அக்ஷய திருதியைக்கு நகை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
அக்ஷய திருதியை அம்சமான நாள். நினைக்கும் போதே மனசுக்குள் தங்கத்தின் ஜொலிப்பை உணரலாம். அக்ஷய திருதியை அன்று எந்தப் பொருளை வாங்கிச் சேர்த்தாலும் அது ஆண்டு முழுவதும் பல்கிப் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை. நாம் விலை உயர்ந்ததாக காலம் காலமாக போற்றிப் பாதுகாக்கும் பொன்னான விஷயம் தங்கம், வைரம் ஆகியவை. செல்வம் கொழிக்கச் செய்யும் தங்கம் மற்றும் வைரத்தால் ஆன நகைகளை அக்ஷய திருதியை அன்று வாங்கிச் சேர்க்க வேண்டும் என பெண்கள் விரும்புவது இயல்பான ஒன்று.
பெண்களின் இந்தப் பேராவலை மனதில் கொண்டு அக்ஷய திருதியைக்கு சிறிய நகைக்கடை முதல் பிராண்டட் ஜூவல்லரி வரை புதிய விற்பனைத் திட்டங்களை முன் வைக்கின்றனர். அக்ஷய திருதியை அன்று தங்கம் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விளக்கம் அளிக்கிறார் ஈரோடு ஜெம் அண்டு ஜூவல்லரி டெக்னாலஜி டிரெயினிங் சென்டரின் இயக்குனர் சுவாமிநாதன்.
* அக்ஷய திருதியை அன்று தங்கம் வாங்கியே ஆக வேண்டும் என்று பட்ஜெட் போடுபவர்கள் 100 மில்லி முதல் 1 கிராம் வரையில் கோல்டு காயினாக வாங்கு வதைத் தவிர்க்கலாம். இவ்வளவு குறைவான எடையிலான கோல்டுகாயின்களில் தரம் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது.
* 2 கிராம் அளவில் மோதிரம், மூக்குத்தி, காதணி போன்ற லயிட் வெயிட் நகைகளாக வாங்குவதையும் தவிர்ப்பது நல்லது. அவற்றிலும் தரம் பின்பற்றப்படுவதில்லை.
* தங்க நகைகளை தேர்வு செய்யும் போது அதிகம் கல் வைத்த நகைகள் வாங்குவதைத் தவிர்க்கலாம். இதனால் வாங்கும் போதும் விற்கும் போதும் கற்களுக்காக அதிகபட்ச பணமதிப்பை இழக்க நேரிடும்.
* வைர நகைகள் வாங்கும் போது ஐ.ஜி.ஐ., மற்றும் ஜி.ஐ.ஏ., (ஜெம்மாலஜிக்கல் இன்ஸ்டியூட் ஆப் அமெரிக்கா) சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளதா என்பதை பார்த்து வாங்க வேண்டும். வைரத்துக்கான தரத்தை இவர்களே அங்கீகாரம் செய்கின்றனர். சில நகைகக்கடைகள் அவரவர் சொந்த லேபில் பிரிண்ட் செய்யப்பட்ட சான்றிதழை இணைப்பதுண்டு. நகைக்கடைகள் கொடுக்கும் இது போன்ற சொந்த சான்றிதழை நம்பி வாங்க வேண்டாம். அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களிடம் வைரத்துக்கு தரச்சான்று பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு சான்று பெற்ற வைர நகைகளை மட்டுமே வாங்குங்கள்.
* நகை வாங்கும் போது கண்டிப்பாக பில்லை கேட்டு வாங்குங்கள். நகைக்கான விலையை குறைத்து வாங்குவதற்காக சிலர் பில் இல்லாமல் வாங்குவதுண்டு. பில்லே இல்லாமல் வாங்கும் நகைகளில் குறைகள் இருப்பது கண்டறியப்பட்டால் அதற்கான இழப்பீட்டை திரும்பப் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம். நகை வாங்கும் போது கண்டிப்பாக பில்லோடு வாங்குங்கள்.
* நகைகள் வாங்கும் போது ஒரு சில கடைகள் கூலி, சேதாரம் இல்லை என்று அறிவிக்கின்றன. இப்படி அறிவிக்கப்படும் நகைகளின் தரம் குறைந்திருக்க வாய்ப்புள்ளது. கூலி சேதாரம் இன்றி வழங்குவதாக சொல்லப்படும் நகைகளையும் தவிர்க்கலாம்.
* ஒரு சில நகைக் கடைகள் அக்ஷய திருதியை நகை விற்பனையின் போது கவர்ச்சிகரமான பரிசுப் பொருட்களை அறிவிக்கின்றனர். அதற்கான விலையும் ஒன்றாக இருக்கும் போது விலையை குறைத்துக் கொடுக்க வாய்ப்பில்லை. தங்கத்துடன் கூடுதலாக பரிசுப்பொருட்களை கொடுக்கிறார்கள் என்றால் அவர்கள் தரத்தில் கை வைத்திருக்கலாம்.. அல்லது விலை அதிகமாக இருக்கலாம். இவற்றை கவனத்தில் கொண்டு நகைக்கடைகளைதேர்வு செய்ய வேண்டும்.
* தங்க நகைகளில் பி.ஐ.எஸ்.ஹால் மார்க் முத்திரை உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும். தற்பொழுது தரத்தை குறிக்கும் வகையில் நான்கு வகையான முத்திரைகள் வழங்கப்படுகிறது. இந்த முத்திரைகளை பி.ஐ.எஸ். இணையத்தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இந்த முத்திரைகள் நீங்கள் வாங்கும் தங்க நகைகளிலும் இருக்க வேண்டும்.
* அக்ஷய திருதியை நகை வாங்குவதற்காக முன்பதிவு செய்திருந்தாலும் மக்கள் கூட்டத்தை பொருட்படுத்தாமல் நாம் கொடுக்கும் பணமதிப்புக்கு ஏற்ற தரமான நகைதானா என்பதை உறுதி செய்து கொண்ட பின்னரே வாங்க வேண்டும்.