மத்திய அரசு அலுவலகங்களை சுத்தம் செய்ய கோமியம் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்த கருத்துக்கு மத்திய அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவரது கருத்து நடைமுறையில் சாத்தியமற்றது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி மத்திய அரசின் துறைகளுக்கு எழுதிய கடிதம் ஒன்றில், “அரசு அலுவலகங்களை சுத்தம் செய்யும்போது, பினாயில் பயன்படுத்துவதைவிட கோமியத்தால் தயாரிக்கப்படும் திரவியத்தை பயன்படுத்தினால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.
அமைச்சரின் இந்த அமைச்சர் மேனகா காந்தியின் இந்த கருத்து பாஜகவின் அரசியல் தந்திரங்களில் ஒன்று என்றும் அமைச்சர் கூறிய கருத்து நடைமுறையில் சாத்தியமில்லை என்றும், அரசு ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகள் கூறுகின்றனர்.
மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளன பொதுச் செயலாளர் எம். துரைபாண்டியன் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், “கோமியத்தால் அரசு அலுவலங்கள் சுத்தப்படுத்த வேண்டும் என்ற கருத்தை ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளிடம் இருந்து எதிர்பார்க்கலாம். ஆனால், மத்திய அமைச்சர் ஒருவரே இவ்வாறு கூறுகிறார் என்றால் ஒட்டுமொத்த அமைச்சகமே ஆர்.எஸ்.எஸ். கருத்தியலை அமல்படுத்ததான் முயல்கிறது என்பது தெளிவாகிறது. இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பதற்கு முன்பு அரசு அலுவலகங்களில் பணிபுரியும் துப்புரவு ஊழியர்களின் நிலை குறித்து முதலில் யோசிக்க வேண்டும்.
தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத் தலைவர் ஜே.கணேசன்: மஞ்சள், கோமியம் ஆகியவற்றை பாரம்பரியமாக கிருமிநாசினிகளாக பயன்படுத்தி வந்துள்ளோம். இப்போதும் ஒரு சில தினங்களில் மட்டும் வீடுகளில் கோமியம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அனைத்து அரசு அலுவலகங்களிலும் தினந்தோறும் இதை பயன்படுத்துவது என்பது நடைமுறை சாத்தியமற்றது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தலைவர் ஆர். தமிழ்ச்செல்வி: தமிழகத்தில் சுமார் ஆயிரம் அரசு அலுவலக வளாகங்கள், 10 ஆயிரம் அலுவலக கட்டிடங்கள் உள்ளன. பல அலுவலகங்கள் பராமரிப்பின்றி கிடக்கின்றன. குறைந்தபட்சம் பினாயில் பயன்படுத்திதான் சுத்தம் செய்து வருகின்றனர். திடீரென்று அனைத்து அலுவலகங்களிலும் கோமியம் பயன்படுத்துவது சாத்தியமில்லாதது.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் ஆர்.ஷண்முகராஜன்: முதலில் துப்புரவு ஊழியர்களை அரசு நியமிக்க வேண்டும். அனைத்து துப்புரவு ஊழியர்களும் தனியார் மூலம் நியமிக்கப்படுவதால் அவர்களுக்கு நியமிக்கப்பட்ட குறைந்தபட்ச சம்பளம் ரூ.330-க்கு பதில் ரூ.240 தான் கிடைக்கிறது. அவர்களுக்கு நீளமான கையுறைகளும், கம் பூட்ஸ் காலணிகளும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் உள்ளது.
மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர்கள் சங்க அகில இந்திய தலைவர் கே.கணேசன்: சுற்றுச்சூழலுக்கு நல்லது என்றால் இத்தனை ஆண்டுகள் இதுபற்றி ஏன் கூறவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தைரியமாக இதுபோன்ற கருத்துகளை பேசி வருகின்றனர். இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கும் என்று தோன்றுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.