ஆன்லைன் இலவச மாணவர் சேர்க்கைக்கு 1,246 விண்ணப்பங்கள் பதிவு

ஆன்லைன் இலவச மாணவர் சேர்க்கைக்கு 1,246 விண்ணப்பங்கள் பதிவு

தமிழகத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு முதல் நாளே 1,246 ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்களில், வருவாய் குறைந்த பிரிவு மாணவர்கள் சேர்க்கப்படுவர். இதற்கான கல்வி கட்டணத்தை, தமிழக அரசே, கல்வி நிறுவனங்களுக்கு வழங்கும்.

இந்த நிதியை பள்ளிகளுக்கு வழங்குவது, மாணவர் சேர்க்கை உள்ளிட்டவற்றில் முறைகேடு நடப்பதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் இலவச மாணவர் சேர்க்கை ஆன்லைன் முறைக்கு மாற்றப்படுவதாக ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, வருகிற கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு நேற்று (20.4.2017) முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முதல் நாளில் பெறப்பட்டுள்ள 1,246 விண்ணப்பங்களில் 942 விண்ணப்பங்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள் பிரிவிலும், 299 விண்ணப்பங்கள் பின்தங்கியவர்கள் பிரிவிலும் பெறப்பட்டுள்ளது. சென்னையில் 100 விண்ணப்பங்களும், திருவள்ளூரில் 129, சேலம், மதுரை, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் 109, கோவையில் 51 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வருகிற மே 18ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 9,000 தனியார் சுயநிதி, மெட்ரிக் மற்றும், ‘பிரைமரி’ பள்ளிகளில் 1,26,262 இலவச சேர்க்கைக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிறுபான்மை அந்தஸ்துள்ள பள்ளிகளில், இலவச மாணவர் சேர்க்கை நடக்காது.

Leave a Reply