அண்ணாமலைப் பல்கலை.யில் மீன்வள அறிவியல், பி.பார்ம். படிப்புகளுக்கு ஆகஸ்ட் 4,5-இல் கலந்தாய்வு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை மீன்வள அறிவியல் (பி.எப்.எஸ்ஸி.,) மருந்தாக்கியல் பட்டயப் படிப்புக்கு (டி.பார்ம்.,), மருந்தாக்கியல் நிறைஞர் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 4ஆம் தேதி நடைபெறுகிறது.
மருந்தாக்கியல் பட்டப்படிப்பு (பி.பார்ம்.,) இளநிலை தொழில்முறை சிகிச்சை (பி.ஓ.டி.), இளநிலை இயற்பியல் சிகிச்சை (பி.பி.டி.), செவிலியர் பட்டய படிப்புகளுக்கு வருகிற 5ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது.
கலந்தாய்வு அட்டவணை, அனுமதிக் கடிதத்தை தகுதியுள்ள மாணவர்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கலந்தாய்வில் பங்கேற்கலாம். குறுந்தகவல் மூலமாகவும் தகவல் அனுப்பப்படும். மாணவர்களுக்கு தனியாக கலந்தாய்வு கடிதம் அனுப்பப்படமாட்டாது.
கூடுதல் விவரங்களுக்கு பல்கலைக்கழக இணைய தள முகவரியை (www.annamalaiuniversity.ac.in) காணலாம். மேலும், admission2016@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், உதவி மைய தொலைபேசி எண்களிலும் (04144-238348 மற்றும் 238349) தகவல்களைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.