இடைத்தேர்தலில் நவாஸ் ஷெரீப் மனைவி வெற்றி: பாகிஸ்தான் பிரதமர் ஆவாரா?
சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் நீதிமன்றத்தால் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று லாகூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அவருடைய மனைவி வெற்றி பெற்றுள்ளார். இதனால் அவர் பாகிஸ்தான் பிரதமர் ஆகும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
லாகூர் இடைத்தேர்தலில் நவாஸ் ஷெரீப் மனைவி குல்சூம் நவாஸ் உள்பட 44 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 3 லட்சத்திற்கு மேற்பட்டோர் வாக்களித்த நிலையில் இன்று காலை வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் குல்சூம் நவாஸ், 59,413 வாக்குகளும் அவரை எதிர்த்து போட்டியிட்ட ரசீத், 46,145 வாக்குகளும் பெற்றனர். எனவே குல்சூம் சுமார் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தனது தாயாரின் வெற்றி குறித்து குல்சூம் மகள் மரியம் கூறியதாவது: இந்த தொகுதி மக்கள் நவாஸ் செரீப் மீதான அன்பை வெளிகாட்டியுள்ளனர். இது எதிர்கட்சியினர் அழுவதற்கான நேரம். கடவுளுக்கு லட்சம் முறை நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தேர்தல் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சிக்கும் மற்றும் அனைவருக்கும் எதிராக நடந்தது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மக்கள் நிராகரித்துள்ளனர். நவாஸ் செரீப் தான் இன்னும் மக்களின் பிரதமர் என்பதை மக்கள் உணர்த்தியுள்ளனர்.