அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
தமிழகத்தில் கடையடைப்பு, முழு அடைப்புப் போராட்டங்களைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தின் 2018 ஏப்ரல்-மே பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 15-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், அங்கு தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை தொடர்வதால், அந்தப் பகுதி பொறியியல் மாணவர்கள் தேர்வு எழுத முடியாத சூழல் உருவாகியுள்ளது.
மேலும், துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் வணிகர் சங்கத்தினர் சார்பில் வியாழக்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என பல்வேறு அமைப்புகள் அறிவித்துள்ளன.
இதன் காரணமாக வெள்ளி, சனி மற்றும் திங்கள்கிழமை ஆகிய மூன்று தேதிகளில் நடத்தப்பட இருந்த பருவத் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது. இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு:
எதிர்பாராத சூழ்நிலை காரணமாக, மே 25, 26 மற்றும் 28-ஆம் தேதிகளில் நடத்தப்பட இருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. தேர்வு கால அட்டவணைப்படி, மே 29 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் நடக்க இருக்கும் தேர்வுகள் வழக்கம்போல நடைபெறும். ஒத்திவைக்கப்படும் மே 25-ஆம் தேதி தேர்வுகள் ஜூன் 5-ஆம் தேதியன்றும், மே 26-ஆம் தேதி நடத்தப்பட இருந்த தேர்வுகள் ஜூன் 6 ஆம் தேதியன்றும், மே 28-ஆம் தேதி நடத்த இருந்த தேர்வுகள் ஜூன் 7-ஆம் தேதியும் நடத்தப்படும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.