இணையத்தில் ஆங்கிலத்தை விஞ்சிய மாநில மொழிகள்… காரணம் ஜியோவா?

இணையத்தில் ஆங்கிலத்தை விஞ்சிய மாநில மொழிகள்… காரணம் ஜியோவா?

இன்றைய உலகில் அனைத்திற்கும் ஆங்கில வடிவம் இருந்தால் தான் மக்கள் விரும்பி வாங்குகிறார்கள் என்ற எண்ணம் பரவலாக நிலவி வருகிறது. ஆனால், அந்த எண்ணம் முற்றிலும் தவறு, பிராந்திய மொழிகளுக்கு தான் மவுசு அதிகம் என்பதை உறுதிச் செய்கிறது. “Indian Languages: Defining India’s Internet” என்ற கட்டுரை. இதில் இந்திய மொழிகளில் இணையதள தகவல்கள் எவ்வளவு படிக்கப்படுகின்றன என்ற முழுமையான புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது. இன்று இந்தியாவில் 23 கோடியே 40 லட்சம் மக்கள் இந்திய மொழிகளில் இணையதளங்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் ஆங்கிலத்தில் 17 கோடியே 50 லட்சம் மக்கள் மட்டுமே பயன்படுத்திடுகிறார்கள். இதற்கு காரணம் 2011 முதல் 2016 வரை பிராந்திய மொழிகளில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஆண்டிற்கு 41 விழுக்காடு உயர்ந்தது தான்.

அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை ஆண்டிற்கு 18 விழுக்காடு உயர்ந்து 53 கோடியே 60 லட்சமாக உயரும். ஆனால் ஆங்கிலத்தில் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஆண்டிற்கு 3 விழுக்காடு மட்டுமே உயர்ந்து 19 கோடியே 90 லட்சமாக உயரும். 2021ல் இந்தியாவில் 75 விழுக்காடு இணையத் தகவல்கள் இந்திய மொழிகளிலேயே படிக்கப்படும். பகிரப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் புதிதாக இணையத்தை பயன்படுத்தத் தொடங்குபவர்களில் பத்தில் ஒன்பது பேர் இந்திய மொழிகளிலேயே பயன்படுத்துவர். இந்திய மொழிகளில் செய்தி தொடர்பில் 17 கோடி, இணைய பொழுதுபோக்கில் 16.7 கோடி, சமூக வலைதளங்களில் 11.5 கோடி, இணைய செய்திகளில் 106 கோடி என்ற எண்ணிக்கை 2021ல் முறையே 39.6,39.2,30.1,28.4 கோடியாக உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கூகுளின் இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளின் துணை தலைவர் ராஜன் ஆனந்தன் இது பற்றி கூறுகையில்,

“இந்தியாவில் இணையத்தில் ஆங்கிலத்திற்கான ஆயுள் முடிந்து வருகிறது. இந்தியாவில் ஆங்கிலம் தெரிந்த 20 கோடி மக்களும் இணையத்தில் இருக்கிறார்கள். புதிதாக சேரும் நபர்களில், 90 விழுக்காடு மக்கள் ஆங்கிலத்தை விட இந்திய மொழிகளையே விரும்புகிறார்கள். கிட்டத்தட்ட இணையத்தின் வளர்ச்சி இந்திய மொழி வாசகர்களை நம்பியே உள்ளது. இந்திய மொழிகளில் இணையத்தை பயன்படுத்துவோரில் 99 விழுக்காடு போன்களின் மூலம் தான் பயன்படுத்துகிறார்கள். மொத்த இணைய பயன்பாட்டில் போன்களின் பங்கு 78 விழுக்காடு. இதை அதிகரிக்க 2000 முதல் 3000 ரூபாய்க்குள் தரமான ஸ்மார்ட் போன்கள் தேவை” என்றார்.

எப்படி நடந்தது இந்த வளர்ச்சி ?

மேலும் ஆராய்ந்து பார்க்கையில் ஜியோ நிறுவனம் அளித்த இலவச டேட்டா வசதி மக்களிடம் இணையச் சேவையை மேலும் ஒரு படி அருகே எடுத்து சென்றுள்ளது. அது மட்டுமல்லாமல், ஜியோவின் வருகையால் மற்ற நிறுவனங்களும் விலையை குறைத்தனர். இதுவும் இணையப் பயன்பாட்டை அதிகரித்தது. இதன் பின்னால் இவ்வளவு இருக்கிறதா என்று வியாக்காதீர்கள். இதைத் தவிர ஸ்மார்ட் போன்களின் விலைக் குறைவு, கிராமப்புறங்களில் மேம்பட்டு வரும் இணையச் சேவை, இணையங்களில் இந்திய மொழிகளுக்கு மொழி பெயர்க்கும் வசதி என்று ஒரு பெரிய சந்தையே இருக்கின்றது.

அதிகம் பயன்படுத்தப்படும் மொழி தமிழ்!

தமிழ், ஹிந்தி, கன்னடா, பெங்காலி, மராத்தி, தெலுங்கு, குஜராத்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் தான் இணையம் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மகிழ்ச்சிக்குரிய தகவல் என்னவென்றால், இணையத்தில் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளில், அதிகம் பயன்படுத்தப்படுவது தமிழ் தான். இணைய பயன்பாட்டில் தமிழில் 42 விழுக்காடு மொழிப்பெயர்ப்பு நடக்கின்றது. ஹிந்தியிலோ 39 விழுக்காடு நடைபெறுகிறது. இணைய மொழி வளர்ச்சியில் தமிழும் கன்னடாவும் 74 விழுக்காடுடன் முதல் இடத்தை பிடிக்கின்றன. ஹிந்தி 54 விழுக்காடு. இதனால் இந்திய மொழிகளில், தமிழுக்கும் கன்னடாவிற்கும் தான் வளர்ச்சிக்கான சந்தை பெரிய அளவில் உள்ளது என்று கூறலாம்.

2021ல் மராத்தி, பெங்காலி, தமிழ் ஆகிய மொழிகள் இந்திய மொழி இணைய பயன்பாட்டில் 30 விழுக்காடு வகிக்கும். மற்றொரு சுவாரசியமான தகவல் என்னவென்றால், நகர்ப்புற மக்களை விட கிராமப்புற மக்கள் இணையத்தில் அதிக நேரம் செலவு செய்கிறார்கள்.

விளம்பரங்கள்

இந்திய மொழி பயன்படுத்துபவர்களில் 12 விழுக்காடு மட்டுமே ஆங்கில விளம்பரங்களுக்கு பதிலளிக்கிறார்கள். மீதம் உள்ள 88 விழுக்காடு மக்கள் இந்திய மொழி விளம்பரங்களுக்கே பதிலளிக்கிறார்கள்.

Leave a Reply