ஆலயம் தேடுவோம். கொட்டகையில் குடியிருக்கும் வேங்கடவன்!
ஒரு காலத்தில் வேதகோஷங்கள் ஒலித்துக் கொண்டிருந்த புண்ணிய பூமி அது.
அக்காலத்தில் சிறுமயிலூர் என்று அழைக்கப் பெற்ற அந்த கிராமத்தின் அக்ரஹாரத்தில் வேதம் பயின்ற வேதியர்கள் வேதங்களை ஓதுவதி லும், வேதங்களைக் கற்பிப்பதிலும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு அமைதியான முறையில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்ட தவ பூமி அது.
அந்த தவபூமியில்தான் பிராட்டிமார்களுடன் ஒரு சிறிய கொட்டகையில் காட்சி தருகிறார் பெருமாள்.
உலகை அளந்த பிரானும், நம்மை நாளும் காத்து அருள்புரியும் நாயகனுமாம் எம்பெருமான், தனக்கென்று ஒரு கோயில் இல்லாமல் சாதாரண கொட்டகையில் காட்சி தந்ததைப் பார்த்து நெஞ்சம் பதறித் துடித்தது நமக்கு.
சிறுமயிலூர் அக்ரஹாரத்தில் வசித்த வேதியர்களின் வழிபாட்டுக்காக சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பாக அங்கே கட்டப்பட்ட திருக்கோயில்தான் ஸ்ரீதேவி பூமிதேவி சமேத வேங்கடேச பெருமாள் திருக்கோயில்.
இயற்கை எழிலுடனும், வேத கோஷங் களுடனும் யோக பூமியாகத் திகழ்ந்த சிறுமயிலூர் அக்ரஹாரத்தில் வசித்து வந்த வேதியர்களுக்கு, சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பாக அந்நியர் வடிவில் கடும் சோதனை ஏற்பட்டது. ஆங்கிலேயர்கள் நம் தேசத்தை அடிமைப்படுத்திய போது, சூணாம்பேடு ஜமீனுக்கும் ஜமீனுக்கு உட்பட்டிருந்த சிறுமயிலூர் கிராமத்துக்கும் சோதனைக் காலம் ஏற்பட்டது. அப்போது ஜமீனின் பிரதிநிதியாக – திவானாக இருந்தவர் அங்கிருந்து வெளியேறவேண்டிய சூழல் ஏற்பட்டது. அவரைத் தொடர்ந்து சிறுமயிலூர் அக்ரஹாரத்தில் இருந்த வேதியர்களும் நாளடைவில் ஊரில் இருந்து வெளியேறிவிட்டனர். அப்படி அவர்கள் ஊரைவிட்டு வெளியேறுவதற்கு முன்பே, தாங்கள் அதுவரை வழிபட்டு வந்த பெருமாளுக்கும், ஸ்ரீதேவி, பூமிதேவி தாயார் விக்கிரஹங்களுக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் கோயிலில் இருந்த தெய்வத் திருமேனிகளை கோயில் கிணற்றில் போட்டுவிட்டு சென்றுவிட்டனர்.
இப்படியாக சிறுமயிலூர் அக்ரஹாரத்தில் அழகாக அமைந்திருந்த பெருமாள் கோயில் காலப்போக்கில் சிதைந்து, இப்போது கோயில் இருந்த அடையாளமே இல்லாமல் போய்விட்டது.
சுமார் 40 வருடங்களுக்கு முன்பு, ஊர் மக்கள் குடிநீருக்காக கோயில் கிணற்றைத் தூர் வாரியபோது, கிணற்றுக்குள் பிராட்டியார்களுடன் இருந்த பெருமாளின் மூல விக்கிரஹங்களைக் கண்டனர். அந்த விக்கிரஹங்களை கிணற்றுக்கு அருகில் அப்படியே வைத்துவிட்டனர். பெருமாளுக்கு ஒரு கொட்டகையாவது போடவேண்டுமே என்ற எண்ணம்கூட அவர்களுக்கு அப்போது தோன்றவில்லை. காரணம் அவர்களுடைய வறுமைதான்.
ஆனால், வேத மந்திரங்களின் சப்தத்தால் புனித அதிர்வலைகள் நிரம்பிய சிறுமயிலூர் அக்ரஹாரத்தில் கோயில் கொண்டிருந்த வேங்கடேச பெருமாள், மறுபடியும் அந்த கிராமத்தில் வேதங்கள் ஒலிக்க, தான் திருக் கோயில் கொள்ள திருவுள்ளம் கொண்டுவிட்டார். அதற்கேற்ப தன் அருளாடல்களைத் தொடங்கினார்.
சுமார் 8 வருடங்களுக்கு முன்பு, சிறுமயிலூரில் இருந்து வெளியேறிய திவானின் 5-வது பரம்பரை யைச் சேர்ந்த ராஜகுமார் என்பவர், தங்கள் முன்னோர்கள் வாழ்ந்த சிறுமயிலூர் கிராம அக்ரஹாரத்தையும், அவர்கள் வழிபட்ட பெருமாள் கோயிலையும் பார்க்கவேண்டும் என்பதற்காக பல இடங்களில் அலைந்து திரிந்து ஒருவழியாக சிறுமயிலூரைக் கண்டுபிடித் திருக்கிறார்.
பின்னர் ஊர்மக்களிடம் பெருமாளைப் பற்றிக் கேட்டபோது அவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு ராஜகுமாரின் தங்கை சென்றிருந்தபோது தற்செயலாக கிணற்றின் அருகில் வெட்டவெளியில் பெருமாள், தாயார் மூல விக்கிரஹங்கள் இருப்பதைப் பார்த்து ராஜகுமாரிடம் சொல்லி இருக்கிறார்.
அவரும் உடனே வந்து பார்த்ததுடன், தங்கள் முன்னோர் வழிபட்ட பெருமாளுக்கு எப்படி யும் ஒரு கோயில் கட்டவேண்டும் என்றும் விரும்பினார். தற்போது பெருமாளுக்கு கோயில் கட்டும் முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் ராஜகுமாரிடம் பேசினோம்.
‘‘பல சிரமங்களுக்கிடையில் எட்டு வருஷங் களுக்கு முன்புதான் எங்கள் முன்னோர்கள் வாழ்ந்த சிறுமயிலூர் அக்ரஹாரத்தை என்னால் கண்டுபிடிக்க முடிந்தது. சிறுமயிலூர் கிராமத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் இருந்த அக்ரஹாரம் தற்போது வெண்மாலகரம் என்று அழைக்கப்படுகிறது.
நான் சென்றிருந்தபோது பெருமாள் ஒரு கிணற்றின் பக்கத்தில் வெட்டவெளியில் எழுந்தருளி இருந்தார். வெண்மாலகரத்தைச் சேர்ந்த ராஜாராமன் என்பவரின் துணையுடன், ஊர்மக்களின் ஒத்துழைப்புடன் ஒரு சிறிய கொட்டகை போட்டு பெருமாள் தாயார் மூலவிக்கிரஹங்களை அங்கே பிரதிஷ்டை செய்திருக்கிறோம் பூமிதேவி தாயாரின் விக்கிரஹம் பின்னமடைந்துவிட்டதால், புதிதாக மூல விக்கிரஹம் செய்து பிரதிஷ்டை செய்திருக்கிறோம்.
கோயில் கட்டுவதற்கு பெருமளவு நிதி தேவைப் படுகிறது. உள்ளூர் மக்களிடம் அந்த அளவுக்கு வசதி இல்லை என்பதால், பெருமாளுக்கு கோயில் கட்டுவதற்கான பொருளுதவி வெளியூர்களில் இருக்கும் பக்தர்களிடம் இருந்துதான் எங்களுக்குக் கிடைக்கவேண்டும். எங்கள் குடும்பத்தினரும் பெருமளவு திருப்பணிகளில் பங்கெடுத்துக் கொள்ள உள்ளோம்.
சுமார் 200 வருஷங்களுக்குப் பிறகு தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் பெருமாளுக்கு, அந்த ஊரில் ஒரு கோயில் அமைய வேண் டும்; அதற்கு அந்தப் பெருமாள்தான் திருவருள் புரியவேண்டும்’’ என்றார்.
சதாசர்வ காலமும் ஒலித்த வேத மந்திரங்களால் புனித அதிர்வலைகள் பரவி இருந்த அந்தப் புண்ணியபூமியில் பெருமாளுக்கு அமைய இருக்கும் திருக்கோயிலுக்கு நாமும் நம்மால் இயன்ற நிதியுதவியைச் செய்தால் விரைவிலேயே பெருமாளுக்கு அழகிய ஆலயம் அமைந்துவிடும்.
வேதங்கள் ஒலித்த அந்த வெண்மாலகரத்தில் அமைய இருக்கும் வேங்கடேச பெருமாளின் திருக்கோயில் திருப்பணிக்கு நிதியுதவி செய்தால், ‘வன்பெருவானகம் உய்ய அமரருய்ய மண்ணுய்ய மண்ணுலகில் மனிதருய்ய துன்பமிகு துயரகல, அயர்வொன்றில்லா சுகம் வளர, அகம் மகிழும் தொண்டர் வாழ’ அருள்புரியும் நாராயணன் நமக்கும் நம் சந்ததியினருக்கும் சுக வாழ்வு அருள்வார் என்பது உறுதி.