அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை -ஆம்னி பேருந்துகளில் கட்டணக் கொள்ளை அதிரடி நடவடிக்கை

சென்னை: விடுமுறை நாட்களில் அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.11,400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

வார விடுமுறை மற்றும் சுதந்திர தினம் காரணமாக தொடர்ந்து அரசு விடுமுறை என்பதால் பொதுமக்கள் பலர் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு தனியார் பேருந்துகளில் சென்றனர். அப்போது ஆம்னி பேருந்துகளின் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள் திடீர் சோதனை ஈடுபட்டனர்.

அதுமட்டுமல்லாமல் அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரித்தார். அத்துடன் அதிக கட்டணம் வசூலித்த பேருந்துகளில் கூடுதல் கட்டணத்தை பயணிகளிடம் திருப்பிக் கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து திங்கள் விடுமுறை முடிந்து சென்னையை நோக்கி மக்கள் படையெடுத்த நிலையிலும் மீண்டும் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது

அமைச்சர் சிவசங்கர் பேச்சு :

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், தொடர் விடுமுறை இருந்த நேரத்தில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து, ஆணையர், துணை ஆணையர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்ட அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டனர்.

அபராதம் விதிப்பு :

அதில் 953 ஆம்னி பேருந்துகளுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கூடுதலாக கட்டணம் வசூலித்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், 97 பேருக்கு வசூலிக்கப்பட்ட கட்டணங்கள் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. அப்படி திருப்பி வழங்கிய தொகை ரூ.68,800 ஆகும். அதில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 4 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.11 லட்சத்து 4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது