அடுத்த வாரம் எல்லையை மூடி விடுவேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல்
மெக்சிகோ நாட்டில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் மக்கள் ஊடுருவி வருவது தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி சமீபத்தில் தனது டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார்.
அதில், “நமது நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைகிறவர்களை தடுத்து நிறுத்துவதற்கு மெக்சிகோ எதையும் செய்வதில்லை. அவர்கள் பேசத்தான் செய்கிறார்களே தவிர செயலில் காட்டுவதில்லை. ஹோண்டுராஸ், கவுதமாலா, எல் சல்வேடார் நாடுகளைச் சேர்ந்தவர்கள் நமது பணத்தை பல்லாண்டு காலமாக எடுத்துச்செல்கின்றனர். தெற்கு எல்லையை மூடி விட எண்ணுகிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.
டிரம்ப் மேலும் டுவீட்டில் “சட்ட விரோதமாக குடியேற வருகிற அனைவரையும் மெக்சிகோ உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். அப்படி செய்யாவிட்டால், அடுத்த வாரம் எல்லையை மூடி விடுவேன் அல்லது எல்லையின் பெரும்பகுதியை மூடி விடுவேன்” என கூறி உள்ளார்.