அமராவதி நகர் ராணுவப் பள்ளியில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு

அமராவதி நகர் ராணுவப் பள்ளியில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு

armyதிருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்த அமராவதி நகரில் உள்ள ராணுவப் பள்ளியில் 2017-18-ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பள்ளி நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகமும், தமிழக அரசும் ஒருங்கிணைந்து நடத்தும் இந்த உண்டு உறைவிடப் பள்ளியில் 2017-2018-ஆம் கல்வியாண்டில் 6, 9-ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 1-7-2017 அன்று 10 வயது பூர்த்தியாகியும், 11 வயது பூர்த்தியாகமலும் அதாவது, 2-7-2006-லிருந்து 1-7-2007-க்குள் பிறந்திருக்கும் மாணவர்கள் மட்டுமே 6-ஆம் வகுப்பில் சேர முடியும். மேலும், 1-7-2017 அன்று 13 வயது பூர்த்தியாகியும், 14 வயது பூர்த்தியாகமலும் (2-7-2003-லிருந்து 01-07-2004-க்குள் பிறந்திருக்க வேண்டும்). அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் மட்டுமே 9-ஆம் வகுப்பில் சேரத் தகுதி பெற்றவர்கள் ஆவர். பெற்றோர்களின் மாத வருமான அடிப்படையில் ரூ. 50 ஆயிரம் வரை மத்திய, மாநில அரசுகளின் உதவித் தொகை வழங்கப்படும்.
15 சதவீத இடங்கள் பட்டியல் வகுப்பினருக்கும் (எஸ்.சி), 7.5 சதவீத இடங்கள் பழங் குடியினருக்கும் (எஸ்.டி) ஒதுக்கப்படும். மீதமுள்ள 67 சதவீத இடங்கள் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும், 33 சதவீத இடங்கள் பிற மாநிலத்தவர்களுக்கும் தேர்ச்சி தரப் பட்டியல் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படும். மேற்குறிப்பிட்ட ஒதுக்கீட்டில் 25 சதவீதம் ராணுவத்தில் பணிபுரிபவர்கள் குழந்தைகளுக்கும், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகளுக்கும் ஒதுக்கப்படும்.
தற்போது, சேர்க்கை விண்ணப்பங்கள் பள்ளியில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. விள க்க குறிப்பேடும், விண்ணப்பப் படிவமும் பெற விரும்பும் பொதுப் பிரிவு, படைத் துறையைச் சேர்ந்தவர்கள் ரூ. 650-ம், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ரூ. 500-ம் (இதில் பதிவுக் கட்டணம், பழைய வினாத்தாள், பள்ளியின் குறுந்தகடு, அஞ்சல் செலவும் அடங்கும்) அமராவதி நகர் ஸ்டேட் வங்கிக் கிளை எண் 2191-இல் பெறத்தக்க வகையில் முதல்வர், சைனிக் பள்ளி, அமராவதி நகர் என்ற பெயரில் வரைவோலை (டிடி) எடுத்து அனுப்ப வேண்டும். வரைவோலையுடன் 25 செ.மீ. ல 20 செ.மீ. சுய விலாசமிட்ட உறை ஒன்றும் இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பமும், குறிப்பேடும் 17-10-2016 முதல் 18-11-2016 வரை வழங்கப்படும்.

மேலும், www.sainikschoolamaravathinagar.edu.in என்ற இணைய தளத்திலும் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் படிவங்களைப் பதிவிறக்கம் செய்து கட்டணத்தைப் படிவத்தோடு சேர்த்துக் கட்டலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை முதல்வர், சைனிக் பள்ளி, அமராவதி நகர்-642102, உடுமலை வட்டம், திருப்பூர் மாவட்டம் என்ற முகவரிக்கு 30-11-2016-க்குள் அனுப்பி வைக்க வேண்டும். 15-01-2017 அன்று நுழைவுத் தேர்வுகள் நடைபெறும். மேலும், விவரங்களுக்கு 04252-256246, 256296 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply