அலைபாயும் கூந்தலுக்கு என்ன செய்ய வேண்டும்?
ஆறே வாரத்தில் அபாரமான முடி வளர்ச்சி என போட்டோஷாப் ஜாலங்களை விளம்பரமாக வெளியிட்டு, கல்லா கட்டிக்கொண்டிருக்கின்றன, கூந்தல் தைல நிறுவனங்கள். முடி கொட்டுதல் என்பது இன்று பரவலாகச் சொல்லப்படும் பிரச்னை. முறையான பராமரிப்பு இருந்தால், முடி கொட்டுதல் பிரச்னையைப் போக்க முடியும்.
வெயிலில் அலைவது, தவறான உணவுப்பழக்கம், உடல்சூடு, தொடர்ந்து கெமிக்கல் சிகிச்சைகள் எடுப்பது, வீரியம் உள்ள கெமிக்கல் ஷாம்பு பயன்படுத்துவது, கலரிங் செய்வது, மனஅழுத்தம், டென்ஷன் போன்ற பல்வேறு காரணங்களால் முடி கொட்டுதல் பிரச்னை இருக்கலாம். ஆனால், முறையாகப் பராமரித்தால் மீண்டும் முடி வளர்வது உறுதி.
ஊட்டச்சத்துக் குறைபாடு, தைராய்டு பிரச்னை, மரபியல் காரணங்கள், வழுக்கை விழுதல், பருவம் எய்தும் சமயம், மெனொபாஸ், கர்ப்பகாலம் போன்ற காரணங்களால் முடி கொட்டும் பிரச்னை ஏற்படலாம். மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது முக்கியம். இதனுடன் உணவுமுறையை ஊட்டச்சத்துள்ளதாக மாற்றிக்கொள்வது அவசியம்.
மல்டிப்பிள் எண்ணெய்
வைட்டமின் இ எண்ணெய், பாதாம், ஆலிவ் மற்றும் தேங்காய் எண்ணெயைச் சம அளவில் கலந்து, மிதமாகச் சூடுபடுத்தி, கூந்தலில் தடவி அரை மணி நேரம் ஊறவிட வேண்டும்.
மசாஜ் அண்ட் ஸ்டீமிங்
கைகளால் முடியின் வேர்ப்பகுதியில் முன்னும் பின்னுமாக மசாஜ் செய்ய வேண்டும். பிறகு, முடிகளின் ஃபாலிக்கில்ஸ் திறப்பதற்காக நீராவி சிகிச்சை தரப்படும்.
ஹேர் பேக்
நெல்லிக்காய், வெந்தயம், வேப்பிலை, செம்பருத்திப் பூ மற்றும் இலைகள் போன்ற பல்வேறு மூலிகைகள் கலந்த ஹேர் கேர் பவுடரை முட்டையின் வெள்ளைப் பகுதி மற்றும் தயிரில் கலந்து, கூந்தலில் தடவி, 45 நிமிடங்கள் கழித்து அலச வேண்டும்.
பலன்கள்
வறட்சி நீங்கி, பட்டுப்போன்ற மென்மையான கூந்தலாக மாறும்.
கைகளால் மசாஜ் செய்வதால், தலையில் ரத்த ஓட்டம் சீராகச் செல்லும். ரிலாக்ஸான ஓய்வு நிலை கிடைக்கும்.
ஸ்டீமிங் செய்யும்போது, தலையில் உள்ள பாலிக்கில்ஸ் திறக்கப்பட்டு, சத்துக்கள் உள்ளே செல்லும்.
மூலிகைகள் கலந்த ஹேர்பேக் கூந்தலுக்கு ஓர் ஊட்டச்சத்துப் பொக்கிஷம். வெளிப்புறச் சத்துக்கள் மூலமாகக் கூந்தலைப் பலப்படுத்த உதவும்.
நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி கூந்தலை வலுவாக்கும். வேப்பிலை, கிருமிகளை அழித்து, முடி உதிர்தலைத் தடுக்கும். வெந்தயம் முடியின் வேர்க்கால்களைப் பலப்படுத்தும். பொடுகை நீக்கும். செம்பருத்திப் பூ மற்றும் இலைகள் முடிக்குப் பளபளப்பைத் தந்து மிருதுவாக்கும்.