இடைக்கால நிதியை கூட பெற முடியவில்லையா? டிடிவி தினகரன்
மத்திய அரசுடன் இணைக்கமாக இருப்பதாக கூறி வரும் ஆளும் அதிமுக அரசு, கஜா புயல் பாதிப்பிற்கு இடைக்கால நிவாரண நிதியைக் கூட பெற முடியவில்லை என அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:
கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பலவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தங்கள் வாழ்வாதாரத்தை இந்தப் புயலால் இழந்து நிற்கிறார்கள் டெல்டா மக்கள்.
அனைத்தையும் இழந்து பாதிக்கப்பட்டு, வேதனையுடன் இருக்கும் மக்களுக்கு ஆறுதல் சொல்லக் கூட அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும், ஆளுங்கட்சியினரும் வரவில்லையே ஏன்?
நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவும் குடிநீரும் போதிய அளவு தரவேண்டியது மிகவும் அவசியம் அல்லவா. பல இடங்களில் உணவு கொடுக்கப்பட்டிருக்கிறது,ஆனால் குடிநீர் வழங்கப்படவில்லை.
எதுவுமே கிடைக்காத நிலையில், தங்கள் உடைமைகளை மட்டுமின்றி தங்களின் வாழ்வாதாரத்தையே இழந்து நிற்கும் மக்கள், போராட்டங்களில் ஈடுபட்டால், அவர்களை கைது செய்வது என்ன நியாயம்?