அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நீதிமன்றம் அனுமதி
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தடையை மீறி வேலைநிறுத்தம் செய்தால் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு தொடர சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ கடந்த வியாழக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்தது. இந்த வேலைநிறுத்தத்தை தவிர்க்க நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் பல பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் ஊழியர்கள் இல்லாமல் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் சேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வேலை நிறுத்தத்தை ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது என்று கூறி போராட்டத்துக்கு தடைவிதித்து உத்தரவிட்டார். மேலும் வரும் 14-ஆம் தேதி ஜாக்டோ ஜியோ அமைப்பின் செயலாளர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தடையை மீறி போராட்டம் நடத்தி வருவதாக வழக்கறிஞர் சேகரன் மதுரை கிளை நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்தார் இதை தொடர்ந்து நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் நீதிமன்ற அவமதிப்பு வழக்காக தொடர்ந்தால் விசாரிக்கலாம் என்று கூறினர்.