ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் கோவிலில் குழந்தை வரம் வேண்டி 258 தம்பதியர்கள் பங்கேற்ற யாக பூஜை

ஆரணி புதுக்காமூர் பகுதியில் அமைந்துள்ள பெரிய நாயகி சமேத புத்திரகாமேட்டீஸ்வரர் சிவன் கோவிலில் 22 ஆவது ஆண்டாக குழந்தை வரம் வேண்டி புத்திரகாமேட்டி சிறப்பு பூஜை நடந்தது.

இந்த பூஜையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் 258 தம்பதியர்கள் கலந்து கொண்டனர்.இதனையொட்டி விநாயகர் பூஜை, லட்சுமி சரஸ்வதி பூஜை, நவகிரக பூஜை நடந்தது. இதில் கலந்து கொண்ட தம்பதியர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு புதுமண தம்பதியர்கள் போல அமர வைக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்களது பெயர்களில் சிறப்பு அர்ச்சனைகள் நடத்தப்பட்டு யாக பூஜைகள் நடத்தப்பட்டன.

இதில் சிவாச்சாரியார்கள் கலந்துகொண்டு வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் செய்தனர். நிகழ்ச்சியின்போது பூஜிக்கப்பட்ட புனித நீர் கலச நீரானால் சாமிக்கு மகா அபிஷேகமும், தொடர்ந்து மகா தீபாராதனையும் நடந்தது. பின்னர் ஆனி மாத பவுர்ணமி பூஜை நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்டிருந்த உற்சவர் சிவன் பார்வதி சாமியை கோவில் வெளிவளாகத்தில் சிவபுராணம் பாடியபடி பக்தர்கள் வலம் வந்தனர்.

விழாவில் ஆரணி நகர சபை தலைவர் ஏ.சி.மணி, ஆரணி ஒன்றிய குழு தலைவர் கனிமொழி சுந்தர், ஒன்றிய தி.மு.க.செயலாளர் எஸ்.எஸ்.அன்பழகன் மற்றும் திரளான தம்பதியர், பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ம.சிவாஜி, ஆய்வாளர் நடராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.