அரசு உதவித் தொகையுடன் உயர்கல்வி பயில மாணவர்கள் தேர்வு

அரசு உதவித் தொகையுடன் உயர்கல்வி பயில மாணவர்கள் தேர்வு

college_admissionஅரசுப் பள்ளியில் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள், தலைசிறந்த தனியார் பள்ளிகளில் அரசு உதவித் தொகையுடன் உயர் கல்வி பயில தேர்வு செய்ய இருப்பதாக சென்னை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசுப் பள்ளிகளில் படித்து 10-ஆம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாணவர்கள், சிறந்த தனியார் பள்ளிகளில் சேர்ந்து பயிலும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நிகழாண்டில் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சார்ந்த 3 மாணவர்களும், 3 மாணவிகளும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த 2 மாணவர்கள், 2 மாணவிகளும் என மொத்தம் 10 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அதோடு, தமிழகத்தில் அவர்கள் விரும்புகிற சிறந்த தனியார் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து மேல்நிலைக்கல்வி பெற அனுமதித்து அரசால் நிதி உதவியும் அளிக்கப்படுகிறது.
இத்திட்டத்தில் உதவி பெற விரும்பும் மாணவ, மாணவிகளின் பெற்றோர், பாதுகாவலர் ஆகியோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.28 ஆயிரத்துக்கு மிகாமல், 2 ஆண்டுகளுக்கு ரூ.56 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது.
எனவே தகுதியுடைய மாணவ, மாணவிகள், “”சென்னை-1, சிங்காரவேலர் மாளிகை, 2-ஆவது தளத்தில்’ செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை அலுவலரை தொடர்பு கொண்டு பயனடையலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply