அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் மிகுந்த வேதனை அளித்துள்ளது: தேர்தல் ஆணையம் வருத்தம்
கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்களை அரசியல் கட்சிகள் மற்றும் கட்சி பிரதிநிதிகள் வாக்காளர்களுக்கு அளித்துள்ளது மிகுந்த வேதனையை அளிப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
அரசியல் கட்சிகள் அபரிவிதமான அளவிற்கு பணப்பட்டுவாடா செய்துள்ளதால் ஆர்கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சட்டத்திற்கு புறம்பாக வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மக்களுக்கு பணம் மற்றும் ஏராளமான பரிசுப்பொருட்களை வழங்கியுள்ளனர். பணப்பட்டுவாடாவை எவ்வளவு தடுக்க முயன்றும் நூதன முறையில் பணப்பட்டுவாடா நடந்ததாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
இந்திய அரசியல் சாசனம் 324ன் கீழ் 150, 30 மற்றும் 56 பிரிவு, மக்கள் பிரநிதித்துவ சட்டம் 1952 மற்றும் பொது உட்பிரிவு சட்டம் 1897, 21 பிரிவின் கீழ் தேர்தல் ஆணையத்திற்கு தேர்தலை ரத்து செய்வதற்கான அதிகாரம் இருக்கிறது. இவற்றின் கீழ் தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நேர்மையான சூழல் நிலவும் போது மீண்டும் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சட்டமன்ற உறுப்பினர் இறந்த பின்பு அல்லது பதவி விலகிய பின்னர் 6 மாதத்திற்குள் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.