அமெரிக்கா கல்வி: இந்திய மாணவர்களிடையே ஆர்வம் குறைந்தது
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். அதன் பிறகு அமெரிக்காவில் இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. மேலும், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
அதனால், அமெரிக்காவில் பட்டமேற்படிப்பு மேற்கொள்வதற்கு இந்திய மாணவர்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள். சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள 250-க்கும் மேற்பட்ட கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உயர்கல்விக்குழுவினர் ஆய்வு செய்தனர்.அப்போது இளங்கலை பிரிவுகளில் 26 சதவீதமும், பட்டதாரி வகுப்பில் 15 சதவீதமும் இந்திய மாணவர்களின் சேர்க்கை குறைந்து உள்ளதாக கண்டறியப்பட்டு இருக்கிறது. ஒட்டுமொத்தமாக அமெரிக்காவின் உயர்கல்வித்துறையில் 40 சதவீத வெளிநாட்டு மாணவர்களின் சேர்க்கை குறைந்துள்ளது.
இது தொடர்பான விரிவான அறிக்கை இந்த வார இறுதியில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் தற்போது படித்து வரும் சர்வதேச மாணவர்களில் 47 சதவீதத்தினர் இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, 1 லட்சத்து 65 ஆயிரம் இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் உயர் கல்வி கற்கின்றனர். அமெரிக்காவில் உயர் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர் களின் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது என்பதும் இந்த ஆண்டு சீனாவில் இருந்தும் மாணவர்கள் விண்ணப்பங்கள் குறைந்துள்ளன என்றும் தெரிய வந்துள்ளது.