ஆலயம் தேடுவோம் – மாதேவி வழிபட்ட மகேஸ்வரன்!

ஆலயம் தேடுவோம் – மாதேவி வழிபட்ட மகேஸ்வரன்!

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்பதை உணர்ந்திருந்த மன்னர்கள்… அவர்கள் எவ்வளவு பெரிய சக்கரவர்த்தியாக இருந்தாலும், இறைவனிடத்தே அளப்பரிய பக்தி கொண்டிருந்தனர். இறைபக்தியே, அவர்கள் பல்வேறு அறச்செயல்கள் புரிவதற்கும் எண்ணற்ற ஆலயங்களை நிர்மாணிப்பதற்கும் காரணமாக இருந்தன. அதேநேரத்தில், ஆலயங்களை விடவும் தங்களுடைய அரண்மனை எவ்விதத்திலும் உயர்ந்திருக்கக்கூடாது என்பதிலும் கவனம் செலுத்தினார்கள்.

மன்னர்கள் மட்டுமல்ல, அவர்களின் பட்டமகிஷிகளும்கூட எண்ணற்ற திருக்கோயில்களை எழுப்பியும், புதுப்பித்தும் திருப்பணிகள் செய்திருக்கிறார்கள். அவர்களுள் சோழர்குல திலகமான செம்பியன்மாதேவி செய்த திருப்பணிகள் குறிப்பிடத்தக்கவை. செங்கற்களால் ஆன பல கோயில்களைக் கற்றளிகளாக எழுப்பியதுடன், அந்தக் கோயில்களுக்கு பல மானியங்களையும் வழங்கி இருக்கிறார். திருவாரூர் அறநெறி, திருமுதுகுன்றம், திருநல்லம், திருமணஞ்சேரி, திருவக்கரை, திருச்சேலூர், திருத்துருத்தி, தென்குரங்காடுதுறை, திருக்கோடிக்கா, ஆனாங்கூர், திருத்துருத்தி, குத்தாலம் போன்ற தலங்களில் செங்கற்தளிகளாக இருந்த கோயில்களை கற்றளிகளாக எழுப்பி, திருப்பணிகள் செய்திருக்கிறார்.

இவருடைய கணவரும், நான்கே ஆண்டுகள் ஆட்சி செய்தவருமான கண்டராதித்த சோழன் மிகச் சிறந்த சிவபக்தர் ஆவார்.

மின்னார் உருவம் மேல்விளங்க வெண்கொடி மாளி கைசூழப்
பொன்னார் குன்றம் ஒன்று வந்து நின்றது போலும் என்னாத்
தென்னா என்று வண்டு பாடும் தென்தில்லை அம்ப லத்துள்
என்னார் அமுதை எங்கள் கோவை என்றுகொல் எய்துவதே?

என்று தொடங்கும் திருவிசைப்பா, கண்டராதித்தர் அருளியதே ஆகும். கணவரின் அடியொற்றி மிகச் சிறந்த சிவபக்தையாகத் திகழ்ந்த செம்பியன்மாதேவியின் பெயரில் ஏற்படுத்தப்பட்ட ஊர்தான் `செம்பியன்மாதேவி சதுர்வேதிமங்கலம்’ திருத்தலம். இப்போது செம்பியன்மாதேவி என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தலத்தில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் எழிலார்ந்த தோற்றத்துடன் திருக்கோயில் ஒன்றை நிர்மாணித்துள்ளார் செம்பியன்மாதேவி. திருக்கோயில் ஏற்படுத்தியதுடன், நித்திய பூஜைகளும் திருவிழாக்களும் நடைபெறுவதற்காக பல மானியங்களையும் வழங்கி உள்ளார்.

செம்பியன்மாதேவியார் சித்திரை மாதம், கேட்டையில் பிறந்தவர் என்பதால், ஒவ்வோர் ஆண்டும் சித்திரைக் கேட்டையில் இந்தக் கோயிலில் அவருடைய பிறந்த நாளைக் கொண்டாட, ராஜராஜ சோழனின் தமக்கை குந்தவை பிராட்டியும், செம்பியன் மாதேவியாரின் மருமகளான திருபுவனமாதேவியும் மானியங்களை வழங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. செம்பியன்மாதேவியால் அழகிய கற்றளியாக எழுப்பப்பட்ட இந்தக் கோயிலில், ஐயன் ஸ்ரீகயிலாசநாதர் என்ற திருப்பெயருடன், அம்பிகை ஸ்ரீபெரியநாயகியோடு எழுந்தருளி இருக்கிறார்.

முற்காலத்தில் நான்கு வேதங்களைக் கற்றறிந்த வேத விற்பன்னர்கள் வாழ்ந்திருந்த இந்தத் தலத்தில், சதா காலமும் வேதமந்திரங்கள் ஒலித்துக்கொண்டே இருந்தன. வேத மந்திரங்களின் புனித அதிர்வலைகளால் ஊரும், கோயிலும் சிறப்புற்று விளங்கின. நித்திய பூஜைகளும் திருவிழாக்களும் விமர்சையாக நடைபெற்றுக்கொண்டு இருந்தன. காலப்போக்கில், பல்வேறு காரணங்களினால் வேத மந்திரங்கள் ஒலிப்பது நின்றுபோனது; ஆலயமும் தனது பொலிவினை இழந்துவிட்டது. இந்நிலையில் சுமார் 60 வருடங்களுக்கு முன்பு ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து ஆலயத்துக்குத் திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் செய்தனர். அதன்பிறகு கோயிலில் எந்தத் திருப்பணியும் செய்யப்படாததால், கொஞ்சம் கொஞ்சமாக சிதிலமடையத் தொடங்கி, புதர் மண்டிவிட்டது.

செம்பியன்மாதேவியாரின் அளப்பரிய சிவபக்திக்கு நிதர்சனமான சாட்சியாக விளங்கும் ஐயனின் திருக்கோயில் இன்னும் எத்தனை காலம்தான் இப்படி புதர் மண்டி இருப்பது என்று எண்ணிய ஊர்மக்கள், ஆலயத்தை மீண்டும் திருப்பணி செய்து புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்ய விரும்பினர்.

திருப்பணிக்கமிட்டியைச் சேர்ந்தவர்களிடமும் ஊர்மக்களிடமும் திருப்பணிகள் பற்றிக் கேட்டோம்.

‘‘சிறந்த சிவபக்தரான கண்டராதித்தரின் ராணியான செம்பியன்மாதேவி கட்டியதுதான் இந்தக் கோயில். ஒருகாலத்தில் ரொம்ப பிரசித்தியுடன் திகழ்ந்த கோயில் என்று ஊர்ப் பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். அப்படி பிரசித்தியுடன் திகழ்ந்த இந்தக் கோயிலில் புதர் மண்டி, கொஞ்சம் கொஞ்சமாக சிதிலமடையத் தொடங்கவே, சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு பாலாலயம் செய்து திருப்பணிகளைத் தொடங் கினோம். ஆலயம் ரொம்பப் பெரியது என்பதால், திருப்பணிக்கு நிறைய பொருளுதவி தேவைப் பட்டது.

ஆலயம் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், நாங்கள் அவர் களைச் சந்தித்தோம். இந்துசமய அறநிலையத் துறையின் சார்பில் ராஜகோபுரமும், அம்பாள் சந்நிதியும் கட்டித் தருவதாகக் கூறி, அப்படியே கட்டிக் கொடுத்திருக்கிறார்கள்.

மற்றபடி ஸ்வாமி சந்நிதி, கருவறை விமானம், மூன்று கோபுரங்கள், மதில்சுவர் என்று பல திருப்பணிகளை உபயதாரர்களின் உதவியுடனும், அன்பர்களின் நன்கொடை கொண்டும் செய்து வருகிறோம். இன்னும் மூன்று கோபுரங்கள், மதில் சுவர் போன்ற பணிகள் இருக்கின்றன.

இந்த அளவுக்கு திருப்பணிகள் நிறைவேற அருள்புரிந்த இறைவன், மற்ற திருப்பணிகளும் நிறைவேற நிச்சயம் அருள்புரிவார் என்ற நம்பிக்கையுடன், மே மாதம் 7-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்திவிட முடிவு செய்து, அறநிலையத் துறையின் அனுமதி பெற்றுவிட்டோம். பத்திரிகைகூட அச்சடித்துவிட்டோம். அந்த அளவுக்கு இறைவன் கயிலாயநாதரிடம் நாங்கள் பக்தியும் நம்பிக்கையும் வைத்திருக்கிறோம். எப்படியும் திருப்பணிகள் நிறைவேறி, குறிப்பிட்ட தேதியில் கும்பாபிஷேகம் நடைபெற, ஐயன் அருள்புரிவார்’’ என்று பக்தி கலந்த நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

செம்பியன்மாதேவி தலத்தில் அருளாட்சி புரியும் இறைவனிடம் அவர்கள் கொண்டிருக்கும் பக்தி, அவர்களுடைய நம்பிக்கையைக் காப்பாற் றும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், ‘முயற்சி திருவினையாக்கும்’ என்றபடி, ஐயனின் திருக் கோயில் திருப்பணிகள் நிறைவு பெற்று, விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற நாமும் நம்மால் இயன்ற நிதியுதவியை செய்ய வேண்டியது நம்முடைய கடமை அல்லவா?

நமக்கெல்லாம் நாளும் அருளும் ஐயனின் திருக்கோயில் திருப்பணிகள் பூர்த்தி அடைந்து விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற, நம்மால் இயன்ற பொருளுதவியைச் செய்து, குறிப்பிட்ட நாளில் கும்பாபிஷேகம் நடைபெற துணை நிற்போம்.

சிறந்த சிவபக்தரும் திருவிசைப்பா அருளியவரு மான கண்டராதித்த சோழரின் பட்டமகிஷியான செம்பியன்மாதேவி, தானும், தனக்குப் பின்வரும் சந்ததியினரும் மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரும் காலமெல்லாம் வழிபட்டு நலம் பெற வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் எழுப்பிய ஐயன் கயிலாயநாதர் திருக்கோயில் திருப்பணிக்கு நம்மால் இயன்ற பொருளுதவி செய்வோம்.

‘அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே’ என்றெல்லாம் மாணிக்கவாசகர் போற்றிய ஐயன் கயிலாசநாதர், நமக்கும் நம் சந்ததியினருக்கும் அளவற்ற வளங்களை அருள்புரிவார் என்பது உறுதி.

Leave a Reply