இணையத்தில் டைரி எழுத வேண்டுமா? இதோ ஒரு வழி
அனேகமாக அனைவரிடமும் டைரி எழுதும் பழக்கம் தற்போது நின்றுவிட்டது. அதனை இணையத்தின் மூலம் மீண்டும் தொடர வேண்டுமா? அப்படியெனில் இதை படியுங்கள்
ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அதிக நேரத்தை வீணாக்குகிறோம் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? சமூக ஊடகங்களில் நிலைத்தகவல்களை வெளியிடும் வழக்கம் மிகைப் பழக்கமாக மாறிவிட்டதாக உணர்கிறீர்களா? இவற்றிலிருந்து விடுபட என்ன வழி என யோசிக்கிறீர்களா? அப்படியெனில், ‘டேடிப்’ (https://daydip.com/ ) எனும் இணைய சேவையைப் பயன்படுத்திப் பார்க்கலாம்.
‘டேடிப்’ சேவை உங்களுக்கு ஏற்புடையதாக இருந்தால், சமூக ஊடக மோகத்துக்கான மாற்றாக இதைப் பயன்படுத்தத் தொடங்கலாம். ‘டேடிப்’ சேவையை இன்னொரு சமூக ஊடக சேவையாகவோ ஃபேஸ்புக்குக்குப் போட்டி என்றோ நினைக்க வேண்டாம். சமூக ஊடக சேவைகளில் உள்ள விரிவான வசதிகள் எல்லாம் இதில் கிடையாது. இது மிக எளிதான சேவை. இணைய டைரி சேவையின் கீழ் ‘டேடிப்’ வருகிறது. இந்த சேவை மூலம் இணையத்தில் நீங்கள் டைரி எழுதி பராமரிக்கலாம்.
இணைய டைரி
‘டைரி இறந்துவிட்டது; இப்போது ‘டிப்’ செய்வதுதான் வழி’ – இதுதான் ‘டேடிப்’ தளத்தின் அறிமுக வாசகம். இந்தத் தளம் டைரிக் குறிப்புகளை எழுதவே வழி செய்கிறது. இதைக் கொஞ்சம் புதுமையாகக் செய்ய வழிசெய்திருக்கிறது.
டைரி என்றதும் அதன் தேதியிட்ட பக்கங்களும் அதில் எழுதும் குறிப்புகளும் நினைவுக்கு வரும். இந்த சேவையில் தேதியிட்ட குறிப்புகளை எழுத வேண்டாம். மாறாக, மன உணர்வுகளைச் சிறு குறிப்புகளாகப் பதிவுசெய்யலாம். இதைத்தான் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் பதிவு செய்யுங்கள் என இந்தத் தளம் வர்ணிக்கிறது.
இந்தத் தளத்தில் முதலில் உறுப்பினராகப் பதிவுசெய்துகொள்ள வேண்டும். பின்னர் தினந்தோறும் மனநிலையைப் பதிவுசெய்யலாம். புதிய ‘டிப்’பை உருவாக்கலாம். அதாவது, உங்களுக்கான பதிவை உருவாக்கலாம். பதிவை உருவாக்கும்போது, மன நிலையைப் பிரதிபலிப்பதற்கான ஸ்மைலி பட்டியல் தோன்றுகிறது. அவற்றிலிருந்து உணர்வை வெளிப் படுத்தக்கூடிய ஸ்மைலியை தேர்வு செய்துவிட்டு, அன்றைய மனநிலையை வார்த்தைகளாகப் பதிவுசெய்யலாம்.
எண்ணங்களை எழுதலாம்
பின்னர், உங்கள் மனநிலைக்குப் பொருத்தமான வார்த்தைகளைக் குறிச்சொற்களாகச் (டேக்) செய்யலாம். தேவையெனில், இதனுடன் ஒளிப்படத்தையும் இணைக்கலாம். அவ்வளவுதான், பதிவை வெளியிட்டுவிடலாம். இந்தப் பதிவை குறித்து வைத்துக் கொள்ளலாம். இல்லையெனில் பின்னர் நீக்கிவிடலாம். அவ்வளவுதான் இந்த சேவை. ஒவ்வொரு நாளும் இப்படி உணர்வுகளை இந்தத் தளத்தின் மூலம் பதிவுசெய்து வரலாம். பதிவுகள் அனைத்தையும் ‘மைடிப்ஸ்’ பகுதியில் காணலாம்.
இந்தத் தளத்தில் நண்பர்கள் பட்டியல், விருப்பங்கள், பகிர்வுகள் எதுவும் கிடையாது. மனதில் உள்ள எண்ணங்களை முகம் தெரியாத இணைய நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.
இந்தத் தளம் அறிமுக நிலையிலேயே உள்ளது. இதன் பின்னே பெரியதொரு இணைய சமூகம் உருவாகுமா எனத் தெரியவில்லை. ஆனால், இதன் ஆதார சேவை ஈர்க்கிறது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், இணையத்தில் ஒரு காலத்தில் பெரிதாகப் பேசப்பட்ட ‘லைப்லாகிங்’ சேவையின் கீழ் இந்தத் தளம் வருகிறது. சாதனைகள், மைல்கற்கள் என்றெல்லாம் பார்க்காமல், சாமானியர்கள் தினசரி வாழ்க்கை நிகழ்வுகளை, சம்பவங்களை இணையத்தில் பதிவுசெய்வதே ‘லைப்லாகிங்’. ‘லைப்லாக்’ என்றால், மனித வாழ்க்கையின் கால வரிசை அடிப்படையிலான விரிவான பதிவு எனலாம். இதில் தரவுகளும் அதிகம். இப்படி வாழ்க்கையைப் பதிவு செய்பவர்களே ‘லைப்லாகர்கள்’.
மாற்றம் தரலாம்
உடலிலேயே அணியக்கூடிய அணிகணிணி சாதனங்கள் அல்லது மொபைல் போன் மூலம் திரட்டப்படும் தரவுகளையும் தகவல்களையும் பதிவுசெய்வதும் இதன் கீழ் வருகிறது. அணிகணிணிகள் சார்ந்த சாதனங்கள் நடைமுறை வாழ்க்கையில் பெரிய அளவில் ஊடுருவாததால் இந்த வகைப் பதிவுகள் வெகுஜனமயமாகவில்லை. அதற்குள் சமூக ஊடகங்கள் பிரபலமானதால் பெரும்பாலான இணைய வாசிகள் நிலைத்தகவல்களின் பக்கம் சாய்ந்துவிட்டனர்.
ஆனால், தற்போது மாற்று சேவைகளுக்கான தேவையும் எழுந்திருக்கிறது. இந்த வகையில் மிக எளிய வடிவமாக ‘டேடிப்’ தளம் தோன்றுகிறது. வைரல், லைக்குகள் போன்ற எதிர்பார்ப்புகள் இல்லாமல், டைரிக் குறிப்பு எழுதுவதுபோல நினைப்பவர்களுக்கு நல்லதொரு மாற்றாக இது இருக்கும் என எதிர்பார்க்கலாம்.