ஆன்லைனில் பறிபோகும் பணம்… வங்கிகளே உடந்தையா?
முன்பெல்லாம் திருடர்கள் பதுங்கிப் பதுங்கி பயந்து பயந்து பிக் பாக்கெட் அடிப்பார்கள். அல்லது பிளேடு போடுவார்கள். இப்போது அந்தக் காலமெல்லாம் மலையேறிவிட்டது. இந்த ஸ்மார்ட் போன் யுகத்துக்கேற்ப தங்களை அப்டேட் செய்துகொண்டு, உங்களுக்குத் தெரிந்தே உங்கள் பணத்தைத் திருடும் அளவுக்கு பலே டெக்னாலஜி திருடர்கள் அதிகரித்துவிட்டார்கள்.
கணேஷ்குமார் தனது அலுவலகத்தில் பிசியாக வேலைப் பார்த்துக்கொண்டிருந்த சமயம் பார்த்து அவருக்கு ஒரு போன் வந்தது. அதற்கு சில நாட்களுக்கு முன்புதான் கணேஷ்குமார் தனது டெபிட் கார்டுக்கான காலம் முடியவிருப்பதாகவும், எனவே புதிய கார்டினைத் தரவேண்டும் என்றும் அவர் கணக்கு வைத்திருக்கும் பொதுத் துறை வங்கியிடம் விண்ணப்பம் செய்திருந்தார்.
போனில் பேசியவர், அவர் கணக்கு வைத்திருக்கும் அந்த பொதுத் துறை வங்கியில் இருந்து பேசுவதாகவும், அவரது டெபிட் கார்டு எக்ஸ்பைரி ஆகவிருப்ப தால், புதிய கார்டு வாங்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் டெபிட் கார்ட் நம்பரையும், ரகசிய பின் நம்பரையும் தந்தால் இப்போது பயன்படுத்தும் கார்டையே புதுப்பித்துக் கொள்ளலாம் என்று கூறி, அத்தனை ‘ரகசிய’ விவரங் களையும் கேட்டு வாங்கிவிட்டார். போனில் பேசியவர் வங்கி ஊழி யர் எனவும், பக்காவாக இங்கிலீஷில் பேசியதாலும் அவர் மீது எந்த சந்தேகமும் கணேஷ்குமாருக்கு வரவில்லை. ஆனால், அடுத்த நாள் கணேஷ்குமாரின் கணக்கில் இருந்து ரூ.3,000 காணாமல் போனது.
வங்கியில் அவர் புது ஏ.டி.எம். கார்டுக்கு விண்ணப்பித்த தகவல் எப்படி வேறு ஒருவருக்குத் தெரிந்தது? அந்த ஆசாமிக்கு வங்கியில் வேலை பார்ப்பவர்களே உதவினார்களா? அல்லது வங்கியில் வேலை பார்ப்பவர்களே தங்கள் வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையோடு விளையாடுகிறார்களா என்பது போன்ற பல கேள்விகள் எழவே செய்கின்றன.
இது பற்றி பொதுத் துறையைச் சேர்ந்த வங்கி அதிகாரிகளிடம் கேட்டால், பொறுப்பான பதில் தரப்படுவதில்லை. ஏ.டி.எம். கார்டு பின்நம்பரை யார் கேட்டாலும் தரக்கூடாது என்று நாங்கள் பலமுறை சொல்லி இருக்கிறோம். அப்படியிருக்க நீங்கள் ஏன் தந்தீர்கள் என்றுதான் கேட்கிறார்கள். வங்கியிடம் புது கார்டு விண்ணப்பித்த விஷயம் வெளியாள் ஒருவருக்கு எப்படித் தெரிந்தது என்கிற கேள்விக்கு அவர்களிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.
வங்கிக்கு தனது வாடிக்கை யாளர்களின் பணத்தைப் பாதுகாக்கும் உச்சகட்ட பொறுப்பு இருக்கிறபோதிலும், சில உஷார் நடவடிக்கைகளை வாடிக்கையாளர்களும் எடுத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில் இவர்தான் குற்றவாளி என்று அறிந்துகொள்ளக்கூட முடியாதபடி, நம் அருகிலோ, பக்கத்து வீட்டிலோ, பக்கத்து ஊரிலோ, வேறு நாட்டிலோ உலாவிக் கொண்டிருக்கும் ‘டெக் குற்றவாளி’களை நாம் நெருங்குவதுகூட கடினமே. எனவே, எச்சரிக்கையாக இருக்க வேண்டியது நாம்தான்.
இதுமாதிரியான ‘ஹைடெக் திருடர்களிடம்’ சிக்காமல் நம்மைக் காப்பாற்றிக் கொள்வது எப்படி என்பதைப் பற்றி ஐசிஐசிஐ வங்கியின் மூத்த பொது மேலாளர் குசல் ராயிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.
“பணத்தைக் கையில் வைத்திருக்கும்போது அதில் நம் பொறுப்பு மட்டும்தான் இருக்கிறது. ஆனால், டெக்னாலஜி பெரிதும் வளர்ந்துவிட்ட நிலையில் எல்லோரும் ‘பிளாஸ்டிக் மணி’ அதாவது டெபிட், கிரெட் கார்டுகள் மற்றும் இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் என பணத்தைக் கையாளும்போது, அதனை வைத்திருப்பவர், அந்தச் சேவையை நெறிப்படுத்துபவர் என இருவரின் பொறுப்பும் இருக்கிறது.
காஷ்லெஸ் ட்ரான்சாக்ஷன் நமக்கு எந்தளவுக்கு வசதியைத் தந்திருக்கிறதோ, அந்த அளவுக்கு அது நமக்கு பொறுப்புகளையும் தந்திருக்கிறது. கவனத்துடன் இருந்தால், இந்த டிஜிட்டல் ட்ரான்சாக்ஷன் மக்களுக்கு ஒரு மகத்தான பொக்கிஷம்தான்.
பணப் பரிவர்த்தனைகளின் போது பயன்படுத்தும் ரகசிய விவரங்களை எப்போதும் யார் கேட்டாலும் கொடுக்காதீர்கள், வங்கிகள் ஒருபோதும் அந்த விவரங்களை யாரிடமும் கேட்பதில்லை. உதாரணத்துக்கு, உங்களுடைய கார்டு எண், எக்ஸ்பைரி தேதி, சிவிவி எண், கிரிட் வால்யூ, பிறந்த தேதி, ஏடிஎம் ரகசிய பின் எண், 3டி செக்யூர் பின் எண் மற்றும் ஒன் டைம் பாஸ்வேர்ட் போன்றவற்றை போன் மூலம் யார் கேட்டாலும் கொடுக்கவே கொடுக்காதீர்கள். அப்படிக் கொடுத்தால் உங்களுடைய வீட்டுச் சாவியை முன்பின் தெரியாத ஒருவரிடம் கொடுத்துவிட்டு செல்வதைப் போலத்தான் ஆகும்.
உங்களின் ஏ.டி.எம். கார்டு, டெபிட் கார்டு பற்றிய ரகசிய விவரங்களை யாரேனும் கேட்டால், கேட்பவரின் போன் நம்பரை நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியிடம் உடனடியாகத் தெரிவிப்பது அவசியம். அதேபோல், வங்கிகள் உங்களைத் தொடர்புகொள்ள நீங்கள் கொடுத்துள்ள மொபைல் எண், இமெயில் ஐடி போன்ற விவரங்களை நீங்கள் மாற்றினால், வங்கியிடம் அதை தெரிவித்து அந்த விவரங்களை அப்டேட் செய்துகொள்ள வேண்டும்.
ஏனெனில் இப்போதெல்லாம் பயன்படுத்தாத எண்கள் வேறு ஒருவருக்கு எளிதாக மாற்றி வழங்கப்படுகிறது. அப்படி இருக்கும்பட்சத்தில் உங்களுடைய ரகசிய விவரங் களை வேறு ஒருவர் அறிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ள முடியும். சரியான தகவல் தொடர்பு விவரங்களை நீங்கள் கொடுப்பதன் மூலம், உங்களுடைய கணக்கு குறித்த செயல்பாடுகளை உங்களுக்குத் தொடர்ந்து தெரிவிக்க வங்கி களுக்கு உதவியாக இருக்கும். யாரேனும் ஒரு மூன்றாம் நபர் உங்களது கணக்கைப் பயன்படுத்த முயற்சித்தாலும் உங்களுக்கு அது தெரியவரும்.
நீங்கள் வெளிநாடுகளுக்குப் போகும்போது நீங்கள் பயன்படுத்தும் கார்டு தவிர, மற்ற கார்டுகளின் பரிவர்த்தனை வரம்பை குறைக்கும்படி வங்கியிடம் சொல்வதன் மூலம் நீங்கள் ஊரில் இல்லாத சமயங்களில் உங்களுடைய கணக்கைப் பெரிய அளவில் யாராலும் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க முடியும்.
மேலும், உங்கள் கணக்கு குறித்த செயல்பாடுகளை நீங்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மாதம் ஒருமுறை வங்கியிடமிருந்து ஸ்டேட்மென்ட் வாங்கிப் பார்ப்பது அவசியம். ஏதேனும் பரிவர்த்தனைகள் உங்களுக்குத் தெரியாமல் நடந்திருந்தால், அதை வங்கியிடம் உடனடியாக தெரிவித்து அதற்கான பதிலைப் பெற வேண்டும். வங்கியின் தரப்பில் தவறு நடந்திருந்தால், உங்களுக்கு அந்த இழப்புத் தொகை திருப்பித் தரப்படும். அதேபோல், நீண்ட நாட்களுக்குக் கணக்கைப் பயன்படுத்தாமல் வைத்திருப் பதும் தவறு. அவ்வப்போது பணத்தைப் போடுவதும் எடுப்பதும் நடக்க வேண்டும். அப்படிப் பயன்படுத்தாத கணக்கை உடனடியாக குளோஸ் செய்துவிட வேண்டும்.
பிளாஸ்டிக் கார்டு பரிவர்த்தனைகளை மேலும் எளிதாக்க வங்கிகள் சிப் உள்ள இஎம்வி கார்டுகளை அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளன. இதன் மூலம் பரிவர்த்தனை செய்யும்போது, ஒவ்வொரு முறையும் ஒன் டைம் பாஸ்வேர்டுகள் முக்கியம் என்பதால் பாதுகாப்பான பரிவர்த்தனைகளுக்கு வழிவகுக்கின்றன. இதனால் டூப்ளிகேட் கார்டுகள் மூலம் திருடுவதும் தவிர்க்கப்படும்.
ஓட்டல், ரெஸ்டாரென்ட், பெரிய மால்கள் போன்றவற்றில் கார்டுகளை ஸ்வைப் செய்து பில் கட்டும்போது நீங்களே உங்களது ரகசிய எண்ணை ரகசியமாகப் பதிவிடுங்கள். அந்த விவரங்களை ஒருபோதும் கடைக்காரரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். இதில் அலட்சியம் காட்டினால் உங்களுடைய விவரங்கள் உங்களுக்கே தெரியாமல் களவாடப்படும். ஏனெனில் கடைக்காரரிடம் உங்களுடைய பெயர், மொபைல் எண், கார்டு எண் போன்ற அடிப்படை விவரங்கள் இருப்பதால், உங்களுடைய ரகசிய பின் எண் தெரிந்தால், பணத்தை உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து எடுப்பது எளிதாகிவிடும்.
மேலும், வங்கிக் கணக்கு தொடர்பான ரகசிய விவரங்களை ஒருபோதும் டைரியிலோ அல்லது மொபைலிலோ குறித்து வைக்காதீர்கள். உங்களுடைய மொபைல் திருடு போக வாய்ப்புள்ளது. உங்கள் டைரி தொலைந்துபோக வாய்ப்புள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள். இவை மட்டும் போதாது, ஆறு மாதத்துக்கு ஒருமுறை ஏடிஎம் பின் எண்ணை மாற்ற வேண்டும்.
அதேபோல் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும்போதும் கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய சொந்த கம்ப்யூட்டர், லேப்டாப்பாக இருந்தாலுமேகூட எப்போதும் விவரங்களைச் சேகரித்து வைத்துக்கொள்ளும் வசதியைத் தவிர்த்துவிடுங்கள். ஏனெனில் அப்படி சேகரித்து வைத்து உடனடியாக ட்ரான்சாக்ஷன் செய்யும் உங்கள் அவசரம் சில நேரங்களில் உங்களுக்குப் பெரிய இழப்பையும் தேடி தந்துவிடும். உங்களுடைய லேப்டாப், மொபைல் போன்றவை தொலைந்தால் எளிதில் உங்களுடைய கணக்கு எந்தச் சிரமுமில்லாமல் திருடர்களுடைய கணக்காக மாறிவிடும். மேலும், அப்படி சேகரித்து வைக்கும் பழக்கம் உங்களுடைய விவரங்களை உங்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் திறனையும் பறித்துவிடும். வெப்சைட்டோ, ஆப்ஸோ ஒவ்வொரு பரிவர்த்தனை முடிந்தபின்பும் உங்கள் அக்கவுன்ட்டை லாக் அவுட் செய்துவிடுங்கள்.
ஜென்யூன் ஒரிஜினல் ஆன்டிவைரஸ் ஒன்றை இன்ஸ்டால் செய்துகொண்டால், வைரஸ்கள் மூலம் உங்களுடைய ரகசிய தகவல்களைத் திருட முயற்சிக்கும் தொழில்நுட்ப திருடர்களுக்கு பதிலடி கொடுக்க முடியும். அதேபோல், நம்பகத்தன்மையுள்ள, அடிக்கடி வர்த்தகம் செய்யும் மெர்சன்ட் வெப்சைட்களில் மட்டுமே வர்த்தகம் செய்யுங்கள். ஏனெனில் ஏராளமான இணைய திருடர்கள் என்க்ரிப்ட் செய்யப்பட்ட பக்கங்கள் மூலம் வங்கிக் கணக்குத் தகவல்களைத் திருடி வருகிறார்கள்.
இ-மெயிலில் வந்து குவியும் ஆஃபர்களைப் பார்த்துவிட்டு க்ளிக் செய்து மாட்டிக் கொள்ளாதீர்கள். நீங்கள் க்ளிக் செய்யும் பக்கங்கள் இணையத்துக்கே உரித்தான http: போன்றவை சரியாக உள்ளதா என்பதையும் பாருங்கள். நீங்கள் லாட்டரி, பரிசு வென்றுள்ளீர்கள், உங்கள் பரிசைப் பெற தொடர்பு கொள்ளுங்கள் என்று வரும் எந்த அழைப்பையும் பாரபட்சமில்லாமல் தவிர்த்து விடுங்கள். எந்தவொரு ஆன்லைன் பரிவர்த்தனையாக இருந்தாலும், அந்த வர்த்தகப் பக்கத்தின் நம்பகத்தன்மையைத் தெரிந்துகொண்ட பின்னரே பரிவர்த்தனை செய்ய வேண்டும்” என்றார்.
ஆக, பண விஷயத்தில் நாம் ஜாக்கிரதையாக இல்லை எனில், நம் பணம் கொள்ளை போக நிறையவே வாய்ப்புண்டு. எனவே, டபுள் உஷார் நிச்சயம் தேவை!
கட்டாயம் செய்ய வேண்டியவை!
ரிசர்வ் வங்கி அல்லது நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள் பெயரிலோ ஏதேனும் தகவலோ, அல்லது ஆப், என்கொயரி அல்லது டோல் ஃப்ரீ சர்வீஸ் நெம்பர் போன்ற வசதிகளோ வந்தால் அது உண்மைதானா என்பதை உங்கள் வங்கிக் கிளையில் கேட்டு தெளிவுபடுத்திக்கொண்ட பிறகு முயற்சி செய்யவும்.
உங்கள் மொபைல் போனுக்கு ஸ்க்ரீன் லாக் போட்டு வையுங்கள். அதற்கான பாஸ்வேர்ட் அல்லது பேட்டர்ன் உங்களுக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்கட்டும்.
மொபைல் பேங்கிங் வசதிக்காக வங்கிகள் வழங்கும் பிரத்யேக MPIN (Mobile-Personal Identification Number) என்ற எண்ணை, குறித்து வைப்பதோ, யாரிடமும் பகிர்ந்துகொள்வதோ வேண்டாம். வங்கிகளும் மூன்று முறைக்கு மேல் MPIN-ஐ தவறாகப் பதிவு செய்தால் அந்தச் சேவையை நிறுத்தி விடுகின்றன.
மொபைலோ, சிம் கார்டோ தொலைந்து போனால் உடனடியாக வங்கித் தரப்பில் முறையிட்டு மொபைல் பேங்கிங் சேவையை ரத்து செய்யுங்கள்.
ரகசிய எண்களை அவ்வப்போது மாற்றிக்கொண்டே இருங்கள். வங்கிக் கணக்கு தொடர்பான புகார்களை முடிந்தவரை நேரடியாக வங்கிக் கிளைக்கே சென்று முறையிடுங்கள். தெளிவாக பதில்களைக் கேட்டுப் பெறுங்கள்.
செல்போன் நிறுவனத்திலிருந்து பேசுவதாகச் சொல்லி உங்கள் விவரங்களைச் சரிபார்க்க வேண்டும், சொல்லுங்கள் என்று கேட்டால் உஷாராகிவிடுங்கள். ஏனெனில் உண்மையாகவே செல்போன் நிறுவனங்கள் நம்மைப் பற்றிய விவரங்களை அவர்களே சொல்லி, ‘சரியா?’ என்றுதான் கேட்பார்கள். எனவே, உங்கள் விவரங்களைச் சொல்லுங்கள் என்று அழைப்பு வந்தால், துண்டித்துவிடுங்கள்.