ஆன்லைன் மணலால் தட்டுப்பாடு நீங்கியதா?
ஆற்று மணல் தட்டுப்பாட்டைப் போக்கும் விதமாக ஆன்லைன் மணல் திட்டத்தைத் தமிழக அரசு அறிவித்தது. இதற்காக அரசு ஸ்மார்ட் போன் செயலியை உருவாக்கியுள்ளது. இந்தச் செயலியில் மணல் தேவைப்படுவோர் பதிவுசெய்துவைக்க வேண்டும். குவாரியில் மணல் கிடைக்கும் தேதியும் நேரமும் பயனாளருக்குப் பின்னர் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.
அந்தக் குறிப்பிட்ட தேதியில் குவாரிக்குச் சென்று மணல் தொகைக்கான வரைவோலையைச் செலுத்தி வாங்கிக்கொள்ளலாம். கேட்பதற்கு எளிய நடைமுறையாகத் தெரிந்தாலும் இதில் உள்ள சிக்கலைப் பற்றிக் கட்டுநர்கள் அதிருப்தி தெரிவிக்கிறார்கள். ‘இதன் மூலம் மணல் தட்டுப்பாடு தீர்ந்திருக்கிறதா?’ என்ற எதிர்க் கேள்வியும் அவர்கள் தரப்பிலிருந்து வருகிறது.
எப்போதும் இருக்கும் ஆற்று மணல் தட்டுப்பாடு கடந்த சில மாதங்களாக, கட்டுமானத் தொழிலையே முடக்கும்வகையில் அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகக் கட்டுமானத் துறை தேக்க நிலையில் உள்ளது. 2000-களில் இருந்த ஏறுமுகம் 2010-களின் தொடக்கத்தில் இல்லை. சிமெண்ட் விலையேற்றம், கட்டிட அனுமதிக்குக் கால தாமதம் போன்ற பல காரணங்களால் கட்டுமானத் துறை தேக்கமடைந்தது. கட்டுமானப் பொருட்களின் முக்கியமான மூலப் பொருளான ஆற்று மணல் தட்டுப்பாடும் அந்தக் காரணங்களுள் ஒன்றானது.
பொதுவாக ஆற்று மணல் குவாரிகளில் நாட்கணக்கில் லாரிகள் காத்துக்கிடப்பதால் உண்டாகும் பொருட்செலவும் மணல் விலையுடன் சேர்த்துக்கொள்ளப்படுவதால் மணல் விலையும் மிக அதிகமாக இருந்தது. அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திராவில் செயல்பாட்டில் உள்ள ஆன்லைன் மூலமான மணல் விற்பனைமுறை இங்கும் வந்தால் இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
மேலும், மணல் வாங்குவதில் உள்ள முன்னுரிமைக்காக லஞ்சம் கொடுப்பதும் வழக்கத்திலிருந்ததாகச் சொல்லப்பட்டது. அதுவும் மாறும் எனச் சொல்லப்பட்டது. இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வாகக் கடந்த மாதம் ஆன்லைன் மணல் விற்பனைத் திட்டம் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால், இதற்குப் பிறகும் தட்டுப்பாடு தீரவில்லை எனச் சொல்லும் இந்தியக் கட்டுமானச் சங்கத்தைச் சேர்ந்த கட்டுநர் சிறில் கிறிஸ்துராஜ், “முன்பு மணல் அள்ள குவாரிகளில் நாட்கணக்கில் வாகனங்கள் காத்துக் கிடக்க வேண்டியிருந்தது.
அதனால் காத்திருக்கும் சமயத்துக்கான ஓட்டுநர், நடத்துநர் சம்பளம், படி, வாகன வாடகை எல்லாம் சேர்த்து மணல் விலையுடன் சேர்த்துக் கணக்கிடப்பட்டன. இப்போது ஆன்லைன் மூலம் முன்பதிவுசெய்வதால் குறிப்பிட்ட நேரத்தில் போய் மணலை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அதனால் வாகனங்கள் குவாரிகளில் காத்திருக்க வேண்டியதில்லை.
ஆனால், மாறாக வாகனங்கள் அவர்களது வீட்டில் காத்திருக்கின்றன. ஏனெனில், ஒரு மாதத்துக்கு ஒருமுறைதான் மணல் கிடைக்கிறது. மணல் ஏற்றிச்செல்லும் வாகனங்களை வேறு வேலைக்குப் பயன்படுத்த முடியாது. அதேபோல் ஓட்டுநர், நடத்துநர் சம்பளம், படி எல்லாம் இப்போதும் மணல் விலையுடன் சேர்த்துக்கொள்ளப்படுகிறது.
ஒரு கன அடிக்கு (சி.எஃப்.டி.) ரூ.90 என்றளவில் மொத்தம் செலவு ஆகிறது. ஏற்கனவே மணல் விற்பனையாளர்கள் ஒரு சி.எஃப்.டியை ரூ. 120-க்கு விற்கிறார்கள் ” என்கிறார். உதாரணமாக கோவிலடி மணல் குவாரியிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மணல் எடுத்துச் செல்ல ஆகும் செலவு எப்படி மணல் விலைவில் உள்ளடக்கமாக்கப்படுகிறது என்பதைப் பார்க்கலாம்.
ஆன்லைன் மூலம் விலை குறைந்துள்ளது என்பதைப் பெரும்பாலான கட்டுநர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.
“ஆனால் அது மிகக் குறைந்த அளவே” எனச் சொல்லும் கோவை கட்டுமானப் பொறியாளர் சங்கச் செயற்குழு உறுப்பினர் அத்தப்பன், “2 1/4 யூனிட் மணலை ரூ.1050-க்கு வாங்கிவிட முடிகிறது. மணல் விலை என்பது வாகன வாடகை, ஓட்டுநர், நடத்துநர் சம்பளம், சுங்கச் சாவடிக் கட்டணம் என எல்லாவற்றையும் சேர்த்ததுதான்” என்கிறார்.
இது ஒரு பக்கம் என்றால், சில கட்டுநர்களுக்கு ஒரு முறைகூட மணல் அள்ள அனுமதி கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் கட்டுநர்கள் மத்தியில் இருக்கிறது. “நாங்கள் பதிவுசெய்து 20 நாட்கள் ஆகிவிட்டன. ஆனால், இதுவரை ஒருமுறைகூட மணல் அள்ள எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை” என்கிறார் ரூபி பில்டர்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரூபி மனோகரன்.
மேலும் “இந்த மணல் தட்டுப்பாட்டுப் பிரச்சினை ஒரு அரசால் தீர்க்கக்கூடியதுதான். ஆனால், இதைச் செய்யாமல் இருப்பதற்குப் பின்னாலுள்ள காரணம் புரியவில்லை. கட்டுமானத்துக்கு அவசியமான மணலைத் தருவதில் அரசு சில ஒழுங்குகளை உருவாக்க வேண்டும். இப்போது சந்தையில் சிலிக்கான் மணல் என்றொரு மணல் விற்பனைக்கு வந்துள்ளது.
இது கட்டுமானத்துக்கு உகந்ததல்ல. ஆனால், விலை குறைவாக இருப்பதால் அது சந்தையில் விற்பனைசெய்யப்பட்டு வருகிறது. இதையெல்லாம் அரசு தலையிட்டுத் தடுக்க வேண்டும்” எனச் சொல்கிறார் மனோகரன்.
“மணல் தட்டுப்பாட்டைத் தீர்க்கக் குவாரிகளை அதிகப்படுத்த வேண்டும்” என்கிறார் கிறிஸ்துராஜ். ஆனால், மணல் அள்ளும் பொக்லைன் இயந்திரங்களை அதிகப்படுத்தினாலேயே இதைத் தீர்க்க முடியும் என்பது அத்தப்பனின் ஆலோசனையாக இருக்கிறது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாகக் கட்டுமானத்துக்கான மணலை, அது ஆற்று மணலோ மாற்று மணலோ அரசு ஓர் ஒழுங்கை ஏற்படுத்திச்செயல்பட்டால் இந்தத் தட்டுப்பாடு நீங்கும், தரமும் மேம்படும்.