அப்துல் கலாமை அசர வைத்த ஈரான் மாணவர்!
தனது இறப்புக்கு பின், தான் வாழ்ந்த இல்லத்தை செவித்திறன் குறைந்த குழந்தைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பள்ளியாக மாற்ற வேண்டும் என உயில் எழுதி, அதன்படியே செயல்பட வைத்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சென்னை, ராமாபுரம் தோட்ட இல்லத்தில் இயங்கி வரும் இப்பள்ளியின் 23 வது ஆண்டு விழா, கடந்த 2012 ம் வருடம், ஆகஸ்ட் மாதம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், அந்த குழந்தைகள் மத்தியில் ஆற்றிய நீண்ட உரை, மகத்தானதொரு உரையாக அமைந்தது.
தனது ஏழரை வயது முதல் சொல்லமுடியாத துயரங்களை சந்தித்து, ஏழ்மையில் உழன்று, தன் உழைப்பால் 40 வயதில் ஒரு உயர்ந்த நிலையை எட்டுவதற்கு, தான் சந்தித்த அவமானங்களையும் கஷ்டங்களையும் படிக்கற்களாக்கிக்கொண்டவர் எம்.ஜி.ஆர். சோதனைகளையும் சாதனைகளாக்கி வாழ்க்கையில் வெல்ல முடியும் என்பதற்கு அவரது வாழ்க்கை ஒரு உதாரணம்.
அன்றைய நிகழ்வில், ” நண்பர்களே வணக்கம்…!” என அவர் தம் பேச்சை துவங்க, பெரும் கைதட்டல் குழந்தைகளிடமிருந்து.
” குழந்தைகளா… எல்லோரும் நான் சொல்றதை திரும்பச் சொல்றீங்களா…”, என ஒரு ஆசிரியரைப் போல மாணவர்களிடத்தில் தம் உரையைத் துவங்கிய அப்துல்கலாம், ‘கெட்டதை பார்க்காதே’ ‘கெட்டதை கேட்காதே’ ‘கெட்டதை பேசாதே’ எனச் சொல்லச் சொல்ல அதை திரும்பக் கூறினர் மாணவர்கள். “இப்போ நல்லதைதான் கேட்கப்போறீங்க” என டைமிங்கோடு சொல்ல, கலகலப்பானது அந்த இடம்.
” நண்பர்களே… தமிழக மக்களின் உள்ளங்களில் எல்லாம் வாழ்ந்துகொண்டிருக்கும் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் இல்லத்தில், அவர் உருவாக்கிய பேச்சு மற்றும் செவித்திறன் குறைவுடையோர் பள்ளியில் வந்து உங்களை சந்தித்து, உரையாட கிடைத்த வாய்ப்புக்காக நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். 23 ஆண்டுகளை கடந்த பள்ளி என்றால் என்ன ? இந்த பள்ளி பூமியில் உள்ளது. பூமி சூரியனைச் சுற்றி வர ஒரு வருடம் ஆகும். அந்த கணக்கின்படி இந்த பள்ளி 23 முறை சூரியனை சுற்றி விட்டது என்று அர்த்தம்.
நான் உங்கள் மத்தியில் உரையாடப்போகும் தலைப்பு ‘வெற்றியடைந்தே தீருவேன்’. (இந்த தலைப்பினை திரும்பத் திரும்ப மாணவர்களை சொல்ல வைத்து கேட்கிறார் கலாம்). எம்.ஜி.ஆரைப் பற்றி சொல்வதற்கு பல விஷயங்கள் உள்ளபோதிலும், ஒன்றை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். ஏழையாகப் பிறந்து, உழைப்பால் உயர்ந்து, கலைத்துறையில் இருந்து, தம் சுய உழைப்பால் சம்பாதித்தவற்றை எல்லோருக்கும் வாரி வாரி வழங்கியவர் எம். ஜி.ஆர். அவரது பெயரை தாங்கி நடக்கும் பள்ளியின் மாணவ மாணவிகளிடம் உரையாற்றுவதில் மகிழ்ச்சி.
மாணவர்களே நமது வாழ்க்கையில் தன்னம்பிக்கை மிகவும் அவசியம். தன்னம்பிக்கை வெற்றியின் முதற்படி. நான் குடியரசு தலைவராக இருந்தபோது நடந்த 2 சம்பவங்களைக் கூறி அதை விளக்கலாம் என நினைக்கிறேன். ஒரு சமயம் வெளிநாடுகளைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் 1000 பேர், அத்லடிக் போட்டியில் கலந்துகொள்ள இந்தியா வந்திருந்தனர். ஒருநாள் அவர்கள், குடியரசுத் தலைவர் மாளிகையை பார்க்க ஆர்வம் கொண்டு, அனுமதிப் பெற்று வந்தனர். நான் அவர்கள் மத்தியில் படிக்க, ஒரு கவிதை தயார் செய்து வைத்திருந்தேன். அந்த கவிதையை இப்போது வாசிக்கிறேன். திரும்பச் சொல்லுங்கள்
‘நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள்
எங்களது மனம் வைரத்தை காட்டிலும் பலமானது
எங்களது தன்னம்பிக்கையால் எப்போதும் வெற்றிபெறுவோம்.
கடவுள் எங்களோடு இருக்கும்போது எங்களுக்கு எதிரி என்று யாரும் கிடையாது!’
-இதை வாசித்து முடித்ததும், ஈரான் நாட்டை சேர்ந்த முஸ்தபா என்ற மாணவன் என்னிடம் வந்தான். அவனுக்கு இரண்டு கால்களும் இல்லை. என்னிடம் ஒரு காகிதத்தைக் கொடுத்தான். அதில் ஒரு அழகான கவிதை இருந்தது. அதற்கு அவன் வைத்திருந்த தலைப்பு ‘மன தைரியம்’. படிக்கிறேன் கேளுங்கள் குழந்தைகளே…
‘எனக்கு கால்கள் இரண்டும் இல்லை
அழாதே அழாதே என்று என் மனசாட்சி சொல்கிறது
ஆம்! என் மனசாட்சி சொல்கிறது
நான் மன்னன் முன்பாக கூட மண்டியிட்டு வணங்கவேண்டியதில்லை மகனே என
நான் என்றென்றும் மகிழ்ச்சியாக வாழ்ந்து காட்டுவேன்!’
-அசந்துபோனேன் நான். என்ன ஒரு மனஉறுதி அவனுக்கு. 2 கால்களையும் இழந்தபின்னும் அவனுக்குள்தான் என்னவொரு தன்னம்பிக்கை. அப்படிப்பட்ட ஒரு தன்னம்பிக்கையை இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவரின் மனதிலும் நாம் விதைக்கவேண்டும்.
இன்னொரு சம்பவம். குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்தபோது ஹைதராபாத் மலைவாழ் பகுதியை சேரந்த நுாற்றுக்கணக்கான மாணவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களிடையே பேசும்போது, ‘யார் யார் என்னன்னவாக ஆவீர்கள்’ எனக் கேட்டேன். ஒவ்வொருவரும் தங்கள் விருப்பங்களை சொல்லிக்கொண்டிருந்தனர். 9 ம் வகுப்பை சேர்ந்த பார்வையற்ற மாணவன் ஒருவன், தன் முறை வந்தபோது கையை தூக்கினான். அவன் பெயர் ஸ்ரீகாந்த். ‘சார் என் ஆசை, நான் ஒருநாள் இந்த நாட்டின் பார்வையற்ற முதல் குடியரசு தலைவனாவேன்’ என்றான். அவன் தன்னம்பிக்கையைக் கண்டு பிரமித்துப் போனேன். அவனை வாழ்த்திவிட்டு ‘உனது எண்ணம் பெரிது. ஆனால் விடாமுயற்சியோடு அறிவை தேடிப்பெற்று, கடுமையாக உழைத்தால் உன் லட்சியம் நிறைவேறும்’ என வாழ்த்தினேன்.
வாழ்க்கையில் வெற்றி பெற 4 செயல்கள் அவசியம். முதலாவது, வாழ்க்கையில் மிகப்பெரிய லட்சியத்தை வகுத்துக்கொள்வது. இரண்டாவது, அந்த லட்சியத்தை அடைய அறிவாற்றலை தொடர்ந்து பெருக்கிக் கொள்ள வேண்டும். அறிவை பெருக்குவது என்றால் நல்ல புத்தகங்களை வாசிப்பதும், சான்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துகளை ஊன்றிக்கேட்பது. மூன்றாவது, கடின உழைப்பு . நான்காவது, விடாமுயற்சி. அதாவது தோல்வி மனப்பான்மையை தோல்வியடையும்படி தொடர்ந்து முயற்சிப்பது.
இந்த நான்கையும் கடைபிடித்தால் வாழ்க்கையில் வெற்றிபெறுவீர்கள். இது தொடர்பாக நான் எழுதிய கவிதை ஒன்றை உங்களோடு பகிர்ந்துகொள்ளலாம் என நினைக்கிறேன். நீங்களும் திரும்பச் சொல்லுங்கள்.
‘நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்
நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்
நான் பிறந்தேன் கனவுடன்
நான் வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்
நான் பிறந்தேன் உயர; எண்ணங்களை செயல்படுத்த
நான் பிறந்தேன் ஆராய்ச்சி உள்ளத்துடன்
நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க
நான் பூமியில் ஒருபோதும் தவழமாட்டேன்.
தவழவேமாட்டேன்.
ஆகாய உச்சிதான் என் லட்சியம்
பறப்பேன் பறப்பேன்
வாழ்வில் பறந்துகொண்டே இருப்பேன்.’
– ( கவிதையை முடித்துக்கொண்டு, மாணவர்களை உற்சாகப்படுத்தும் தொனியில்
எத்தனை பேர் பறப்பீங்க சொல்லுங்க.? என கலாம் கேட்க, ‘பறப்போம் பறப்போம்’ என மாணவர்கள் மத்தியில் இருந்து முழக்கமாய் கேட்டது பதில்.
அப்போ எல்லாருமே பறப்பீங்களா? கேட்டபடி சிரிக்கிறார் அப்துல்கலாம்)
வெற்றி என்பது என்ன? வெற்றி என்பது இறுதிப்புள்ளி, தோல்வி என்பது இடைப்புள்ளி. இடைப்புள்ளிகளின் துணையின்றி இறுதிப்புள்ளியை அடைதல் சாத்தியமல்ல. வெற்றியை கொண்டாடத் தவறினாலும் தோல்வியை கொண்டாடத் தவறக்கூடாது.ஏனென்றால் தோல்விகள்தான் நம்மை வலுப்பெறச் செய்பவை. அதுதான் நம் பயணத்தை முழுமை பெறச் செய்பவை. பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை நான் கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். உங்கள் பிள்ளைகள் நல்ல செயல்களை செய்தாலோ வெற்றிபெற்றாலோ அல்லது சாதனை புரிந்தாலோ அவர்களுக்கு பரிசாக புத்தகத்தை தாருங்கள். பள்ளி வயதிலேயே புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.
உறக்கத்தில் வருவதல்ல கனவு
உங்களை உறங்க செய்யாமல் செய்வதுதான் கனவு.
– அந்த கனவை ஒவ்வொருவரும் நனவாக்கும் வகையில் உழைக்கவேண்டும். செவித்திறன் குறைந்த மாணவர்களுக்கான ஆசிரியப்பணி ஒரு தெய்வீக பணிக்கு சமமானது. அவர்களுக்கு என் வாழ்த்துகள். அவர்களிடம் ஒரு நல்ல செய்தியை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். செவித்திறன் குறைந்தவர்களுக்கான ‘காக்ளியர் இன்ப்ளேன்ட்’ ( cochlear implant ) என்ற கருவி, மேலை நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. அதை பயன்படுத்தினால் செவித்திறன் குறைந்தவர்களுக்கு இயல்பான கேட்கும்திறனை உருவாக்கலாம்.
பல லட்சங்கள் மதிப்புள்ள இந்தக் கருவியை நம் நாட்டிலும் உருவாக்கும் முயற்சி, பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி துறையினால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் ஓர் ஆண்டில் புழக்கத்திற்கு வந்து விடும் என்பதோடு; விலையும் குறைவாக நிர்ணயிக்கப்படலாம். அது உங்களுக்கெல்லாம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் அப்துல் கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் ஒரு தகவலை பகிர்ந்தார். ஆச்சர்யமான அந்த பகிர்வு இதுதான்…
‘ இந்த விழா ஏற்பாட்டுக்கு முன் நடந்த ஆச்சர்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இந்த விழா குறித்துப் பேச, ஒரு நாள் இந்தப் பள்ளிக்கு நான் வந்தபோது, பள்ளி முதல்வர் திருமதி லதா, அப்துல்கலாம் அவர்களை இந்த பள்ளிக்கு அழைத்துவரவேண்டும் என்ற தன் விருப்பத்தை தெரிவித்தார். அடுத்த நிமிடம், என் மொபைல் ஒலித்தது. யாரென்று பார்த்தால் இன்ப அதிர்ச்சி. லைனில் வந்தது, வேறு யாருமல்ல, அப்துல்கலாம் அவர்களேதான். இருவரும் ஆச்சர்யமடைந்தோம். அது எந்த விதமான தெய்வீக லிங்க் எனத் தெரியவில்லை.
ஒருவேளை எம்.ஜி.ஆர் சொல்லித்தான் அப்துல் கலாம் போன் செய்தாரோ என்னவோ. (கலாமின் முகத்தில் நமுட்டுச் சிரிப்பு). லதா அவர்களின் விருப்பத்தையும் பள்ளியின் பெருமைகளையும் அப்போதே எடுத்துச்சொன்னேன். எந்த மறுப்புமில்லாமல் ‘நானும் அந்தப் பள்ளிக்கு செல்ல விரும்புகிறேன். அடுத்த முறை சென்னை வரும்போது கண்டிப்பாக எம.ஜி.ஆரின் வீட்டுக்கும் பள்ளிக்கும் வருவேன்’ எனச் சொல்லி ஆச்சர்யப்படுத்தினார். சொன்னபடியே இதோ வந்துவிட்டார்.” என்றார்.