ஆசனூர் அடர்ந்த வனப்பகுதியில் மருத்துவ குணம் நிறைந்த மூங்கில் அரிசி சேகரிக்கும் மலைவாழ் மக்கள்

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான மூலிகை செடிகள், கொடிகள், விலை உயர்ந்த மரங்கள் உள்ளன. மேலும் இந்த வனப்பகுதியில் ஏராளமான மலை கிராமங்களும் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் பெரும்பாலும் கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்கள் தங்களது தோட்டத்தில் சிறுதானியங்கள் மற்றும் மலை காய்கறிகளை அதிக அளவில் பயிரிட்டு சமவெளி பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். இதேபோல் தங்களது கால்நடைகளை மேய்ச்சலுக்காக அடர்ந்த வனப்பகுதிக்கு அழைத்து சென்று வருகின்றனர். வனப்பகுதி மற்றும் விவசாய தோட்டத்தை நம்பியே இவர்களது வாழ்க்கை நடந்து வருகிறது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான மூங்கில் மரங்கள் நிரம்பி காணப்படுகிறது. தற்போது வனப்பகுதியில் நிலவும் வறட்சியின் காரணமாக மரம், செடிகள் பசுமை இழந்து காணப்படுகிறது. மேலும் வனப்பகுதியில் கடுமையான காற்றும் வீசி வருகிறது. இதன் காரணமாக மூங்கில் அரிசி சேகரிக்கும் பணியில் மலைவாழ் மக்கள் ஈடுபட்டுள்ளனர். 60 வயதான மூங்கில் மரத்தில் இருந்து காற்றின் காரணமாக தற்போது மூங்கில் நெல் கீழே விழத்தொடங்கி உள்ளது.

இதை சேகரிக்க ஏராளமான மலைவாழ் மக்கள் வனப்பகுதியில் முகாமிட்டுள்ளனர். சர்க்கரை நோய், புற்று நோய், மஞ்சள் காமாலை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருத்துவ குணம் நிறைந்த இந்த மூங்கில் அரிசியை மலைவாழ் மக்கள் பதப்படுத்தி விற்பனை செய்து வருகின்றனர்.

வனப்பகுதியை நம்பியே எங்கள் வாழ்க்கை உள்ளது. தற்போது கடுமையான காற்று வீசி வருவதால் 60 வயதான மூங்கில் மரத்தில் இருந்து மூங்கில் நெல் விழத் தொடங்கி உள்ளது. நாங்கள் இதை சேகரித்து மூங்கில் அரிசியாக பதப்படுத்தி விற்பனை செய்து வருகிறோம். தினமும் சுமார் 3 கிலோ வரை மூங்கில் நெல் சேகரித்து வருகிறோம். பின்னர் நெல்லில் இருந்து மூங்கில் அரிசி எடுத்து பதப்படுத்தி சாலை ஓரங்களில் விற்பனை செய்து வருகிறோம். வாகன ஓட்டிகள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

வெளி இடங்களில் கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் நாங்கள் கிலோ ரூ.120-க்கு மட்டுமே விற்பனை செய்து வருகிறோம். இதனால் தினமும் ரூ.300 வரை வருமானம் கிடைக்கிறது. ஒரு நாள் முழுவதும் மூங்கில் நெல்லை சேகரிக்க வனப்பகுதிக்கு செல்வோம். மறுநாள் நெல்லை பிரித்தெடுத்து அரிசியாக மாற்றி விற்பனை செய்வோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.