அமலாக்கத்துறை வரம்பு மீறி செயல்படுகிறது: ப.சிதம்பரம்
ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் அமலாக்கத்துறையின் இரும்புப்பிடியில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் மகன் கார்த்திக் சிதம்பரம் இருப்பதாகவும், அவர் எந்த நேரமும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கருத்து கூறிய முன்னாள் அமைச்சர் ப,சிதம்பரம் அமலாக்கத்துறை தனது வரம்பை மீறி செயல்படுவதாக தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறை வழங்கிய விளக்கத்தை தான் படித்துப்பார்த்ததாகவும், அதில் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறிய ப.சிதம்பரம், அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளால் தமது குரலை ஒடுக்க முடியாது என்றும் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக நிதி அமைச்சராக இருந்தபோது சிதம்பரம் தமது வரம்பை மீறி 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்துக்கு வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் ஒப்புதலை பெற்றதாக ஏர்செல் மேக்சிஸ் வழக்கு குறித்த அமலாக்கத்துறை விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ள அமலாக்கத்துறை அவரின் சொத்துக்கள், வங்கிக் கணக்குகள், 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைப்புத் தொகை ஆகியவற்றை முடக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.