அதிக சம்பளம் வாங்கும் வங்கித் தலைவர்கள்: ஹெச்டிஎப்சி வங்கி தலைவர் முதலிடம்
இந்தியாவில் உள்ள தனியார் வங்கிகளின் தலைவர்களில் ஹெச்டிஎப்சி வங்கியின் ஆதித்யா பூரி அதிக சம்பளம் வாங்குகிறார் என அறிக்கை வெளியாகியுள்ளது. 2015-16 ஆம் நிதியாண்டில் இவரது சம்பளம் 31 சதவீதம் உயர்ந்து ரூ. 9.73 கோடியாக உள்ளது. தனியார் வங்கியின் தலைவர்களில் அதிக சம்பளம் வாங்கும் நபராக முதலிடத்தில் இவர் உள்ளார். இவருக்கு அடுத்து ஆக்ஸிஸ் வங்கியின் தலைவர் ஷிகா சர்மா இரண்டாவது இடத்தில் உள்ளார். இவரது மொத்த சம்பள மதிப்பு 28 சதவீதம் உயர்ந்து ரூ.5.50 கோடியாக உள்ளது.
ரிசர்வ் வங்கியின் சொத்து தர மதிப்பு ஆய்வு கொள்கைகள் அடிப்படையில், ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான சாந்தா கொச்சாரின் ஊதிய மதிப்பு 22 சதவீதம் சரிந்து கடந்த ஆண்டு ரூ. 4.79 கோடி ஊதியம் வாங்கியுள்ளதாக வங்கி வெளியிட்ட ஆண்டு அறிக்கை குறிப்பிடுகிறது.
ஆனால் 2014-15 நிதியாண்டில் சாந்தா கொச்சார் வாங்கிய ரூ. 1.16 கோடி போனஸ் தொகை இதில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2015-16 நிதியாண்டில் அவரது ஊக்கத்தொகைகள் 14.47 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் அறிக்கை கூறியுள்ளது.
யெஸ் வங்கியின் தலைவர் ராணா கபூரின் ஊக்கத்தொகைகள் 20.76 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இவரது ஊதியம் ரூ. 5.67 கோடியாகும். கோடக் மஹிந்திரா வங்கியின் தலைவர் உதய் கோடக்கின் ஆண்டு சம்பளம் 9 சதவீதம் அதிகரித்து ரூ. 2.47 கோடியாக உள்ளது.
ரிசர்வ் வங்கியின் சொத்து தர ஆய்வு கொள்கை நடைமுறைக்கு வருவதற்கு முன்பாகவே நடப்பு நிதியாண்டின் தொடக்கத்திலேயே வங்கித் தலைவர்களின் ஊக்கதொகைகள் எவ்வளவு என்பது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளன என்று சந்தை வல்லுநர்கள் கருத்து கூறியுள்ளனர்.
வங்கிகள் தங்களது சொத்து தர ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி முயற்சி எடுத்து வருகிறது. இந்த ஆய்வு மேற்கொள்வதன் மூலம் வங்கிகளின் செயல்பாடுகள் மேம்படும் என்று ரிசர்வ் வங்கி வலியுறுத்தி வருகிறது.
’வங்கிகள் சொத்து தர ஆய்வு நடைமுறை மெல்ல மெல்ல மேம்படும் என சர்மா கருத்து தெரிவித்துள்ளார்.
வங்கியின் இதர பணியாளர்களின் ஊதியத்தோடு ஒப்பிடுகையில், பணியாளர்களின் சராசரி சம்பளத்தைவிட சந்தா கொச்சாரின் ஊதியம் 100 மடங்கு அதிகமாகும். ஆதித்யா பூரியின் சம்பளம் 179 மடங்கு அதிகமாகும். ஹெச்டிஎப்சியின் 311 பணியாளர்கள் ரூ. 60 லட்சத்துக்கும் அதிகமாக ஆண்டு சம்பளம் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே அளவு ஊதியத்தை ஆக்ஸிஸ் வங்கியில் 163 பணியாளர்கள் பெறுகின்றனர் என்று அறிக்கை குறிப்பிடுகிறது.