ஆந்திராவில் பொங்கல் விழாவான மகர சங்கராந்தியையொட்டி சேவல் சண்டை நடத்தப்படுவது உண்டு.
சேவலின் காலில் கத்தியை கட்டி போட்டி நடத்தப்படுவதால் சேவல் சண்டைக்கு ஐகோர்ட்டு தடை விதித்தது.
ஆனாலும் நேற்று கோர்ட்டு தடையை மீறி பல இடங்களில் சேவல் சண்டை நடந்தது. ஆந்திராவில் கிருஷ்ணா, குண்டூர், கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில்தான் சேவல் சண்டை பிரபலமாக நடத்தப்படுவது உண்டு. கோர்ட்டு தடையால் கடந்த ஆண்டு போட்டியாளர்கள் அடக்கி வாசித்தனர். ஆனால் இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்துடன் கோலாகலமாக நடத்தப்பட்டது.
பல இடங்களில் மந்திரிகளும், ஆளும் கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்களே போட்டியை தொடங்கி வைத்தனர். இதனால் போலீசார் அந்த பக்கமே வரவில்லை.
4 மாவட்டங்களில் 100–க்கும் மேற்பட்ட இடங்களில் சேவல் சண்டை மைதானம் அமைக்கப்பட்டு இருந்தது ஆயிரக்கணக்கான கோழிகள், லட்சக்கணக்கான மக்கள் என பந்தய மைதானங்கள் களை கட்டியது.
மசூலிப்பட்டினத்தில் சேவல் சண்டையை மந்திரி கொல்லு ரவிந்திரா தொடங்கி வைத்தார். கிருஷ்ணா மாவட்டத்தில் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. சித்தம்மா தேனி பிரபாகரன் தொடங்கிவைத்தார்.
கோதாவரி மாவட்டத்தில் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் ஆஞ்சநேயலு, வெங்கடேஸ்வரராவ், சிவா ஆகியோர் தாங்களே பந்தய கோழியை சண்டைக்கு விட்டனர்.
கிருஷ்ணா மாவட்டத்தில் புஜ்ஜய்யா சவுத்திரி எம்.எல்.ஏ. போட்டியை தொடங்கி வைத்தார்.
முரமுல்லா கிராமத்தில் மட்டும் 1000 சேவல்கள் பந்தயத்தில் கலந்து கொண்டனர்.
பொங்கலை முன்னிட்டு நேற்று இரவு பகலாக பந்தயம் நடந்தது. முதல் நாள் மட்டும் ரூ.100 கோடிக்கு சூதாட்ட பணம் புழங்கியது. ஐதராபாத், தெலுங்கானாவிலும் இருந்து கார்களில் மக்கள் வந்து பந்தயத்தை ரசித்து பார்த்தனர்.
சில இடங்களில் பெயர் அளவில் போலீசார் தலையிட்டு கோழிகளை பறிமுதல் செய்தனரே தவிர பல இடங்களில் கண்டு கொள்ளாதது மட்டும் அல்லாமல் காணாமலே போய் விட்டனர்.
இதுபற்றி பந்தயக்காரர்கள் கூறும் போது, “சேவல் காலில் கத்தி கட்டி பந்தயம் நடத்துவதற்கு தான் கோர்ட்டு தடை விதித்தது. நாங்கள் கத்தி கட்டவில்லை” என்றனர்.
இன்றும் மாவட்டத்தின் பல இடங்களில் சேவல் சண்டை நடந்தது.