ஆண்களும் பெண்கள் நலனில் அக்கறை எடுக்க வேண்டும்

ஆண்களும் பெண்கள் நலனில் அக்கறை எடுக்க வேண்டும்
women
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ‘பெண் நலம்’ மருத்துவமனை நடத்திய புற்றுநோய் விழிப்பு உணர்வு மற்றும் பரிசோதனை முகாம், மார்ச் 12, 13 தேதிகளில் சென்னை, மேற்கு மாம்பலத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா ஹிந்து வித்யாலயா பிரைமரி பள்ளியில் நடைபெற்றது. ஏராளமான பெண்கள் பங்குபெற்ற இந்நிகழ்ச்சியில் பெண்களுக்கு பாப் ஸ்மியர் (pap smear) மற்றும் மேமோகிராம் (mamogram) பரிசோதனைகள் குறைந்த கட்டணத்தில் செய்யப்பட்டது. மேலும், ‘பல்கிஸ்’ நாடகக்குழுவினரும், ‘முற்றம்’ நாடகக்குழுவினரும், ‘நண்பர்கள்’ தப்பாட்டம் குழுவினரும் விழிப்பு உணர்வு ஏற்படுத்தினர்.

‘பெண் நலம்’ அமைப்பின் செயலாளர் கீதா மோகன், “நம் நாட்டில் ஆண்டுக்கு சுமார் 7 லட்சம் பெண்கள் கேன்சரால் பாதிப்படைகின்றனர். அதில் ஒரு லட்சம் பேர் மார்பகப் புற்றாலும், 1.5 லட்சம் பேர் கருப்பை வாய்ப்புற்றாலும் பாதிக்கப்படுகின்றனர். விழிப்பு உணர்வு இன்மையே இதற்கு முக்கியக் காரணம். 30 வயதுக்கு மேலான பெண்கள், கருப்பைவாய்ப் புற்றைக் கண்டறியும் பாப் ஸ்மியர் பரிசோதனையையும், மார்பகப்புற்றைக் கண்டறியும் மேமோகிராம் பரிசோதனையையும் செய்துகொள்ள வேண்டியது அவசியம். ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்தால், குணப்படுத்துவது எளிது. அதனால்தான் அது குறித்த விழிப்பு உணர்வு மற்றும் குறைந்த கட்டணத்தில் பரிசோதனை, சிகிச்சையை அளித்து வருகிறோம்’’ என்றார்.

பார்வையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கதிர்வீச்சு மருத்துவ நிபுணர் டாக்டர் கலாவதி, ‘‘பெண்கள் தங்களைத் தியாகம் செய்து தங்கள் குடும்பத்தின் நலம் பேணுகின்றனர். அதேபோல, ஆண்களும் அவர்களின் நலனில் அக்கறை எடுக்க வேண்டும்’’ என்றார்.

புற்றுநோயைப் பற்றி பேசிய மகப்பேறு மருத்துவர் சுஜிதா சுந்தரராமன், “20 வயதை அடைந்த பெண்கள் அனைவரும் கட்டாயம் மார்பக சுயபரிசோதனையை செய்துகொள்ள வேண்டும். மாற்றம் தெரிந்தால், அலட்சியப்படுத்தாமல் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க வேண்டும். மாதவிடாய் நாட்களில் 6 மணி நேரத்துக்கு ஒருமுறை பேடு மாற்ற வேண்டும். சிறுநீர் அடக்கக்கூடாது. இதையெல்லாம் வீட்டில் உள்ள பெண் பிள்ளைகளுக்குச் சொல்லி வளர்ப்பது பெற்றோரின் கடமை’’ என்றார்.

முகாமின் பயனாளர்களில் ஒருவரான சுகன்யா, ‘‘மேமோகிராம்னா என்னனு இங்கதான் தெரிஞ்சுக்கிட்டேன். மார்பக சுயபரிசோதனைக்காக கொடுத்த அட்டவணை ரொம்பவே பயனுள்ளது. எனக்குத் தெரிஞ்சவங்களுக்கு எல்லாம் கொடுத்து விழிப்பு உணர்வு ஏற்படுத்துவேன்’’ என்றார். பார்வையாளராகப் பங்குபெற்ற தேவி இளங்கோ, ‘‘நான் கிராமத்துல இருந்து வந்திருக்கேன். மருத்துவம், பரிசோதனை, சிகிச்சை பத்தியெல்லாம் எதுவும் தெரியாத கிராமப் பெண்களுக்கு இதுபோன்ற விழிப்பு உணர்வு முகாம்கள் நம்மைவிட முக்கியம்னு நினைக்கிறேன்’’ என்றார்.

Leave a Reply