அதிகாலையில் மழை: குளிர்ந்தது சென்னை
சென்னையின் பல இடங்களில் இன்று அதிகாலை மிதமான மழை பெய்ததால் சென்னையே குளிர்ச்சியாக காணப்படுகிறது. குறிப்பாக கிண்டி, ஈக்காட்டுதாங்கல், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சூலைமேடு, மேற்கு மாம்பலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை மிதமான மழை பெய்தது.
அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், செங்குன்றம், ரெட்டேரி,மாதவரம்,சோழவரம், பொன்னேரி ஆகிய பகுதிகளிலும் லேசான மழை பெய்தது. வடகிழக்கு பருவமழையின் அறிகுறியாக சென்னையின் பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளதால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் இந்த மழையினால் ஏற்பட்ட குளிர்ச்சி சென்னை மக்களுக்கு நிம்மதியை தந்துள்ளது.