அறிவாலயம் என்ன தலைமைச்செயலகமா? ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயகுமார் கேள்வி
காவிரி பிரச்சனை குறித்து அவ்வப்போது அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி வரும் திமுக செயல் தலைவர் ஸ்டாலினை நோக்கி, காவிரி பிரச்சனை குறித்து அண்ணா அறிவாலயத்தில் பேசி வரும் ஸ்டாலின், அதனை தலைமைச்செயலகம் போல் நினைத்து கொண்டாரா? என்று அமைச்சர் ஜெயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது: “திமுக செயல் தலைவர் எப்போதாவது அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டினால் அதற்கு மதிப்பு இருக்கும். ஆனால், அவர் தினமும் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டுகிறார். அறிவாலயத்தை தலைமைச் செயலகமாக மு.க.ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருக்கிறார். வெற்று அறிக்கைகளை வெளியிடுகிறார். தமிழக மக்கள் அவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அனைத்து விதங்களிலும் சட்டப் போராட்டம் நடத்தி உரிமையை நிலைநாட்டியிருக்கிறது. உரிமை நிலைநாட்டப்பட்டிருப்பதை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. காவிரி மேலாண்மை ஆணையத்திடம் மத்திய அரசின் தலையீடு இல்லை. உச்ச நீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அத்தீர்ப்பை வாசித்துப் பார்க்க வேண்டும். காவிரி நீரை திறக்கும் அதிகாரம் எந்த மாநில அரசுக்கும் இல்லை. ஆணையத்திடமே அந்த உரிமை உள்ளது.
தான் ஆரம்பிக்கும் கட்சியில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் என ரஜினி கூறியிருப்பது, அவருக்கு காலம் கடந்த ஞானோதயம் வந்துள்ளதையே காட்டுகிறது. அரசு நிர்வாகத்தில் பெண்களுக்கு அதிக இடங்களை ஒதுக்கீடு செய்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த கட்சி அதிமுக தான். உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தவர் ஜெயலலிதா. அதிகமான மகளிர் நீதிமன்றங்களை அமைத்தார்”
இவ்வாறு அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்
அண்ணா அறிவாலயம், ஸ்டாலின், அனைத்து கட்சி கூட்டம், திமுக, ஜெயகுமார்
Is Anna Arivalayam is secretariet? asked Jayakumar