அதிமுகவை காப்பாற்ற இறுதிவரை போராடுவேன். ஜெ.நினைவிடத்தில் ரகசியங்களை உடைத்த ஓபிஎஸ்
தமிழக முதல்வர் ஓபிஎஸ் நேற்று முன் தினம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு சசிகலாவை முதல்வராக முன்மொழிந்தார். அதன்பின்னர் சசிகலா முதல்வர் பதவியை ஏற்க தயாராகியுள்ள நிலையில் இன்று சற்று முன்னர் முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் சுமார் 40 நிமிடங்களுக்கும் மேல் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஆழ்ந்த தியானத்தில் ஆழ்ந்துவிட்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆன்மாவின் உந்து சக்தியால் தான் நான் இங்கு வந்தேன். மாண்புமிகு அம்மா அவர்கள் நோய்வாய்ப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, அவரது உடல்நிலை, மிகவும் கிட்டத்தட்ட மோசமான நிலையை எட்டியபோது, என்னிடம் வந்து ‘மாண்புமிகு அம்மாவின் நிலை மோசமாக இருக்கிறது,கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும்’ என்று சொன்னார்கள்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போது ஏன் மாற்று ஏற்பாடு என்றேன் அசாதாரண சூழ்நிலையில், ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றார்கள்.
கிட்டத்தட்ட அரைமணி நேரம், நான் அழுது புலம்பினேன். முதல்வர், பொது செயலாளர் என இரு பொறுப்பையும் என்னை ஏற்று நடத்த சொன்னார்கள். மாண்புமிகு அவைத் தலைவர் மதுசூதனனை பொதுச்செயலாளராக இருக்க வேண்டும் என சொன்னார்கள். என்னை முதல்வராக இருக்க சொன்னார்கள்.
சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், திவாகரன் போன்றோர். சசிகலாவை பொதுசெயலாளராக ஆக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். நான் சசிகலாவிடம் இதை சென்று சொன்னபோது, அவரும் அதை ஏற்றுக் கொண்டார்.
வர்தா புயலில் நான் தீவிரமாக வேலை செய்தது அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதால் டெல்லியில் முகாமிட்டேன். புதிய சட்டம் உருவாக்கினோம் மத்திய அரசின் ஒப்புதல் வாங்கினோம் .
நான் செய்த நற்பணிகள் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. உதயகுமார் பேசியது நீதிக்கு புறம்பானது என சசிகலாவிடம் முறையிட்டேன்.
நான் முதல்வராக இருக்கும் போது, உதயகுமார் சசிகலா முதல்வராக வேண்டும் என்று சொன்னார். உதயகுமார் பேசியது நீதிக்கு புறம்பானது என சசிகலாவிடம் முறையிட்டேன். உதயகுமாரைக் கூப்பிட்டு கண்டித்துவிட்டோம் என்றார்கள்.ஆனால், அவர் மதுரைக்கு சென்றும், இதையே தான் பேசினார்
நான் பிரதமரை சந்தித்தால் தம்பிதுரை தனியாக எம்பிகளை சென்று பிரதமரை சந்திக்கிறார். கழகத்தின் பொது செயலாளர் தான் முதல்வர் ஆக வேண்டும் என பலர் பேசினார்கள்.
என்னுடைய அமைச்சரவையில் இருக்கும் வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் எனக்கு எதிராக பேசினார்! செல்லூர் ராஜூவும் செங்கோட்டயனும் சொல்கிறார்.நான் மூத்த அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினேன்.என்னை அவமானப்படுத்துவதாக உணர்ந்தேன். வேண்டாம் என்று சொன்ன என்னை ஏன் இப்படியெல்லாம் அவமானப்படுத்துகிறீர்கள் என்றேன்.
மேலும் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை எனக்கே தெரியாமல் கூட்டி, அவர்களிடம் கையெழுத்து வாங்கிவிட்டு முதல்வர் பதவியை சின்னம்மாவுக்கு கொடுக்குமாறு என்னிடம் அனைவரும் கேட்டுக்கொண்டனர். இதற்கு இப்போது என்ன அவசரம், அம்மாவின் ஆன்மாவிடம் கேட்டுவிட்டு வந்து முடிவு கூறுகிறேன் என்று கூறியபோது கூட அதற்கு அவர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி கட்டாயத்தின் பேரில் நான் ராஜினாமா செய்தேன்,.
தமிழகத்தின் முதல்வராக மக்கள் விரும்பும் ஒருவர் தான் முதல்வராக வரவேண்டும் என்பதுதான் அம்மாவின் ஆன்மா எனக்கு கூறியது. அதேபோல் கழகத்தை கட்டுக்கோப்பாக நடத்த தொண்டர்கள் விரும்பும் ஒருவர்தான் பொதுச்செயலாளராக வரவேண்டும் என்று அம்மாவின் ஆன்மா எனக்கு கூறியது. அம்மாவின் ஆன்மா கூறியதை காப்பாற்ற இறுதி வரை தனியாக போராடுவேஎன்
இவ்வாறு முதல்வர் ஓபிஎஸ் கூறினார்.