ஆசியாவிலேயே மிகப் பெரிய சிவலிங்கம்!
கோடிலிங்கேஸ்வரா:
முழுமுதற்கடவுள் என்று போற்றப்படும் சிவபெருமானுக்கு ஏராளமான திருக்கோயில்களை அமைத்து, சைவ சமயத்தை உலகம் முழுக்க அறியச் செய்தனர் நம் முன்னோர்கள். உலகமே வியந்து போற்றும் ஆதி சிவனின் புகழ்பாடி, கட்டடக் கலையில் சிறந்து விளங்கும் எண்ணற்ற திருக்கோயில்களை நாம் கண்டிருப்போம். அதுபோன்று ஆசியாவிலேயே மிகப்பெரிய மற்றும் அதிக அளவில் சிவ லிங்கங்கள் அமைந்திருக்கும் ஓர் திருக்கோயில், கர்நாடக மாநிலத்தில் தங்க வயலுக்குப் புகழ்பெற்ற கோலார் என்னும் இடத்தில் அமைந்திருக்கிறது. “கோடி லிங்காலு” என்று அழைக்கப்படும் கோடி லிங்கேஸ்வரர் திருக்கோயிலில் அமைந்திருக்கும் சிவ லிங்கத்தின் உயரம் 108 அடி.
லிங்க வழிபாடு:
108 அடி உயர சிவ லிங்கத்துக்கு நேர் எதிரிலேயே, 35 அடி உயரத்தில் நந்தியின் சிலையும் அமைந்திருக்கிறது. 1980 – ஆம் ஆண்டு சுவாமி சாம்ப சிவமூர்த்தி என்பவரால் இக்கோயில் கட்டப்பட்டு முதன்முதலில் சிவ லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அவரைத் தொடர்ந்து இன்று வரை இக்கோயிலுக்கு வருகை தரும் பல லட்சம் பக்தர்களும் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேற சிவ லிங்கங்களைக் கொண்டுவந்து, திருக்கோயில் வளாகத்தில் பிரதிஷ்டை செய்துவருகின்றனர். அதன் விளைவு, இன்று கோடிக்கணக்கில் சிவ லிங்கங்கள் இத்திருக்கோயிலின் வளாகத்தில் நிறைந்திருப்பதைக் காணலாம்.
சிவ பஞ்சயாதி:
இத்திருக்கோயில் வளாகத்துக்குள் அமைந்திருக்கும் கன்னிகா பரமேஸ்வரி சந்நிதியில் ‘சிவ பஞ்சயாதி’ என்று அழைக்கப்படும் சிவ லிங்கம் ஒன்று இருக்கிறது. இங்கே, பார்வதி, விநாயகர், முருகன், நந்தி ஆகிய தெய்வங்கள் அனைத்தும் சிவ பஞ்சயாதி லிங்கத்தைச் சுற்றி நின்று வணங்குவது போன்ற காட்சியைக் காணலாம். சிவ ராத்திரி போன்ற சிவனுக்குரிய தினங்களில் விசேஷ நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
மேலும் இக்கோயில் வளாகத்தினுள் கருமாரியம்மன், ராமர், லக்ஷ்மணர், ஆஞ்சநேயர், விஷ்ணு, பிரம்மா, அன்னபூரணி, ஆகியோர்களின் சந்நிதிகளும் உள்ளன.
நாகலிங்க மரம்:
திருமண வரம் வேண்டுவோர் இத்திருக்கோயிலில் அமைந்திருக்கும் நாகலிங்க மரத்தில், மஞ்சள் கயிற்றைக் கட்டிவிட்டு, சிவ லிங்கத்தை வணங்கினால் வெகு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அமைவிடம்:
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து கோலார் – பங்கார்பேட்டை சாலையில் இக்கோயிலை அடையலாம். கோலார் தங்கச் சுரங்கத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் இக்கோயில் அ மைந்திருக்கிறது.
கோடி லிங்கங்களை தரிசனம் செய்து கோடி புண்ணியம் பெறுவோம்.