இடது கை பழக்கம் இயல்பானதா? குற்றமா?
நம்மில் பெரும்பாலானோர் வலது கையைத்தான் அதிகம் பயன்படுத்துகிறோம். சிலர் மட்டும் அனைத்து செயல்களுக்கும் இடது கையைப் பயன்படுத்துவார்கள். அப்படி இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் நமது குடும்பத்தில் இருக்கலாம். நட்பு வட்டத்தில் இருக்கலாம்.
இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள்
பொதுவாக இடதுகைப் பழக்கம் உள்ளவர்களை சற்று வித்தியாசமாகப் பார்க்கும் நிலை இருக்கிறது. அதேபோல அவர்களின் நலம் சார்ந்து, அவர்களின் வசதிக்கு ஏற்ப எந்த பொருளும் பயன்பாட்டுக்கு வருவதில்லை. வலது கை பயனாளிகளின் மனநிலைக்கு ஏற்பவே தயாரிக்கப்படுகின்றன. இதனால் இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் பல சவால்களைச் சந்திக்கிறார்கள். எழுதுதல், வாகனம் ஓட்டுதல் முதல் அன்றாடம் வீட்டுத் தாழ்ப்பாள் திறப்பது வரை அவர்களின் இயல்புக்கு மாறான செயலாகத்தான் இருக்கின்றன.
இடது கை பழக்கம் உள்ளவர்களை ‘சினிஸ்ட்ராலிட்டி’ என்று குறிப்பிடுவார்கள். இது ’சினிஸ்டரா’ என்ற லத்தின் சொல்லில் இருந்து உருவானது. ‘சினிஸ்டரா’ என்றால் ‘இடது பக்கம் இருப்பது’ என்று பொருள். இடது கை பழக்கம் உள்ளவர்களை வலிமையற்றவர்களாகவும் தூய்மையற்றவர்களாகவும் எதிர்மறை எண்ணம் கொண்டவர்களாக கருதும் மனோபாவம் இன்னும் இங்கே இருக்கிறது.
இந்த சமூகத்தில் இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் சந்திக்கும் சிரமங்களை மற்றவர்கள் உணரும் வகையில் விழிப்பு உணர்வை ஏற்படுத்த ‘சர்வதேச இடது கை பழக்கம் உள்ளவர்கள் தினம்’ ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
எதனால் இந்த இடக்கை பழக்கம்!
நமது மூளை பெருமூளை, சிறுமூளை மற்றும் ’மெடுல்லா ஆப்லங்கட்டா’ என மூன்று பகுதிகள் உள்ளன. இதில் பெருமூளையில், வலது மற்றும் இடது என இரண்டு பாகங்கள் உண்டு. இந்த இரண்டு பாகங்கள்தான் நம் உடலின் அனைத்து செயல்களையும் கட்டுப்படுத்துகின்றன. வலது பக்க மூளை இடது புற உடலையும், இடது பக்க மூளை வலது புற உடலையும் கட்டுப்படுத்தும். நம்மில் பலருக்கு இடது பக்க மூளை அதிக செயல்பாட்டில் இருப்பதால்தான் வலது கையை அதிகம் பயன்படுத்துகிறோம். சிலருக்கு, வலது பக்க மூளை செயல்படுவதால் இடது கை பழக்கம் ஏற்படும். இது மிகவும் இயல்பானது.
இடது கையால் எழுதும் குழந்தை
இடக்கை பழக்கத்தை மாற்றினால்!
சிலர் இடது கையால் கொடுத்தால் எந்தப் பொருளையும் பெற்றுக் கொள்ளமாட்டார்கள். இடது கையால் கொடுக்கப்படும் பொருள் மதிப்பற்றது, அவமதிப்பானது என்று ஒரு கற்பிதம் இருக்கிறது. சிலர் தங்கள் குழந்தைக்கு இடதுகைப் பழக்கம் இருந்தால், வலுக்கட்டாயமாக வலது கை பழக்கமாக மாற்ற முயற்சி செய்வார்கள். தங்களை அறியாமல் இடது கையை அவர்கள் பயன்படுத்தும் போது அடிப்பது, திட்டுவது, அவமானப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.
இது போன்ற செயல்கள். குழந்தைகளின் வளர்ச்சியில் குறைபாட்டை ஏற்படுத்தும். பார்வைக் குறைபாடு, பேசுவதில் குழப்பம் போன்றவற்றை ஏற்படுத்தும் என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், கையெழுத்து சிதைவதுடன் பல நடத்தை மாற்றங்களையும் ஏற்படுத்தும். இடதுகைப் பழக்கம் என்பது மிகவும் இயல்பானது என்ற எண்ணம் எல்லோருக்கும் வரவேண்டும்.
இடக்கை பழக்கம் உள்ள பிரபலங்களின் பட்டியல்…
தேசத்தந்தை மகாத்மா காந்தி, நெப்போலியன் போனாபர்ட் மற்றும் அவரது மனைவி ஜோசப்பின், ஜூலியஸ் சீசர், மாவீரன் அலெக்ஸாண்டர், தத்துவமேதை அரிஸ்டாட்டில், பிரிட்டன் பிரதமராக இருந்த வின்சென்ட் சர்ச்சில், சாரணர் இயக்கத்தைத் தோற்றுவித்த பேடன்பாவெல், கியூபா அதிபராக இருந்த பிடல் காஸ்ட்ரோ, விஞ்ஞானி ஆல்பிரட் ஐன்ஸ்டீன், ஃபோர்டு கார் நிறுவனத்தின் தந்தை ஹென்றி ஃபோர்டு, இங்கிலாந்து மன்னராக இருந்த 3-வது மற்றும் 8-வது எட்வர்ட், 2-வது, 4-வது மற்றும் 6வது ஜார்ஜ் போன்ற ஆளுமைகள்
இட கை பழக்கம் உள்ள பிரபலங்கள்
இடதுகைப் பழக்கம் உள்ளவர்களே!
மேலும், அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன், ஜெரால்ட் ஃபோர்ட், ஜேம்ஸ் கார்ஃபில்ட், தாமஸ் ஜெபர்சன், ரொனால்ட் ரீகன், ஹாரி ட்ரூமென் மற்றும் ஒபாமா, இந்திய பிரதமர் மோடி, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகர்கள் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக்பச்சன்,மம்முட்டி, அப்பாஸ், நிவின் பாலி, நடிகை சன்னி லியோன், என இந்தப் பட்டியல் நீள்கிறது.
இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் சந்திக்கும் பிரச்னைகள்…
இடது கையால் பொருள்களையோ பிரசாதத்தையோ வாங்கிக்கொள்வது பெரியவர்களின் முகச்சுழிப்பை ஏற்படுத்தும். இடது கையால் உணவு உண்பவர்களை, ஒரு விநோத உயிரினத்தைப் பார்ப்பதுபோல் பார்ப்பர். உடன் அமர்ந்து உண்பதை அசெளகர்யமாக உணர்வர். இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் எழுதுதல், வரைதல் போன்ற செயல்கள் கைகளை கறைபடியச்செய்யும். அனைத்து இடங்களிலும் வலது கை பழக்கம் உள்ளவர்கள் பயன்படுத்துவதற்கு ஏற்றார்போல் பொருள்கள் பொறுத்தப்பட்டிருக்கும். அது சில சமயங்களில் எரிச்சலை உண்டாக்கும். இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் தனது நண்பருடன் கை குலுக்குதல், கை தட்டிக்கொள்ளுதல் போன்ற மகிழ்ச்சியான செயல்களை செய்வதில் குழப்பமும் தாமதமும் ஏற்படும். இடக்கை பயனாளர்களுக்கான பொருள்கள் கிடைப்பது மிகவும் அரிதானது; மேலும், அவற்றின் விலையும் சற்று அதிகம்தான்.
இடக்கையால் எழுதுவது
இடதுகைப் பழக்கம் உள்ளவர்களின் தனித்தன்மை!
இடதுகைப் பழக்கம் உள்ளவர்களின் தனித்தன்மையை வலது பக்க மூளைச் செயல்பாட்டின் பலன்கள் என்றே சொல்லலாம்.
நீண்ட நாள்களுக்கு முன் பார்த்த இடத்தையும் நபரையும் நினைவில் வைத்திருப்பர். வலது கை பழக்கம் உள்ளவர்களை விட இந்த நினைவாற்றல் சக்தி இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு அதிகம். இசை, ஓவியம் போன்ற கலைகளில் அதிக ஆர்வம் கொண்டிருப்பர். கற்பனைத்திறன் மிக்கவர்களாக இருப்பர். பார்வைத்திறன் அதிகம் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இடக்கை பழக்கம் உள்ளவர்களுக்கு அல்ல… அவர்களைச் சுற்றி உள்ளவர்களுக்கு!
குழந்தைகள் பயன்படுத்தும் கை எதுவாக இருப்பினும் அவற்றை மாற்ற முயற்சி செய்யாது, அவர்களின் மீது நம்பிக்கை வைத்து ஊக்குவிக்கவேண்டும். அது அவர்களின் திறமையை ஊக்குவிக்கும். வலுக்கட்டாயமாக குழந்தைகளின் இயல்பான பழக்கத்தை மாற்ற முயற்சி செய்யாதீர்கள். வலுக்கட்டாயமாக மாற்ற முயற்சித்தால் அந்த பழக்கம் மாறாது. மாறாக, அதிகரிக்கும்.
பள்ளிகளில், கல்லூரிகளில், நண்பர்களிடையே இடதுகைப் பழக்கத்தை வைத்து பட்டப் பெயர் வைத்துக் கூப்பிடாதீர்கள். அது அவர்களுக்கு மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும். அவர்களிடம் சகஜமாக இருக்க முயலுங்கள்.