ஆர்கானிக் உணவுகள் பற்றி A டூ Z தெரிந்து கொள்ளலாமா..?

ஆர்கானிக் உணவுகள் பற்றி A டூ Z தெரிந்து கொள்ளலாமா..?

organi
மக்களிடையே ‘ஆர்கானிக் உணவுகள் ‘ பற்றிய ஆர்வம் நாளுக்குநாள் பெருகி வருகிறது. அதே சமயம், ஆர்கானிக் என்று குறிப்பிடப்பட்டு பெரும்பாலும் மக்களுக்கு பூச்சிமருந்து தெளிக்கப்பட்ட உணவுபொருட்களே அதிகம் கடைகளில் கிடைக்கிறது. இப்படி ஆர்கானிக் என்ற பெயரால் ஏமாறாமல் இருக்க, பல்வேறு இடங்களில், பல்வேறு அமைப்புக்களின் சார்பில் ஆர்கானிக் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக சென்னை, ஈஞ்சம்பாக்கத்திலுள்ள வி.ஜி.பி கோல்டன்பீச்சில் ‘இயற்கை வேளாண் தோட்டத் திருவிழா-2016’ வரும் செப்டம்பர் 3 மற்றும் 4 (சனி மற்றும் ஞாயிறு) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. வி.ஜி.பி குழுமம், A-Z ஆர்கானிக்ஸ் மற்றும் எஸ்.பி.எஸ் பவுண்டேஷன் மற்றும் பசுமை விகடன் ஆகியவை இணைந்து, இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றன.

இந்த தோட்டத் திருவிழாவில் ஆர்கானிக் உணவுகள் தொடர்பான ஏராளமான அரங்குகள் இடம்பெறுகின்றன. அத்துடன் இயற்கை வேளாண் கருத்தரங்குகள், மாடித்தோட்ட உபகரணங்கள் , குழந்தைகள் விளையாட பசுமைத்தோட்டம், மண்பாண்ட பாத்திரங்கள், பாரம்பர்ய தானியங்கள் மற்றும் உணவுகள் ஆகியவை இடம்பெற உள்ளன. இவ்விழாவினைப் பற்றி பேசிய வி.ஜி.பி. பாரிஜாதம் அறக்கட்டளையின் செயலாளர் உஷா ராஜ்குமார் பேசும்போது, “வி.ஜி.பி கோல்டன் பீச்சில் ஆறுமுறை மலர்கண்காட்சி நடத்தியுள்ளோம். அத்துடன் இந்த அறக்கட்டளை மூலமாக நலிந்த மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறோம். அதில் மிக முக்கியமானது மாடித்தோட்டம் வளர்ப்பதற்கான செடி கொடுப்பதுதான். அந்த செடியில் ஆரபித்த முயற்சிதான் மாடித்தோட்டமாக மாறி, இந்த ஆர்கானிக் திருவிழாவரை வந்திருக்கிறது.

இந்த இயற்கை வேளாண் தோட்டத் திருவிழாவில் பல சிறப்புமிக்க பேச்சாளர்கள், அனுபவம் மிக்க இயற்கை விவசாயிகள் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். கிராமத்தில் கிடைக்கும் பொருட்களான மண்பாண்டம் முதல் ராஜாக்கள் உண்ணும் உணவு வரை அனைத்தும் இடம்பெறுகிறது. இங்கு இடம்பெறும் அனைத்தும் இயற்கையை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மட்டுமே செயல்படுகிறது. மக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும். இதனையடுத்து ஒவ்வொரு வருடமும் இதே போல தோட்டத் திருவிழாவை நடத்த இருக்கிறோம். இதனை தொடர்ந்து, சிறந்த மூன்று மாடித்தோட்டங்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுகிறது. இதனை அடுத்த கட்டமாக சென்னை முழுவதும் மாடித்தோட்டத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் ‘மொட்டை மாடியில் பச்சைத்தொப்பி’ என்ற திட்டத்தினை செயல்படுத்த இருக்கிறோம். விழாவிற்கு வரும் அனைவருக்கும் ஒரு செடி இலவசமாக வழங்கப்படும். பாரம்பர்யத்தை காக்க நாங்கள் எடுக்கும் முயற்சியாகவே இதனைக் கருதுகிறோம்” என்றார்.

A-Z ஆர்கானிக்ஸை சேர்ந்த ரகுகுமார் பேசும்போது, “நாங்கள் மாடித்தோட்டம் பற்றிய விழிப்புணர்வை ஃபேஸ்புக் மூலமாகவும், பல இடங்களில் நேரடியாகவும் மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறோம். மக்களுக்கு விஷமில்லாத உணவுகளை கொடுப்பதற்கு மாடித்தோட்டம்தான் மிகச் சிறந்த வழி. அந்த முயற்சிக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக இந்த திருவிழாவில் ,மாடித்தோட்டம் பற்றிய கருத்தரங்குகளும், ஸ்டால்களும் இடம்பெறும்” என்றார்.

எஸ்.பி.எஸ் பவுண்டேஷன் தலைவர் பேரா.ராஜ் பேசும்போது, “இயற்கை விவசாயம் செய்வதற்காக விவசாயிகள் அனைவரும் ஒரே இடத்தில் கூடினால் மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நல்ல பலன் கிடைக்கும். எளிதாக மக்களுக்கு இயற்கை பொருட்கள் சென்று சேரும் வகையில் இந்த நிகழ்ச்சி அமையும். முக்கியமாக மக்கள் பயன்பெறக்கூடிய வகையிலும், இயற்கை உணவு பற்றிய விழிப்புணர்வு அதிகமாகும் வகையிலும் இந்நிகழ்வு இருக்கும்’ என்றார்.

ஆர்கானிக் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள இயற்கை வேளாண் தோட்டத் திருவிழாவுக்கு ஒரு விசிட் அடியுங்கள் நண்பர்களே!

Leave a Reply