அதிகாரத்தையும் பொதுவில் வைப்போம்!

அதிகாரத்தையும் பொதுவில் வைப்போம்!

17
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு குறித்து இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் பேசிக்கொண்டிருப்போமோ என்ற அயர்ச்சி அதிகரித்திருக்கும் வேளையில், உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு ஐம்பது சதவீத இடஒதுக்கீட்டை அறிவித்திருக்கிறது தமிழக அரசு. ஆண்டாண்டு காலமாக ஆண்களே ஆண்டுவரும் அரசியலில்,

அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் பெண்களின் பங்களிப்பைப் பார்க்க முடிகிறது. அதுவும் அரசியல் பின்புலம், பணபலம் இல்லாதவர்களின் முகங்களைப் பார்ப்பது அரிதினும் அரிது. பொதுப் பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கே அரசியல் என்பது எட்டாக்கனியாக இருக்கும்போது, ஒடுக்கப்பட்ட பெண்களைப் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இப்படியான சூழலில்தான் இடஒதுக்கீடுகளும் தனித் தொகுதிகளும் பெண்களின் பங்களிப்பை உறுதிசெய்கின்றன.

யார் கையில் அதிகாரம்?

ஒதுக்கீட்டின் மூலம் பதவிகள் கிடைத்தாலும், உண்மையான அதிகாரம் பெண்களுக்குக் கிடைக்கிறதா என்பது நம் சூழலில் முக்கியமான கேள்வி. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெறுகிற பெண்கள், உண்மையிலேயே ஆட்சி நடத்துகிறார்களா?

இந்தக் கேள்விகளுக்கு நிச்சயம் நேர்மறையான பதிலை எதிர்பார்க்க முடியாது. பெரும்பாலான இடங்களில் பெண்களின் பெயரால், அவர்களது வீட்டைச் சேர்ந்த ஆண்களே அதிகாரத்தை பிரயோகிக்கிறார்கள். அந்த இடங்களில் பெண்களின் பங்களிப்பு என்பது கோப்புகளில் கையெழுத்து போடுவதுடன் முடிந்துவிடுகிறது. ஊராட்சி மன்றத் தலைவியாகப் பெண்கள் இருந்தாலும், அவர்கள் வீட்டு ஆண்தான் தலைவர் என்று மரியாதையுடன் அழைக்கப்படுகிறார்.

படிக்காத பெண்கள் என்றில்லை, படித்த பெண்களின் நிலையும் இதுதான். தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் பதவியையும் பொறுப்பையும் கணவன் அல்லது சகோதரனிடம் ஒப்படைத்துவிட்டு, அவர்களுடைய கைப்பாவைகளாகவே மாறிவிடுகின்றனர். “எங்க வார்டுல பெண் கவுன்சிலர்தான்.

ஆனா அவங்க வீட்டுக்காரர்தான் கவுன்சிலர் மாதிரி எல்லா வேலைக்கும் வருவாரு. மன்ற கூட்டத்துக்கு மட்டும்தான் அவங்க போவாங்க போலருக்கு” என்கிறார் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வாசகி தமிழ்ச்செல்வி.

கிட்டத்தட்ட பல இடங்களிலும் இதே நிலைதான். இதற்குப் பெண்களைக் குற்றம்சொல்லி எந்தப் பயனும் இல்லை. அவர்களுடைய வீட்டு ஆண்களின் ஆதிக்கம், எல்லாவற்றையும் தீர்மானித்துவிடுகிறது. பெண்களுக்கு நிர்வாகத் திறமை போதாது என்ற சப்பைக்கட்டும், காலங்காலமாகத் தாங்கள் வைத்திருக்கும் அதிகாரத்தைப் பெண்கள் பயன்படுத்துவதில் ஆண்களுக்கு இருக்கும் மனத்தடையுமேதான் இதற்கு முக்கியமான காரணங்கள்.

தயக்கம்தான் காரணமா?

பெண்களை அரசியலில் ஈடுபடவிடாமல் தடுப்பதில் ஆண்களுக்குப் பெரும்பங்கு இருக்கிறது என்றாலும், அந்தக் கட்டுக்களை மீறித் தடம்பதிக்கிற பெண்களும் இருக்கிறார்கள். குடும்பத்தில் இருக்கும் ஆண்களின் நெருக்கடியை மீறி, பதவியையும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு செயல்படுகிறார்கள். அந்த வகையில் அரிவாள் வெட்டுக்களுக்கும் கொலை மிரட்டல்களுக்கும் இடையேயும் தங்கள் கடமையைச் செய்கிற திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து ஊராட்சி மன்ற முன்னாள் தலைவி கிருஷ்ணவேணியைப் போன்றவர்கள் நம்பிக்கை தருகிறார்கள்.

“என் கணவர் அரசியலில் இருக்கிறார் என்றாலும், என் வேலையை நானேதான் செய்வேன். தேவைப்படுகிறபோது ஆலோசனை கேட்பேனே தவிர, ஒரு தலைவராக என் பொறுப்பை யாருக்கும் விட்டுக்கொடுத்ததில்லை” என்கிறார் நாகை மாவட்டம் மடப்புரம் ஊராட்சி மன்றத் தலைவி வளர்மதி.

“கேரளாவில் கட்சி சார்பு இல்லையென்றாலும் ஊராட்சி மன்றத் தலைவர்களால் எளிதில் மக்கள்நலத் திட்டங்களைச் செயல்படுத்த முடிகிறது. ஆனால் தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு கட்சியின் சார்பு இருந்தால்தான், எந்த நலத் திட்டத்துக்கும் மேலிடத்தில் எளிதில் அனுமதி கிடைக்கிறது” என்ற நிதர்சனத்தையும் பகிர்ந்துகொள்கிறார் வளர்மதி.

அரசியல் பின்புலம் இல்லாத பெண்களும் அரசியலுக்கு வரலாம் என்று சொல்கிற சங்கமித்திரை, திருவண்ணாமலை மாவட்டம் எடத்தனூர் ஊராட்சி மன்றத் தலைவி. “எனக்குத் திருமணமாகி பத்து ஆண்டுகள் வீட்டை விட்டு வெளியே வந்ததுகூட இல்லை. ஆனா ஊராட்சி மன்ற தலைவியானதுக்குப் பிறகுதான் உலக விஷயம்,

அரசியல் தெளிவு எல்லாமே கிடைச்சுது. அரசியல் நமக்கு சரிவராதுன்னு பெண்கள் ஒதுங்கிப் போகக் கூடாது” என்கிறார் இவர். இரண்டாவது முறையாக ஊராட்சி மன்றத் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் இவர், தன்னுடைய கல்வியறிவும் செயலாற்றும் திறமையும்தான் ஆதிக்கச் சாதி மக்கள் மத்தியில் தனக்கு நல்மதிப்பைப் பெற்றுத் தந்திருப்பதாகச் சொல்கிறார்.

நிர்வாகத்தில் சிறந்தவர்கள் பெண்களே

பெண்கள் நிர்வாகத்தில் பலவீனமானவர்கள் என்ற கருத்து பலருக்கும் உண்டு. உண்மையில் ஆண்களைவிடவும் நிர்வாகத்தில் அனுபவமும் நேர்த்தியும் சூட்சுமங்களும் அவர்களிடம் அதிகம். சம்பாதித்துக் கொடுப்பதுடன் குடும்ப நிர்வாகத்திலிருந்து விலகிக்கொள்ளும் ஆண்களே இங்கு அதிகம்.

அப்படியான சூழலில் வீட்டையும் உறவுகளையும் பராமரித்து, பொருளாதாரத் தேவைகளைத் திட்டுமிட்டுச் செயல்படுவதில் பெண்களே வல்லவர்களாகத் திகழ்வதை அடிக்கோடிடத் தேவையில்லை. எந்த நெருக்கடி என்றாலும் அதைச் சமாளித்து, வருமானத்துக்கு உட்பட்டுக் குடும்பத்தை நடத்திச் செல்லும் கயிற்றில் நடக்கும் வித்தையை நிகழ்த்திவருபவர்கள் பெண்கள்தான்.

அன்றாடச் செலவு, தொலைநோக்கிலான செலவுகள், நெருக்கடிக்கான ஒதுக்கீடுகள், நீண்ட கால நோக்கிலான சேமிப்பு, நட்பு – உறவு வட்டாரத்துக்கான செலவுகள் என எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துத் திட்டமிட்டுச் செய்துவரும் பெண்களுக்கு நிர்வாகத் திறமை இல்லை என்று சொல்வது பெரிய நகைச்சுவை. வீட்டைக் கட்டுச்செட்டாக நடத்தும் அவர்களால், நாட்டை நிர்வகிக்க முடியாதா என்ன?

“ஏன் முடியாது? நாட்டை மட்டுமல்ல, உலகத்தையே ஆளுகிற திறமை பெண்களுக்கு உண்டு” என்கிறார் திருவள்ளூர் மாவட்டம் பூதூர் ஊராட்சி மன்றத் தலைவி சுஜாதா. தன் கணவருடைய இறப்புக்குப் பிறகு ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் இவர். ஆதிக்க சாதியினர் நிறைந்திருக்கும் பகுதியில் சிறப்பாகப் பணியாற்றும் தலித் பிரிவைச் சேர்ந்த தலைவி. தன் மீது வீசப்படுகிற அவதூறுகளைப் புறந்தள்ளிவிட்டுக் கடமையின் பாதையில் நடக்கிறவர்.

“ஒரு பொண்ணு தனியா இருந்து பொது வேலையில ஈடுபட்டா, நாலு பேர் நாலு விதமா பேசத்தான் செய்வாங்க. ஆரம்பத்துல இந்த மாதிரி பேச்சுக்களைக் கேட்டு உடைஞ்சுபோனேன், அழுதேன். இந்தப் பதவியே வேணாம்னுகூட தோணுச்சு.

ஆனா நாம தப்பு செய்யாதபோது, இந்த மாதிரி பேச்சுகளைக் கேட்டு ஏன் பயப்படணும்னு தோணுச்சு. இவங்க முன்னால ஊருக்கு நல்லது செய்துகாட்டணும்னு வைராக்கியம் வந்தது” என்று உறுதியுடன் சொல்கிற சுஜாதா, இன்றுவரை அதே உறுதியுடன் பணியாற்றுவது அவரது நெஞ்சுரத்துக்குச் சான்று.

அதேநேரம் பெண்கள் தலைவர்களாகப் பரிணமிப்பதிலும் பணியாற்றுவதிலும் ஆண்களுக்கும் பெரும்பங்கு இருக்கிறது. பெண்களுக்கான தொகுதி என்றால் அங்கே பெண்கள்தான் தலைவர்கள் என்னும் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் ஆண்களுக்கு இருக்க வேண்டும். அரசியல் என்பது ஆண்கள் மட்டுமே புழங்கும் இடம் என்ற நினைப்பிலிருந்து பெண்களும் விடுபட வேண்டும். இவை இரண்டும் நடந்தால் பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்னும் அரசியல் சாசனத்தின் லட்சியம் விரைந்து நிறைவேறும்.

Leave a Reply