ஆரோக்கியத்தை விரட்டும் பூச்சிவிரட்டிகள்!
மாலை நேரங்களில் படையெடுக்கும் பூச்சி, கொசுக்களிடம் இருந்து தப்பிக்க, அறைகளின் கதவுகள், ஜன்னல்களைச் சாத்தி வைப்பது ஓர் எளிய முன்னேற்பாடு என்றாலும், இதனால் பெரிய பலன் இருப்பது இல்லை. எனவே, ஸ்ப்ரே அடிப்பது, க்ரீம் தடவுவது என செயற்கையான பூச்சிவிரட்டிகளை நாடவேண்டியுள்ளது. சில வீடுகளில், இந்தப் பூச்சிவிரட்டிகளைப் பயன்படுத்துவது, உடலுக்கு பெர்ஃப்யூம் பயன்படுத்துவதுபோல இயல்பான ஒன்றாகவே ஆகிவிட்டது. இப்படி சகட்டுமேனிக்குப் பூச்சிவிரட்டிகளைப் பயன்படுத்துவது ஆரோக்கி யமானதுதானா? பூச்சிவிரட்டிகளைப் பயன்படுத்தும் போது கவனிக்கவேண்டியவை என்னென்ன?
பூச்சிவிரட்டிகள்
பூச்சிவிரட்டிகள்… க்ரீம், ஸ்ப்ரே, காயில், மேட், லிக்விட், லோஷன்கள், பேட் எனப் பல்வேறு வடிவங்களில் கிடைக்கின்றன. பூச்சிவிரட்டிகளில் உள்ள `என்-என்-டைஎத்தில்-மெட்டாகுலமைடு (டிஇஇடி)’ (N-N-Diethyl-metaculamide -DEET) என்ற வேதிப்பொருள் பூச்சிக் கடியில் இருந்து நம்மைக் காக்கிறது.
வகை மற்றும் பாதிப்பு
ஸ்ப்ரே: ஸ்ப்ரே, மேட் போன்றவற்றில் வாசனைத் திரவியங்கள் உபயோகப்படுத்தப்படுவதால், ஆஸ்துமா மற்றும் அலர்ஜியால் அவதிப்படும் நோயாளிகள் இவற்றைத் தவிர்ப்பது நல்லது. மேலும், நீண்டகாலம் உபயோகிப்பதால், சருமப் பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. ஒரு சிலருக்கு நரம்புக்கோளாறுகள் ஏற்படலாம்.
காயில்கள்: காயில்களில் பயன்படுத்தப்படும் ரசாயனத்தின் வீரியம் மிக அதிகம். பைரெத்ரம், டை, ஃபங்கிசைட் போன்ற பல பூச்சிக்கொல்லி ரசாயனங்களைக்கொண்டு காயில்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை சளி, இருமல், மூச்சுத்திணறல், தொண்டையில் எரிச்சல், கண் எரிச்சல், குமட்டல், நெஞ்சு எரிச்சல் போன்ற பாதிப்புகளை உண்டாக்கும்.
லிக்விட்: திரவ வடிவங்களில் வரும் கொசுவிரட்டி களை சில மணிநேரம் உபயோகிப்பது நல்லது. இரவு முழுவதும் பயன்படுத்தினால், அவற்றில் உள்ள ரசாயனம், நாம் சுவாசிக்கும் காற்றில் கலந்து விடுகிறது. இந்தக் காற்றை தொடர்ந்து சுவாசித்தால், சுவாசமண்டலம் பாதிக்கப்பட்டு, அலர்ஜி மற்றும் நுரையீரல் பாதிப்புகள் வரும்.
மேட்: பைரெத்ரம், அலெத்ரின் போன்ற ரசாயனங்கள் கலந்திருக்கும். மேட் சூடாகும் போது வெளியாகும் புகையினால், தொடர் தலைவலி, வீஸிங், இருமல் போன்ற உபாதைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
பேட் மற்றும் கொசுவலை: பேட் ஒரு சிறந்த முறையே. பேட் மின்சாரம் மூலம் இயங்கக்கூடியது. இவற்றைக் கையாளும்போது சற்று அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். பேட்டைவிட கதவு, ஜன்னல்களில் கொசுவலைகளை அடித்துவைப்பது நல்ல முறை. கொசு, பூச்சிகளிடம் இருந்து நம்மைக்காக்கும் கொசுவலை பாதுகாப்பானதும்கூட.
சருமப் பாதிப்புகள் ஏற்படுமா?
பொதுவாக, பூச்சிவிரட்டிகளைப் பயன்படுத்துவதால் எந்தவித சருமப் பாதிப்பும் ஏற்படாது. ஆனால், சென்சிட்டிவ் சருமம் உள்ளவர்கள் இதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இவர்கள் க்ரீமையோ, லோஷன்களையோ தடவும்போது, சருமம் எதிர்வினைபுரிவதால், இவை கவுன்ட்டர் இரிட்டன்ட்டாக (Counter irritant) மாறிவிடுகின்றன. இதனால், ஒவ்வாமை உட்பட பல்வேறு சருமப் பாதிப்புகள் ஏற்படலாம். க்ரீம் மற்றும் எண்ணெய் வகைகள் சிலருக்குக் கண் எரிச்சல், தடிப்பு, சின்னச் சின்ன வீக்கங்கள் மற்றும் சரும எரிச்சலை உண்டாக்கும்.
யார் யார் தவிர்க்க வேண்டும்?
ஸ்ப்ரே வடிவில் உள்ள பூச்சிவிரட்டிகளில் நறுமணத்தைத் தூண்டும் தன்மை (Smell Stimulant) அதிகமாக இருப்பதால், பிறந்த குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் ஆஸ்துமா நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.