அதே எரிவாயு… அதே அதிகார கும்பல்.. அழிக்கப்பட்ட அமெரிக்க நெடுவாசல்..!

அதே எரிவாயு… அதே அதிகார கும்பல்.. அழிக்கப்பட்ட அமெரிக்க நெடுவாசல்..!

இது இப்படித் தான் தொடங்கியது. அமெரிக்காவின் பூர்வகுடி இனத்தைச் சேர்ந்த லா டோன்னா பிரேவ் என்கிற முதியவர், கடந்தாண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் மிசோரி கடற்கரையை ஒட்டி தன் கூடாரத்தை அமைக்கிறார். அமெரிக்க அரசிற்கும், அது கொண்டு வந்திருக்கும் டகோடா பைப்லைன் திட்டத்திற்கும் எதிரான பதாகைகளை கூடாரத்தைச் சுற்றி அமைக்கிறார்.

“பல்லாயிரம் ஆண்டுகளாய், பரம்பரை பரம்பரையாய் வாழ்ந்த நாட்டைப் பிடுங்கினீர்கள். இனத்தை அழித்தீர்கள். இன்று, எங்கோ ஒதுங்கி வாழும் இடத்தையும், நாங்கள் குடிக்கும் நீரையும் அழிக்க முயல்கிறீர்கள். இதற்கு ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டோம்…” என்ற அவரின் போராட்டக் குரலைக் கேட்டு, கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் கூடுகிறது. கூடாரம் அமைக்கிறது. ஒரு கட்டத்தில் 50 ஏக்கர் பரப்பளவிலான அந்த நிலத்தில் பத்தாயிரம் பூர்வகுடிகள் கூடாரங்கள் அமைத்துப் போராடத் துவங்கினார்கள். “தி ஸ்டாண்டிங் ராக் ப்ரொடஸ்ட்” (The Standing Rock Protest) என்றழைக்கப்படும் இந்தப் போராட்டம் அமெரிக்க வரலாற்றின் முக்கியப் போராட்டங்களில் ஒன்று.

பூமிக்கடியிலிருந்து எரிவாயுக்களை எடுத்து… பூமிக்கடியிலேயே பெரிய பைப்லைனை உருவாக்கி அதை ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு கடத்துவது தான் “டகோட்டா பைப்லைன் திட்டம்”. இது செயல்படுத்தப்படும் மிசோரி, மிசிசிபி ஆறுகள் மற்றும் ஓஆஹி ஏரி ஆகிய பகுதிகள் பூர்வகுடிகளின் வாழ்வும், வாழ்வாதாரமும், வரலாறும் புதைந்து கிடக்கும் இடங்கள்.

“இந்தக் குழாய் மூலம் ஒரு நாளைக்கு 5,70,000 பேரல்கள் அளவிலான எரிவாயு கடத்தப்படும். சிறிதளவேனும் சிந்தினால் கூட 5 நொடிகளில் ஒரு பள்ளிக்கூடமே தரைமட்டமாகிவிடும். 50 நிமிடங்களில் மிசோரி ஆறு முற்றிலும் நாசமாகிவிடும்.” என்று இதை எதிர்க்கும் பூர்வகுடிகள் சொல்கிறார்கள்.

கிட்டத்தட்ட 10 மாதங்களாக கொட்டும் பனியில் தொடர்ந்து போராடி வந்தார்கள் பூர்வகுடிகள். குறிப்பிட்ட அளவிலான அமெரிக்க வெள்ளையர்களும் இவர்களுக்கான ஆதரவைத் தந்தனர். பலர் மிஸோரி ஆற்றில், படகுகளில் இருந்தபடியே நாட்கணக்கில் போராடினார்கள். பூர்வகுடிகள் மீதான கோபத்தில் அவர்களின் புனித ஸ்தலங்களை புல்டோசர் கொண்டு தரைமட்டமாக்கியது அமெரிக்க அரசாங்கம். ஹாலிவுட் நடிகை ஷெயிலின் உட்லி இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு கைதான போது, அது சர்வதேச கவனத்தை ஈர்த்தது. இப்படியான தொடர் போராட்டங்கள் அமெரிக்க அரசாங்கத்தை லேசாக அசைத்துப் பார்த்தது.

டிசம்பர் மாதம், ஒபாமா வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் முன்னர், பைப்லைன் கட்டுமானத்திற்கான இடைக்காலத் தடையை விதித்தார். மேலும், அமெரிக்க ராணுவத்தின் பொறியியல் வல்லுநர்கள் இந்தத் திட்டத்தில் இருக்கும் குறைகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற உத்தரவைப் போட்டார். சிலர் போராட்டத்தைக் கைவிட்டாலும் கூட, பலர் திட்டம் நிரந்தரமாகக் கைவிடப்பட வேண்டும் என்று உறுதியாகப் போராடினார்கள்.

ஜனவரி 20ஆம் தேதி, அதிபராகப் பொறுப்பேற்ற ட்ரம்ப், நான்கே நாட்களில் இந்தத் திட்டத்தின் மீதிருந்த தடையை நீக்கி உத்தரவிட்டார். அப்படி அவர் செய்ததற்கு, இந்தப் போராட்டத்தின் வீச்சு காரணம் அல்ல. அதில் அவருக்கு இருந்த பொருளாதார லாபமே காரணம். 3.7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்களில் (Energy Transfer Partners) ட்ரம்ப் முக்கியமான பங்குதாரர்.

சர்வாதிகார ஆட்சி, சர்வ அதிகாரங்களையும் அடக்கும் பண பலம்… இவற்றுக்குக்கு முன்னர் எளிய மக்களின் போராட்டங்கள் சிதைவுறுவது பொருளாதார உலகின் யதார்த்தம். அதுவே இங்கும் நடந்தது. பிப்ரவரி மாதம் 24ஆம் தேதிக்குள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று உத்தரவிட்டார் ட்ரம்ப். பலரும் இத்தனை மாதங்கள் தாங்கள் தங்கியிருந்த கூடாரங்களை எரித்துவிட்டு, தங்கள் எதிர்ப்பினைப் பதிந்துவிட்டு விரக்தியோடு வீடு திரும்பினர். அடங்க மறுத்த சில போராளிகளை வேட்டை நாய்களைவிட்டுக் கடிக்க வைத்தது காவல்படை. பின்பு, புல்டோசர் கொண்டு மொத்த இடத்தையும் தரைமட்டமாக்கியது.

எதற்கும் உச்சபட்ச ஒப்பீடாக அமெரிக்காவைச் சொல்லும் ஒரு பெருங்கூட்டம் இருக்கிறது. இது போன்ற வளர்ச்சித் திட்டங்களை எதிர்ப்பவர்களை புழுக்களாகப் பார்க்கும் அந்தப் பெருங்கூட்டம். சுத்தம், சுகாதாரம், வலிமை, தரம் என உலக நாடுகளின் முன்னோடியாகத் திகழும் வல்லரசு அமெரிக்கா. அந்த நாட்டு மக்களே ஒரு திட்டத்தைக் கண்டு பயப்படுகிறார்கள். கடுமையாக எதிர்க்கிறார்கள். அரசு ஆஸ்பத்திரியில் எலி கடித்து இறக்கும் குழந்தை, ராணுவ புல்லட் புரூப் உடைகளிலேயே ஊழல் செய்யும் அரசாங்கம், பிரபல நடிகையாக இருந்தாலும் சரி, மூன்று வயது பிஞ்சுக் குழந்தையாக இருந்தாலும் சரி… யாரும் இங்கு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகலாம் என்ற பாதுகாப்பற்ற நிலை, கேரள காசர்கோட்டில் அரசாங்கமே என்டோசல்ஃபான் தெளித்து இரண்டு தலைமுறைகளை அழித்த கொடூரம், “ஒரு நாடு, ஒரு மதம்” என்ற கொள்கையில் முனைப்போடு இயங்கும் அரசாங்கம் என மக்களை நசுக்கும் இந்த அரசாங்கத்தை எப்படி நம்புவது? அவர்கள் தரும் உறுதிகளை எதன் அடிப்படையில் ஒப்புக்கொள்வது?

Leave a Reply