலுவலகங்களில் இவர்கள் இருப்பார்கள். அப்படியான இடங்களில் இவர்களைப் பணியமர்த்தினால் தான் சாமர்த்திய மோசடிகளை ஒரே இடத்தில் கிடைக்கக் கூடிய பல்வேறு தரவுகளின் அடிப்படையில் அவர்களால் எளிதில் கண்டறிய முடியும். தலைமை அலுவலகங்களில் மட்டுமே வாடிக்கையாளர்களின் மொத்தச் சான்றுகளும் பாதுகாக்கப்படும் என்பதால் தேவையான தகவல்களை உடனுக்குடன் பெற இம்மாதிரியான தலைமை அலுவலகங்களில் தான் இவர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.