அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்குகிறீர்களா?

அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்குகிறீர்களா?
house
எங்கெங்கோ சுற்றிவிட்டு வந்தாலும் வீட்டுக்குள் தலை சாய்த்தால் போதும், மனம் அமைதியாகிவிடும் பலருக்கும். அது பாதுகாக்கும் அரண் மட்டுமல்ல. நமக்கு மன நிம்மதியளிக்கும் மடி. சென்னை அல்லாத சிறு நகரங்களில் நம் விருப்பப்படி கொஞ்சம் செடிகொடிகள் வைக்கும் அளவு இடம் வாங்கி வீடு கட்டலாம்.

ஆனால் சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகளே சாத்தியம். கோவையில்கூட நகரின் மையப் பகுதி அல்லாது புறநகரில் இடம் வாங்கி வீடு கட்டக்கூடிய வகையில் சந்தை நிலவரம் உள்ளது. சென்னையில் நடுத்தர வர்க்கத்து மக்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்பே சாத்தியமாக இருக்கிறது.

சென்னை போன்ற நகரங்களில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு வாங்கிவிட்டாலே போதும். இந்நிலையில் அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு வாங்கும்போது சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

வீடு வாங்கத் தயாராகும்போது பல கட்டுமான நிறுவனங்கள் கண்ணில் படும். பலவகையான தரப்புகளிலிருந்தும் வீடு தொடர்பான தகவல்கள் வந்து மூழ்கடிக்கும். இதிலிருந்து ஒரு சரியான கட்டுமான நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து நமக்கான வீட்டை வாங்கியாக வேண்டும்.

அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்கும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நுகர்வோரான நமக்கு அதிக விவரங்கள் தெரிந்தபோதும் இன்னும் ஏமாந்துகொண்டிருக்கிறோம் என்பது கேலிக்குரியதுதான். எனினும் அதுதான் உண்மை.

கட்டுமான நிறுவனங்கள் தரும் பொய்யான வாக்குறுதிகளை நம்பிவிடுகிறோம். ஒரு கட்டுமான நிறுவனம் வீட்டுத் திட்டத்துக்கான பணத்தை மொத்தமாக வாங்கிக்கொண்டு வீடு தயாராகும் வரை உங்களுக்கு வட்டி தருகிறோம் என்று சொல்லக்கூடும்.

அதை வேதவாக்காக எடுத்துக்கொண்டால் நம் கதி அதோ கதிதான். அவர்கள் தரும் செக் வங்கியிலிருந்து அசுர வேகத்தில் திரும்பி வந்துவிடலாம். எனவே இது போன்ற விஷயத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது.

வீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் பகுதி நகரிலிருந்து சிறிது தொலைவில் தான் உள்ளது. ஆகவே வீடு தயாரான உடன் நீங்கள் குடியிருக்க விரும்பாவிட்டாலும் பரவாயில்லை, அதை வாடகைக்கு விட்டுச் சம்பாதிக்கலாம். அதை வைத்தே நீங்கள் வீட்டுக் கடனை அடைத்துவிடலாம் என்றெல்லாம் சொல்வார்கள்.

ஆனால் வீடு தயாரான பின்னர் வீட்டை வாடகைக்கு விடுவதற்கு முன்னர் நமது தொண்டைத் தண்ணி வற்றிவிடும். ஒரு ஈ காக்காகூட வராது என்பதைப் பின்னர் அறிவதைவிட முன்னர் உணர்ந்துகொள்வது நல்லது.

போலி ஆவணங்கள் உதவியுடன் பிரச்சினைக்குரிய இடங்களை உங்களிடம் விற்றுவிடலாம். வில்லங்கமான இடங்களில் வீட்டைக் கட்டிவிட்டு அதை உங்கள் தலையில் கட்டிவிட முயல்வார்கள். சுதாரிப்பாக இல்லை என்றால் நமது பணம் அவ்வளவுதான். கடலில் கரைத்த பெருங்காயமாகப் போய்விடும்.

வீட்டை வாங்கிய பின்னர் ஆவணங்கள் பொய்யானவை என்று தெரியும்போது வீட்டைக் கட்டித் தந்தவர் காணாமல் போய்விடுவார். எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தகுந்த சட்ட உதவி பெற்று ஆவணங்களைச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

அதேபோல் காலதாமதம் என்பதும் ரியல் எஸ்டேட் துறையைச் சீரழிக்கும் மற்றொரு சிக்கல். ஆனாலும் இந்தச் சீரழிவும் நிலவிவருகிறது என்பதை மறுக்க முடியாது. குறிப்பிட்ட காலத்தில் முடித்துத் தந்துவிடுவோம் என்று தேதி குறிப்பிட்டு ஒப்பந்தம் போட்ட நிலையிலும் சொன்னபடி வீட்டை முடித்துத் தராமல் இழுத்தடிப்பார்கள். இந்த மாதிரி எல்லாம் நடந்துகொள்ளாத கட்டுமான நிறுவனங்களையும் தேடிக் கண்டுபிடித்தால் தப்பித்துவிடலாம்.

அதே போல் வீட்டின் வரைபடத்தில் இருக்கும் வசதிகளில் சிலவற்றைச் செய்யாமலே விட்டுவிடுவார்கள். உதாரணமாகச் சமையலறையில் பொருள்களை வைக்கத் தேவையான அலமாரிகளைச் செய்துதருவதாக உறுதியளித்திருப்பார்கள்.

ஆனால் வீடு முடிவடைந்த பின்னர் இந்த வேலை முடிக்கப்படாமல் இருக்கும். கேட்டால் கண்டிப்பாக முடித்துத் தருவதாகச் சொல்வார்கள். ஆனால் வேலை நடக்கவே நடக்காது. மேலும் நல்ல தண்ணீர் இணைப்பு, மின்சார இணைப்பு போன்றவற்றுக்கான அனுமதி பெறும் விஷயமும் கவனத்தில்கொள்ள வேண்டியவை.

வீடு வாங்கும்போது நிதானமாக யோசித்து, வாங்க வேண்டும். திருபதி அளிக்கும் வகையில் இருந்தால் மட்டுமே வாங்க வேண்டும். மேலும் அவர்களது ஒப்பந்தத்தை வாங்கிச் சந்தேகங்களை நிவர்திசெய்துகொள்ள வேண்டும். இரண்டு மனதாக வீட்டை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

Leave a Reply