ஆப்கானிஸ்தானில் 1000 பள்ளிகள் திடீர் மூடல்: மாணவர்கள் தவிப்பு
ஆப்கானிஸ்தானில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மீது சமீப காலமாக தீவிரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்த தொடங்கி உள்ளதால் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 86 கல்வி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் அதாவது நேற்று முன்தினம் தலைநகர் காபூலில் உள்ள தனியார் டியூஷன் மையம் ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 48 மாணவர்கள் கொல்லப்பட்டனர். 67 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றது.
இவ்வாறு பொதுமக்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மீது தொடர் தாக்குதல்களை தீவிரவாதிகள் நடத்தி வருவதால் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் அங்கு நாடு முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு விட்டன. பாதுகாப்பு காரணங்களையொட்டி அவை மூடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுபற்றி ஆப்கானிஸ்தான் உள்துறை மந்திரி வாயிஸ் அகமது பர்மாக் கூறும்போது, “கல்வி நிறுவனங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது, இப்போது நமது நாடு சந்தித்து வருகிற மிக பயங்கரமான தாக்குதல்கள் என்றுதான் கூற வேண்டும்” என்று குறிப்பிட்டார்.