ஆலயம் தேடுவோம் – மனதுக்கு மருந்தாகும் மகாதேவன்!
அரசர்கள் தங்களுக்கு ஆள்பலம், படைபலம் இருந்தாலும்கூட, தங்களுடைய நாட்டைப் பாதுகாக்க வேண்டி, கோட்டை கொத்தளங்களையும் ஏற்படுத்தி இருந்தனர். கோட்டை கொத்தளங்கள் இருந்தால் மட்டும் போதுமா என்ன? என்னதான் ஆள்பலம், படைபலம், கோட்டை கொத்தளங்கள் இருந்தாலும், அனைத்துக்கும் மேலாக தெய்வபலம் மிகவும் அவசியம் என்பதையும் அவர்கள் உணர்ந்திருந்தார்கள். அதன் காரணமாகவே தாங்கள் மண்ணில் எழுப்பிய கோட்டைகளிலும் சரி, மலைகளில் எழுப்பிய கோட்டைகளிலும் சரி ஆலயங்களை எழுப்பி, இறைவனை வழிபட்டார்கள். அப்படி மலையில் அமைந்த கோட்டையில் இருக்கும் ஓர் ஆலயம் மிகவும் சிதிலம் அடைந்திருப்பதாகச் ‘சக்தி விகடன்’ வாசக அன்பர் ஒருவர் நமக்கு போனில் தகவல் தெரிவித்தார்.
‘ஆலயம் தேடுவோம்’ பகுதிக்காக நாம் அந்தக் கோயிலுக்குச் சென்றோம். வாணியம்பாடியில் இருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் ஒரு மலை எதிர்ப்படுகிறது; ‘வெள்ளை மலை’ என்கிறார்கள். அதன் மீது வளைந்துநெளிந்து செல்லும் பாதையின் வழியே, சுமார் 8 கி.மீ தொலைவு சென்றால், `மாதகடப்பா’ எனும் மலைக் கிராமத்தை அடையலாம். இதுவரைதான் வாகனத்தில் செல்லமுடியும். அங்கிருந்து 2 கி.மீ.தொலைவு நடந்து சென்றால், வேறொரு மலையின் அடிவாரத்தை அடையலாம். மல்லநாயக்கர் துர்கம் எனப்படும் இந்த மலையின் மீதுதான், நாம் தரிசிக்க வந்திருக்கும் ஆலயம் அமைந்திருக்கிறது. அடிவாரத்தில் இருந்து கரடுமுரடான பாதையில் ஏறிச் செல்ல வேண்டும். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2800 அடி உயரம் உள்ள மலையின் உச்சியை அடைந்தால், மலை ஏறிய களைப்பே தெரியாதபடி, ஒரு புத்துணர்ச்சி நமக்கு ஏற்படுகிறது.
அந்தப் புத்துணர்ச்சியை அதிகப்படுத்துகிறது, கற்றளியாய் அமைந்துள்ள அருள்மிகு நந்தீஸ்வரர் ஆலயம். அருகிலேயே செங்கற் தளியாக அம்பிகையின் ஆலயமும் அமைந்திருக்கிறது. மலைக் கோயிலுக்கு அருகிலும், சற்றுக் கீழேயுமாக இரண்டு திருக்குளங்கள் உள்ளன. கடுமையான கோடைக் காலத்திலும்கூட அந்தக் குளத்தில் உள்ள நீர் வற்றுவதே இல்லை என்றும், சுவாமியின் அபிஷேகத்துக்கு இந்தக் குளங்களில் உள்ள நீரையே பயன்படுத்துவதாகவும் கூறுகிறார்கள். பார்ப்பதற்குப் பாசி படர்ந்து காணப்பட்ட அந்தக் குளத்தில் அங்கங்கே செடி முளைத்திருந் தது. `நாகமல்லி’ என்னும் அந்தச் செடி மூலிகைத் தன்மை கொண்டது என்றும், நஞ்சை முறிக்கும் ஆற்றல் கொண்டது என்றும் சொல்கிறார்கள்.
ஒருகாலத்தில் அரச பரிவாரங்களுடனும், போர் வீரர்களுடனும் பரபரப்பாகத் திகழ்ந்திருக்க வேண்டும் என்று எண்ணும்படி, கோயிலுக்கு அருகில், சிதிலம் அடைந்திருந்தாலும் தன் கம்பீரத்தை இழக்காமல் காட்சி தருகிறது ஒரு கோட்டை. கோட்டையைப் போலவே கோயிலும் சிதிலம் அடைந்துதான் காட்சி தருகிறது. கருவறையில் சதுர வடிவ ஆவுடையாரில், சிறிய மூர்த்தமாகக் காட்சி தருகிறார் சிவபெருமான். கருவறை பிராகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேதராக முருகப்பெருமான் ஆகியோர் காட்சி தருகின்றனர்.
ஆலயத்துக்கு வெளியில் ஐயனின் சந்நிதியைப் பார்த்தபடி நந்திதேவர் காட்சி தருகிறார். ஐயனின் ஆலயத்துக்கு இடப்புறத்தில் அமைந் திருக்கும் ஆலயத்துக்கு, அம்பிகையைத் தரிசிக்க லாம் என்று சென்றால், ஏமாற்றமே மிஞ்சியது. அங்கு அம்பிகை விக்கிரகம் இல்லை!
ஐயனின் ஆலயமும் அம்பிகையின் ஆலயமும் இன்றைக்கு இருக்கும் பரிதாப நிலையைக்கண்டு, ‘மலைமேல் மருந்தாகவும் மனதுக்கு விருந்தாகவும் திகழும் ஐயனே! உன் திருக்கோயிலுக்கா இந்த அவல நிலை?’ என்று எண்ணி மனம் பதறித் துடித்தது நமக்கு. எத்தனை ஆண்டுகள்தான் ஆலயம் இந்த நிலையில் இருந்திருக்குமோ? ஐயனுக்குத்தான் வெளிச்சம்!
பரிதாப நிலையில் கவனிப்பாரற்றுக் கிடந்த தன்னுடைய ஆலயம் இனியேனும் புதுப்பொலிவு பெற்று, தினமும் பூஜைகள் நடைபெற வேண்டும் என்று ஐயன் திருவுள்ளம் கொண்டுவிட்டார் போலும். அதற்குக் கருவியாக வாணியம்பாடியைச் சேர்ந்த அன்பர் விஜயனைப் பயன்படுத்திக் கொண்டார். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு அவர் மாதகடப்பா கிராமத்துக்குச் சென்றிருந்த போது, ஒருவர் மலைப்பக்கமாகச் சென்றுகொண்டு இருந்தார். அவரிடம் கேட்டபோதுதான் மலை மீது ஓர் ஆலயம் இருக்கிறது என்ற விஷயமே விஜயனுக்குத் தெரியவந்தது. தானும் வருவதாகச் சொல்லி விஜயனும் அவருடன் சென்றார். அதற்குப் பிறகு நடந்ததை விஜயனே நம்மிடம் விவரித்தார்.
‘‘முப்பது வருஷத்துக்கு முன்னாடி நாங்க போனப்ப… இதோ, இப்ப நீங்கப் பார்க்கறதை விடவும் ரொம்பவும் புதர் மண்டிப் போய் கிடந்துச்சு. நிறைய சிலைகள் காணாம போயிருந்தன. புதர்களுக்கு இடையில பார்த்தப்ப ஒரு சிவலிங்கம், பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான் இணைந்து காட்சி தந்த மும்முக சிவ லிங்கம், அம்பாள், விநாயகர், வள்ளி தெய்வானையோட இருக்கற முருகன் சிலைகள் கிடைச்சுது.
கோயிலை ஓரளவுக்குச் சுத்தப்படுத்தி, சிலைகளைக் கொண்டுவந்து வச்சோம். அப்போதிருந்து பிரதோஷம், கிருத்திகை, பௌர்ணமி போன்ற நாள்ல வந்து பூஜை பண்ணிட்டிருந்தோம். ஊர் மக்களும் ஓரளவுக்கு ஒத்துழைச்சாங்க. ஆனாலும், நாங்கள்லாம் வாணியம் பாடியில இருந்ததால, அதுக்கு மேல ஒண்ணும் செய்ய முடியலை.
இதுக்கிடையில ஒருநாள் மும்முக சிவலிங்கம் காணாம போயிடுச்சு. தேடிப் பார்த்தப்போ ஆவுடையார் மட்டும்தான் கிடைச்சுது. இப்படியே பல வருஷங்கள் ஆயிடுச்சு. அப்பத்தான் இந்த ஊரைச் சேர்ந்த சுகுமார் பழக்கமானார். அவரோட உதவி ரொம்பவே உற்சாகத்தைத் தந்தது. இப்ப சுவாமி பேர்ல ஒரு கமிட்டி ஆரம்பிச்சு, பேங்க்லயும் கணக்கு ஆரம்பிச்சிருக் கோம். இனிமேதான் திருப்பணிகளைத் தொடங்கணும்னு இருக்கோம்’’ என்றார். தொடர்ந்து சுகுமாரிடம் பேசினோம்.
‘‘எனக்கும் இந்தக் கோயிலைப் புதுப்பிச்சி கட்டணும்ங்கற எண்ணம் இருந்திச்சு. என் ஒருத்தனால மட்டும் என்ன செஞ்சுட முடியும்னு நெனைச்சப்பத்தான், விஜயன் ஐயாவைப் பத்தி தெரிஞ்சுது. அவரும் அவரோட நண்பர்களும் செஞ்ச ஏற்பாட்டுல டிரஸ்ட் ஆரம்பிச்சுருக்கோம்.
கோயில் மலைமேல இருக்கறதாலயும், வனப் பகுதிங்கறதாலயும் திருப்பணி செய்யறதுல பல சங்கடங்கள் ஏற்பட்டுச்சு. இப்ப பிரதோஷம், கிருத்திகை, பௌர்ணமி நாள்ல இங்கே வந்து அபிஷேகம், பூஜை செஞ்சுட்டு வர்றோம். இப்ப இருக்கற நிலையில் எங்களால முடிஞ்ச அளவுக்கு வேலைகள் செஞ்சுட்டு வர்றோம். இன்னும் நிறைய வேலைகள் இருக்கு. சுவாமிதான் எங்களுக்குத் துணையா இருந்து திருப்பணிகளை நல்லபடியா நடத்தி வைக்கணும்’’ என்றார்.
நிறைய வேலைகள் இருக்கிறது என்று அவர் சுலபமாகக் கூறிவிட்டாலும், மலையின் மீது அமைந்திருக்கும் ஐயனின் திருக்கோயில் மீண்டும் புதுப்பொலிவு பெற கடினமான பல பணிகள் காத்திருக்கின்றன. முதலில், திருப்பணி கமிட்டி யினர் சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளைச் சந்தித்து, மலைப்பாதையை ஓரளவாவது சீர்ச் செய்ய வேண்டும்.இந்தப் பணியை உபயதாரர்கள் மூலமாகச் செய்வதற்குத் திருப்பணிக்கமிட்டியினர் தயாரா கவே இருக்கிறார்கள். பிறகு, கோயிலில் திருப்பணிகளைச் செய்ய வேண்டும். மும்முக சிவலிங்கத்தைப் புதிதாகச் செய்து பிரதிஷ்டை செய்ய வேண்டும். கோயிலைச் சுற்றி சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும் என்று ஏராளமான திருப் பணிகள் காத்திருக்கின்றன. ஆனாலும், சற்றும் உற்சாகம் குறையாமல், இறையருளால் ஓரிரு வருடங்களில் கும்பாபிஷேகம் நடத்தி விடலாம் எனும் அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் செயல் பட்டு வருகிறார்கள், திருப்பணி கமிட்டியினர்.
அவர்களது அந்த நம்பிக்கை மெய்ப்பட, நாமும் ஒத்துழைப்போம். மூலிகைகள் நிறைந்த மலையின் மேல் உடற்பிணிகளுக்கு மருந்தாகவும்; மனதுக்கு உற்சாகம் தரும் விருந்தாகவும் அருள்புரியும் ஐயனின் திருக்கோயில் திருப்பணிகளுக்கு நாமும் நம்மால் இயன்ற பொருளுதவியைச் செய்வோம். அதன் பலனாக, ‘மேலை விதியும் வினையின் பயனும் ஆனானும், விரவார் புரம் மூன்று எரித்தானும், காலை எழுந்து தொழுவார்தம் கவலைகளைக் களைவா’னுமாகிய ஐயனின் பேரருள் நமக்கும் நம் சந்ததிக்கும் கிடைக்கப் பெற்று, சிறப்புடன் வாழலாம் என்பது உறுதி.