இசையும் இனிய மருந்தே!
இசை என்பதே இப்பூவுலகின் அசைவு…’. இசை பற்றி எழுதப்பட்ட கவிதை இது.
பல வடிவங்களில், பல மொழிகளில் நம்மை ஈர்க்கும் ஒரு விஷயமாக மாறியிருக்கிறது இசை. இன்றைய நவீன யுகத்தில், நோய்கள் பல தீர்க்கும் ஒரு சிகிச்சை முறையாகவும் இசை விளங்குகிறது. `மியூசிக் தெரபி’ எனப்படும் அந்தச் சிகிச்சையில், இசையே மருந்து. கேட்கும்போதே நம்மை ஈர்க்கும் இந்தச் சிகிச்சை முறை பற்றி அறிவோமா…?
மியூசிக் தெரபி
இன்றைய மருத்துவ உலகில், நோயாளிகளுக்குத் தரப்படும் மருந்து மாத்திரைகளுக்கு மாற்றாக மெல்லிய, நல்ல இசையை வழங்கி சிகிச்சை அளிக்கிறது மியூசிக் தெரபி. உளவியல் அடிப்படையில் ஒருவரை அவரது நோயின் ஆபத்திலிருந்து மீட்டெடுப்பதே இந்தச் சிகிச்சையின் சிறப்பு. மியூசிக் தெரபியை உளவியல் மற்றும் இசை குறித்த விஷயங்களில் வல்லுநராக இருக்கும் ஒருவராலேயே செய்ய முடியும்.
யாருக்கு தெரபி?
உளவியல் மற்றும் உடல்ரீதியாகப் பாதிக்கப்படுவோருக்கு மியூசிக் தெரபி தரப்படுகிறது. ஓ.சி.டி (Obsessive compulsive disorder (OCD) எனப்படும் மன சுழற்சி நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு அவர்களது எண்ணங்களில் இருந்து விடுபடவும், அவர்களது எண்ண ஓட்டத்தைத் திசை திருப்பவும் `மியூசிக் தெரபி’ அளிக்கப்படுகிறது. குழந்தையின் வளர்ச்சிக்காக, கர்ப்பிணிகளுக்கும் ஆட்டிசம், ஏ.டி.ஹெச்.டி. (ADHD) போன்ற குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கும் மியூசிக் தெரபி தரப்படும். இதனால் அவர்களது சில நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்படும். தூக்கமின்மை மற்றும் மனச்சோர்வால் ஏற்படும் டிமென்ஷியா போன்ற பாதிப்பு உள்ளவர்களுக்கும் `மியூசிக் தெரபி’ தரப்படுகிறது.
என்ன நன்மை?
மனஅழுத்தம், பதற்றம் போன்ற உளவியல் காரணங்களிலிருந்து ஒருவர் விடுபட `மியூசிக் தெரபி’ வழிவகுக்கும். இதுபோன்ற சூழலில் அவர்களுக்குப் பிடித்தமான இசை எது? அவர்கள் எண்ணத்துக்குப் புத்துணர்ச்சி ஊட்டுவது எது என்பவை கண்டறியப்பட்டு, அதுவே பரிந்துரைக்கப்படும்.
‘யாரோ ஒருவர் என் காதில் பேசிக்கொண்டே இருக்கிறார்’ என்று சொல்லும் ஒருவகைப் பாதிப்பு உள்ள நோயாளிகள் இருக்கிறார்கள். இப்படிப் பட்டவர்களின் எண்ணங்களைத் திசை திருப்ப வேண்டியது அவசியம். மன அமைதியைக் கொடுக்கும் இசையைக் கேட்கும்போது, அவர்கள் அதிலிருந்து விடுபடுவர்.
கர்ப்பிணிகளுக்கு…
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு `மியூசிக் தெரபி’ கொடுக்கும்போது, அவர்கள் உடலில் இருக்கும் உயர் ரத்த அழுத்தம் சீராக்கப்பட்டு, பதற்றம் தவிர்க்கப்படும். அது குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வழிவகுக்கும். மேலும், தூக்கமின்மையால் பாதிக்கப்படுபவர்கள், நல்ல இசையைக் கேட்கும்போது ஆழ்ந்த உறக்கம் கொள்வர். இப்படிப்பட்ட சூழலில், மெலடி எனப்படும் மெல்லிய இசையே சிறந்தது.
மறதிநோய் (அல்ஸைமர்) எனப்படும் ஒருவகைக் குறைபாடு உள்ளவர்கள், வீட்டில் இருக்கும் இடங்களைக்கூட மறந்துவிடுவார்கள். ஏன், குடும்பத்தினரைக்கூட மறந்துவிடுவார்கள். மூளை சுருங்கிப்போவதால் இந்தப் பிரச்னை வரும். சிறு சிறு விஷயங்களையும் மறக்கும் இயல்புடைய இவர்கள், பிடித்த இசையைக் கேட்கும்போது, பழைய நினைவுகள் திரும்ப வாய்ப்பு உள்ளது. இதனால், நோயின் பாதிப்புகளிலிருந்து அவர்களை மீட்க முடியும்.
பாப் இசை
மியூசிக் தெரபியைப் பொறுத்தவரை, சம்பந்தப்பட்ட நோயாளி எத்தகைய தீர்வை நோக்கி இருக்கிறார் என்பதே பார்க்கப்படும். உதாரணமாக, எண்ணச்சிதறல் போன்ற பிரச்னைகளுக்கான தீர்வை நோக்கி வருபவர்கள், தவறான எண்ண அலைகளிலிருந்து விடுபட நினைப்பவர்கள், உடல் வலியால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் போன்றோருக்குப் பிடித்த இசை தெரபி மூலம் சிகிச்சை தரப்படும். சிலருக்கு கர்னாடக இசை பிடிக்கலாம். வேறு சிலருக்கு பாப் ரக இசை பிடிக்கலாம். அவரவர் மனதுக்கு ஏற்பவே இசை பரிந்துரைக்கப்படும். மழையின் ஓசை, அலையின் ஓசை போன்றவையும் பரிந்துரைக்கப்படும்.