அம்பிகையை கொண்டாடுவோம்!

அம்பிகையை கொண்டாடுவோம்!

p6aஆடி முதல் மார்கழி முடிய உள்ள காலம் தேவர்களின் இரவுக் காலம் ஆகும் இக்காலக் கட்டத்தில் பகல் பொழுது குறைவாகவும் இரவுப் பொழுது நீண்டும் இருக்கும். இரவு வந்துவிட்டாலே நாம் எல்லோரும் அன்னையின் அரவணைப்பைத்தானே விரும்புவோம்! அதேபோல்தான் இரவுப் பொழுதின் தொடக்கமான ஆடி மாதத்தில் நாம் அம்மனை விசேஷமாகக் கொண்டாடுகிறோம். அதுமட்டுமல்ல, பருவகால மாறுதல்களால் நமக்கு ஏற்படக்கூடிய நோய்களில் இருந்து நம்மைக் காக்கவும், இயற்கைச் சீற்றங்கள் ஏற்படாமல் இருக்கவும் நம்முடைய காவல் தெய்வமாகத் திகழும் அம்மனுக்கு ஆடிமாதத்தில் திருவிழாக்கள் எடுத்துக் கொண்டாடுகிறோம். இங்கே பிரசித்தி பெற்ற சில அம்மன் தலங்களை தரிசிக்கலாமே..!

* கோலவிழி அம்மன் சென்னை மயிலாப்பூரின் காவல் தெய்வமாகத் திகழ்கிறாள். கபாலீஸ்வரர் கோயிலில் பிரம்மோற்ஸவம் தொடங்குவதற்கு முன்பாக கோலவிழி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அறுபத்துமூவர் விழாவின்போது முதலில் வருவது கோலவிழி அம்மன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

* சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள பண்ணாரி மாரி அம்மன் கோயில் சுவரை, அப்போது காட்டிலாகா அதிகாரியாக இருந்த ஆங்கிலேயர் ஒருவர் துப்பாக்கியால் துளைத்தபோது அவருடைய கண் பார்வை பறிபோனதாம். பின்னர் மனம் திருந்தி மன்னிப்பு கேட்டதும், கோயிலில் வழங்கிய தீர்த்தத்தால் இழந்த பார்வையைத் திரும்பப் பெற்றார். பண்ணாரி அம்மனை வேண்டிக் கொண்டால், இழந்த கண் பார்வையைத் திரும்பப் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

* கோவையில் அருளும் கோணியம்மன் தன் வலக் காதில் சிவபெருமானுக்கு உரிய குண்டலமும், இடக் காதில் அம்பிகைக்கு உரிய தோடும் அணிந்து, சிவசக்தியர் இணைந்த அர்த்தநாரீஸ்வர கோலத்தில் காட்சி தருகிறாள்.

* நாட்டரசன்கோட்டை கண்ணுடைநாயகி அம்மன் கோயிலில் ஆடிமாதம் நடைபெறும் முளைக்கொட்டு திருவிழாவின் 10-வது நாளில், அம்மன் தன் தலையில் தங்க பாத்திரத்தில் முளைப்பாரியுடன் காட்சி தருவாள். அதற்காக காப்பு கட்டும் தினத்தன்று இரவு 7 மணிக்கு முளைப்பாரிக்காக விதை விதைப்பார்கள். இப்படிச் செய்வதால் விளைச்சல் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

* பெரியகுளம் வராஹ நதிக் கரையில் அமைந்திருக்கும் ஸ்ரீகௌமாரி அம்மன் கோயில் கொடிமரத்தில் கல் உப்பு சமர்ப்பித்து, அகல்விளக்கில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், கை கால்களில் தேமல், முகத்தில் பருக்கள், தழும்புகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

* திருச்சி விராலிமலையின் கிழக்கு எல்லையில் அமைந்திருக்கும் மெய்கண்ணுடையாள் கோயிலுக்கு, ஈர ஆடையுடன் வந்து அம்மனை வழிபட்டு மனதார வேண்டிக் கொண்டால் எதிரிகளின் தொல்லை இல்லாமல் போகும் என்று ஊர்ப்பெரியவர்கள் சொல்கிறார்கள்.

* கடலூர் மாவட்டம் கஞ்சமநாதபுரம் ஊரின் எல்லையில் கோயில் கொண்டிருக்கிறாள், ‘உருப்பிடி அம்மன்’. ஒவ்வொரு ஆண்டும், ஆடி மாதம் இரண்டு அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமையில் வனத்துக்குள் இருக்கும் அம்பாளின் உற்ஸவரை ஊருக்குள் தூக்கி வருகின்றனர். அப்போது, ஊர்மக்கள் பச்சைப் பயறும் பச்சரிசியும் உடைத்து, அதில் வெல்லம் கலந்து கூழ் காய்ச்சி ஊற்றும் விழா சிறப்பாக நடைபெறுகிறது.

* திருப்பூர் மாவட்டத்துக்கும் திண்டுக்கல் மாவட்டத்துக்கும் இடையில் உள்ள கொழுமம் என்ற ஊரில் அமராவதி ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்திருக்கும் கோட்டை மாரியம்மன் கோயிலில், தாங்கள் நினைத்த காரியம் கைகூட அம்மனின் திருமேனியில் பூக்களை வைத்து வேண்டுகின்றனர். தாங்கள் நினைக்கும் பக்கத்தில் பூ விழுந்தால் நினைத்த காரியத்தை தொடங்குகிறார்கள். எதிர்ப்பக்கத்தில் விழுந்தால் தள்ளிப் போடுகிறார்கள்.

* கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ரயில்வே நிலையத்துக்கு அருகில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீகாமாட்சி அம்மன் திருமணப் பேற்றினை அருள்வதால், கல்யாண காமாட்சி என்று பக்தர்களால் கொண்டாடப் பெறுகிறாள். இந்த அம்மனுக்கு குழந்தைகளே அர்ச்சகர்களாக இருந்து அபிஷேகம் செய்யலாம் என்பது விசேஷம்.

* மதுரை மாட்டுத்தாவணியிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள யா.புதுப்பட்டி கிராமத்தில், அரசமரத்தடியில் கோயில் கொண்டிருக்கிறாள் சடச்சியம்மன். கோயிலின் ஸ்தல விருட்சமான நாட்டுப் பூவரச மரத்தின் ஐந்து இலைகளைக் கிள்ளி, அவற்றுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, விஷக்கடி பட்ட இடத்தில் பூசி, சடச்சிஅம்மன் கோயில் தீர்த்தத்தில் குளித்து வந்தால், எத்தகைய விஷமும் முறிந்துபோகும் என்று சிலிர்ப்புடன் சொல்கிறார்கள் ஊர்மக்கள்.

* உடுமலைப்பேட்டை நகரின் மேற்குக் கோடியில், கிழக்கு நோக்கியபடி காட்சி தருகிறாள் ஸ்ரீமாரியம்மன். குடும்பப் பிரச்னையால் பிரிந்த தம்பதியர், இங்கு வந்து மாரியம்மனை வழிபட்டால் ஒன்று சேருவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

* திருச்சி – லால்குடிக்கு அருகில் உள்ளது மணக்கால். இங்கு ஸ்ரீநங்கையார் அம்மன் கோயிலில் நவராத்திரி 10-வது நாளில், தயிர்ப்பாவாடை எனும் வழிபாடு வெகு பிரசித்தம். அப்போது, அர்த்தமண்டபத்தில் தயிர்சாதத்தைத் தயாரித்து மிகப்பெரிய துணியில் கொட்டிப் பரப்பி வைப்பார்கள். பிறகு, அம்மனுக்கு தயிர்சாதம் நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்குப் பிரசாதத்தை வழங்குவார்கள். இந்தப் பிரசாதத்தைச் சாப்பிட்டு, அம்மனை வேண்டிக்கொண்டால், சகல ஐஸ்வரியங்களும் இல்லத்தில் நிறைந்திருக்கும் என்பர்.

* சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேயுள்ள தாயமங்கலத்தில் கன்னித் தெய்வமாய் கோயில் கொண்டிருக்கிறாள், ஸ்ரீமுத்துமாரியம்மன். இத்தெய்வம் கன்னித்தெய்வமாக இருப்பதால், திருமண வரம் வேண்டுவோர் தாலிப்பொட்டினை அம்மன் காலடியில் சமர்ப்பித்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதன் பயனாக விரைவில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

* தஞ்சை – திருச்சி சாலையில் அமைந்திருக்கிறது வல்லம் ஸ்ரீஏகெளரியம்மன் ஆலயம். ராகு -கேதுவின் அதிதேவதையாகத் திகழும் அம்மன் கருவறையில் இரண்டு சிரசும் எட்டு கரங்களும் கொண்டு, பத்ம பீடத்தில் வடக்கு நோக்கி அமர்ந்தபடி காட்சி தர, அம்மனுக்கு வலப் புறத்தில் ராகுவும், இடப்புறத்தில் கேதுவும் தரிசனம் தருகின்றனர்.

* திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் – முனுகப்பட்டு கிராமத்தில் அழகுற கோயில் கொண்டிருக்கிறாள் பச்சையம்மன். பிள்ளை வரம் வேண்டும் அன்பர்கள் கோயிலுக்கு வந்து பச்சையம்மனிடம் வேண்டிக் கொள்வதுடன், கோயிலுக்குப் பின்னால் உள்ள வேப்பமரத்தில் பிரார்த்தனைத் தொட்டிலைக் கட்டிவிட்டுச் செல்கின்றனர். அம்மனின் அருளால் வேண்டுதல் பலித்ததும், அம்மனுக்கு பச்சைப்புடவை சமர்ப்பித்து வழிபட்டுச் செல்கிறார்கள். சிலர், பச்சைப் பொங்கல் படைக்கிறார்கள். அதேபோல், பிரசாதமாக (மூலிகைகளால் செய்யப்படும்) பச்சை திருநீறு வழங்கப்படுவது, இக்கோயிலின் சிறப்பம்சமாகும்.

* திருவனந்தபுரம் அருகில் உள்ளது ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில். இங்குள்ள மூலவர் விக்கிரகம் பலாமரத்தால் ஆனது. இங்கு சிலப்பதிகார சம்பவங்கள் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

* கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகில் உள்ள திருத்தலம் திருக்கூடலையாற்றூர். இங்குள்ள ஸ்ரீநர்த்தன வல்லபேஸ்வரர் திருக்கோயிலில் இரண்டு அம்மன் சந்நதிகள் அமைந்துள்ளன. ஸ்ரீஞானசக்தி அம்பாள் சந்நிதியில் குங்குமமும் ஸ்ரீபராசக்தி சந்நிதியில் விபூதியும் பிரசாதமாகத் தரப்படுகின்றன.

* சென்னை குரோம்பேட்டையில் உள்ள கணபதிபுரம் ஸ்ரீசெங்கச்சேரி அம்மன் கோயிலில், பெளர்ணமி வழிபாடு வெகு விசேஷம். அன்று மருதாணி இலைகளால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. பின்னர் அவற்றை கன்னிப் பெண்களுக்குப் பிரசாதமாகத் தருகின்றனர்.

* தமிழ்நாட்டில் அம்பாள் என்றும், அம்மன் என்றும் வழிபடப்படும் சக்திதேவி, பிற மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களுடன் வணங்கப்படுகிறாள். எந்தெந்த மாநிலங்களில் என்னென்ன பெயர்கள் என்று பார்ப்போம்:

கர்நாடகம் – சாமுண்டி, கேரளம் – பகவதி, ஆந்திரா – சக்தி, காஷ்மீர் – க்ஷீரபவானி, மகாராஷ்டிரா – துலஜாபவானி, குஜராத் – அம்பாஜி, பஞ்சாப் – ஜ்வாலாமுகி, வங்காளம் – காளி, உத்திரப்பிரதேசம் – விந்தியாவாசினி, அசாம் – காமாக்யா.

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையின் அடிவாரத்தில், படவேடு கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீரேணுகாம்பாள் திருக்கோயிலில் அம்மை, கண் நோய் முதலான எந்த நோயாக இருந்தாலும், அம்பாளுக்கு மஞ்சள் காப்பு செய்து வழங்கப்படும் தீர்த்தத்தைப் பருகி வந்தால், பலன் உண்டு. இதேபோல், நோய்வாய்ப்பட்டு அவதிப்படுவோர், அம்மனை வழிபட்டு, ‘மதில் மேல் விடுதல்’ செய்தால் (கோழியை கோயிலின் மேற்பகுதியில் வீசுதல்) நோய் தீரும்; நிம்மதி பெருகும் என்பது நம்பிக்கை!

* தனக்கென்று கூரை இல்லாமல் உறையூரில் இருப்பதுபோலவே காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூருக்கு அருகில் உள்ள பெரியவெளிக்காடு என்ற ஊரில் கோயில் கொண்டிருக்கிறாள் வெக்காளி அம்மன். எந்த ஒரு பிரச்னை என்றாலும் கோயிலில் கிடைக்கும் பிரார்த்தனைச் சீட்டைப் பெற்று அதில் தங்கள் பிரச்னைகளை எழுதி அங்குள்ள சூலத்தில் கட்டி வேண்டிக் கொண்டால் பிரச்னைகள் விரைவில் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இங்குள்ள அம்மனுக்கு ஆடி மாதத்தில் நடைபெறும் திருவிழா வெகு பிரசித்தம். வரும் ஜூலை மாதம் 29-ம் தேதி முதல் 31-ம் தேதிவரை ஆடித் திருவிழா விமர்சையாக நடைபெற இருக்கிறது. அம்மனுக்கு ஏகதின லட்சார்ச்சனையும், நவசண்டி மகா யாகமும் நடைபெற இருப்பதுடன், மூன்று நாட்களும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற இருக்கின்றன. விழாநாட்களில் ஆன்மிகச் சொற்பொழிவுகளும் கிராமிய கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

இந்த இதழுடன் கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்புப் புத்தகத்தின் அட்டைப் படத்தில் இடம் பெற்றிருப்பது பெரியவெளிக்காடு வெக்காளி அம்மன்.

Leave a Reply