ஆட்சி மாற்றத்திற்கு பின் இந்தியா-இலங்கை உறவில் பாதிப்பு: ராஜபக்சே
பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே கலந்து கொண்டு பேசியதாவது:-எனது தலைமையில் இலங்கையில் ஆட்சி நடந்த போது, இந்தியாவுடனான நட்புறவு சிறப்பாக இருந்தது. இந்தியாவில் 2014-ம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு பின்பு புதிய அரசு உருவானதும் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இருந்த உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் இரு நாடுகளிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது, இதுபோன்ற உறவில் பாதிப்பு ஏற்படுவது உண்டு. இரு நாடுகள் இடையே உள்ள உறவில் பாதிப்பு ஏற்படுவது சரியல்ல.
2014-ம் ஆண்டுக்கு முன்பாக 1980-ம் ஆண்டிலும் இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது கூட இந்தியா-இலங்கை உறவில் விரிசல் உண்டாகி இருந்தது. என்றாலும், இரு நாடுகளுக்கு இடையே உண்டாகும் விரிசல்களை தவிர்த்திருக்கலாம்.
இந்தியா மற்றும் இலங்கையின் அரசியல் கட்சி தலைவர்கள் இடையே உறவை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமானதாகும். ஏனெனில் வெளியுறவுத்துறை, பொருளாதாரம், பாதுகாப்பு ஆகியவை அரசியல் கட்சி தலைவர்களிடமே இருக்கிறது. இலங்கையில் எதிர்க்கட்சியாக நான் இருந்தாலும், இந்தியாவில் ஆளுங்கட்சியுடன் நல்ல உறவு இருக்கிறது. அண்டை நாடுகளான இந்தியாவும், இலங்கையும் தங்களது பாதுகாப்புக்கு உதவி செய்ய வேண்டும்.
இந்திய தலைவர்கள் எதிர்பார்ப்பது இலங்கை மூலம் 3-வது நபரால் எந்த அச்சுறுத்தலும் வந்து விடக்கூடாது என்று நினைக்கிறார்கள். அதையே இலங்கை தலைவர்களும் எதிர்பார்க்கின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக இரு நாடுகளுடையே நடைபெறும் பேச்சு வார்த்தை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.